நான் கரிசல் காட்டுப் பொண்ணு…” தமிழச்சி தங்கபாண்டியனுடன் நேர்காணல்”

பார்ப்பதற்குப் பளிச்சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அதே போன்று வாழ்க்கைச் சுழற்சியில் பேராசிரியை, இலக்கியவாதி, அரசியல்வாதி, நாடகப் பயிற்சியாளர், பரத கலைஞர், மேடைப் பேச்சாளர், குடும்பத் தலைவி என்று பன்முகங்கள் கொண்டவர் தமிழச்சி தங்கபாண்டியன். எழுத்து மீது, மொழி மீதிருந்த காதலில் இவர் சுமதி என்ற தன் பெயரை ‘தமிழச்சி’ என்று மாற்றிக் கொண்டவர்.

கிராமத்து வாசனையுடன் விருந்தினரை உபசரிக்கும் விதம் அவர் வளர்ப்பு முறைக்கு ஆதாரமாய் இருக்கிறது. பேச்சில் பல தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வதைப் பார்க்கும் போது, திருநெல்வேலியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் கலைஞர் தமிழச்சியைக் கொடியேற்றம் செய்ய வைத்தது சரியான தேர்வு என்று புலப்படுகிறது.

இப்படிப் பல பரிமாணங்கள் எடுத்திருக்கும் தமிழச்சியுடன் ஒரு மதிய வெயிலிற்கு இதமான கிராமத்துப் பானமான மோருடன் ஆரம்பித்தது அந்தக் குளுகுளு சந்திப்பு. நூலகமே வீடாக இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் அவரை இந்த உயரத்துக்கு ஏற்றிய புத்தகங்கள் ஏற்ற இறக்கங்களில் அடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகங்களுக்கு நடுவில் மலர்ச்சியாகச் சிரிக்கிறார் இந்த மறுமலர்ச்சிப் பெண்ணான தமிழச்சி.

உங்கள் வாழ்க்கைப் பயணம் எங்கு ஆரம்பித்தது?

சுமதியாகக் கரிசல் மண்ணில் சுற்றித் திரிந்த நாட்கள் இன்னும் எனக்குள் பொக்கிஷமாய் இருக்கின்றன. பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற சிறு கிராமம். இன்றும் என்னை நகரத்துப் பெண்ணாக அடையாளப்படுத்திக் கொள்கிறதை விட புழுதி மண் புரளும் கிராமத்துத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நையாண்டி பேசும் அந்த வெகுளித் தனமான வாழ்க்கையில் ஏதோ பெரிய சுவாரஸ்யம் புதைந்திருப்பதாக உணர்கிறேன்.

பள்ளிப் படிப்பை விருதுநகரில் முடித்துவிட்டு கல்லூரிப் படிப்பிற்கு மதுரைக்குச் சென்றேன். ஆங்கில இலக்கியத்தில் பி.ஹெச்.டி. முடித்துவிட்டு குயின் மேரிஸ் கல்லூரியில் பேராசிரியை என்பது என் தினசரி வாழ்க்கையாகிப் போனது. சமூகத்தின் மீது உள்ள அக்கறை, எழுத்தார்வம், மொழி பெயர்ப்பு, நாடகப் பயிற்சியாளராய், பரத கலைஞராய், கவிஞராய், அரசியல் ஆர்வலராய் மாற்றியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கிராமத்தை விட்டு சென்னைக்கு வரும் போது பெரிய எதிர்பார்ப்புகளோடும் வழக்கமாக நகரத்தின் மீதுள்ள ஈர்ப்போடும்தான் வந்தேன். ஆனால் எனக்கு இன்றும் நகரத்து வாழ்க்கை சிறிதளவு கூடப் பிடிக்கவில்லை.

உங்கள் எழுத்துப் பயணம் எங்கிருந்து புறப்பட்டது? தமிழச்சி என்ற பெயர் மாற்றம் ஏன்?

மதுரை தியாகராயர் கல்லூரியில் முதுகலை இலக்கியம் படித்தேன். இலக்கியங்களைப் பற்றியும் நவீன இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் பெரிய வாய்ப்பாய் அமைந்தது. அங்கு தான் எனக்குள் இருந்த எழுத்தார்வம் வெளியில் வந்தது. எங்கள் கல்லூரியில் "அருவி" என்றொரு இதழ் வெளிவந்தது. அதில்தான் எனது கவிதைகள் நிறைய வெளியாகின. அந்த இதழ் என்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் உதவியது. தியாகராயர் கல்லூரிக்கு கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் என்று பல கவிஞர்களை எழுத்துலகிற்குத் தந்த பெருமை உண்டு.

"மாரி" என்ற பெயரில் நான் எழுதிய முதல் கவிதைக்கு என் அப்பா எனக்குக் கொடுத்த ஊக்கமும் பாராட்டும்தான் என்னை ஒரு எழுத்தாளராய் உலகிற்கு வெளிக்காட்டின. அந்தப் படைப்பையும் பாராட்டையும் என்னால் மறக்க முடியாது. ஆங்கில இலக்கியம் படித்திருந்தாலும் எனக்குத் தாய்மொழி மீதுதான் பற்று. அது நான் வளர்க்கப்பட்ட சூழலால் என்று கூடச் சொல்லலாம். நாம் சொல்ல வரும் விஷயம் எளிதில் போய்ச் சேரும் என்ற காரணமும் கூட என்னைத் தமிழில் எழுதத் தூண்டியது. என்னுடைய எழுத்தை அடையாளம் காட்ட கிராமத்து வாசனையை உணர வைப்பதற்குப் பயன்படுத்த பட்ட கருவிதான் என்னுடைய பெயர் மாற்றம்.

எழுத்தாளர்கள் அதுவும் பெண் எழுத்தாளர்கள், அடுத்தடுத்து தொடர்ந்து அரசியலுக்கு வந்து கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்து?

மிகவும் ஆரோக்கியமான ஒன்றுதான். பெண்கள் தங்களை வளர்ச்சிப் பாதைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இவைதான். ஆனால் இது போதாது, இன்னும் நிறையப் பேர் வரவேண்டும். சமூக ஆர்வத்தைத் தன் எழுத்துக்கள் மூலம் உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நேரடியாகச் செயல்படும் போது அதன் வேகமும் விவேகமும் அதிகமாக இருக்கும்.

என்னை நிறைய பேர் பார்க்கும் போது என்ன திடீர் அரசியல் பிரவேசம் என்று கேட்கிறார்கள். ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்த என்னைப் பார்த்துக் கேட்பதன் அர்த்தம்தான் எனக்கு புரியவில்லை. என்னுடைய ரத்தத்தில் கருப்பு, சிவப்பு அணுக்கள் கலந்திருக்கின்றன என்று நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. என் அப்பா தங்க பாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். எங்கள் வீட்டில் பெரியார், அண்ணா மற்றும் கலைஞருடைய கொள்கைகளைப் பின்பற்றி எங்களை வளர்த்துள்ளார்கள். எனக்குக் கொடியேற்றும் வாய்ப்பு ஓர் இரவில் உலகுக்கு வெளிச்சமாக்கப் பட்டவள் என்ற நிலையில் கிடைத்துவிடவில்லை. கலைஞரைக் கைது செய்த போது "எழுதுகோலை எடு தலைவா" என்ற தலைப்பில் எனது கவிதை முரசொலியில் வந்துள்ளது. இப்படிப் பிரச்சினைகள் வரும் போது என்னுடைய பேச்சு மூலம், எழுத்து மூலம் மறைமுகமாகப் பல முறை அரசியலில் இருந்திருக்கிறேன்.

கனிமொழி விளிம்பு நிலை மக்கள் மீது அக்கறை உள்ளவர். அவர்களுடைய வாழ்வியல் முறையை மாற்ற, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கனிமொழிக்கு ஆர்வம் அதிகமுண்டு. அந்த வகையில் அவருடைய சமூக தளம், அரசியல் தளம் இரண்டிலும் எனக்கு முன்மாதிரி அவர்தான். பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏட்டளவில் மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்துவதில் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு பெரும் பங்கு வகுக்கிறது. அரசியல் என்பது நம் தின வாழ்க்கையில் சந்திப்பதுதான். என் வீட்டிற்கு முன்னால் குப்பை கொட்டாதே; ‘இந்த இடத்தில் நான் கார் நிறுத்த வேண்டும், கொஞ்சம் தள்ளிப் போய் கொட்டு’ என்ற இடத்திலேயே ஆரம்பிக்கிறது அரசியல்.

பெண்களுக்கான முன்னேற்றம் எப்படி இருக்கிறது ?

கையில் கல்வியுடன் ஒரு துளி தன்னம்பிக்கையும் சேர்த்து பெண்கள் ஆரோக்கியம்தான் அழகு என்று நம்பிக்கையோடு இருந்தால் கண்டிப்பாக பெரிய்ய்……ய உயரத்திற்கே போகலாம். உலகின் நம்பர் ஒன் மாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் ஒரு ஆப்பிரிக்க இனப் பெண். அதனால் நிறத்தில் இல்லை அழகு என்பதை முதலில் பெண்கள் புரிந்து தெளிவு பெற வேண்டும்.

வாழ்வியல் முறையில் கண்டிப்பாக ஆன்மிகம் இருக்க வேண்டும். ஆனால் தேவை இல்லாத மூட நம்பிக்கைகளின் பேரில் இருக்கும் சடங்குகளைப் புறம் தள்ள வேண்டும். இல்லை என்றால் இன்னும் நான்கு சாமியார்களிடம் நானூறு பெண்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலம் ஏற்படும்.

உரிமையைப் பற்றிப் பேசுவதை விட, தனக்கான உரிமை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள பக்குவப்பட வேண்டும். நமது முந்தைய காலத்தைப் பார்க்கும் போது பெண்கள்தான் அனைத்திலும் அதிகம் பிரகாசித்திருக்கிறார்கள். அந்த நிலை மீண்டும் வர வேண்டும். கட்டமைப்புகளை உடைத்து விட்டு வெளியேறும் போது ஒரு நல்ல பாதை அவர்களுக்காக இன்று காத்திருக்கிறது.

பல வேலைகளில் இருக்கும் உங்களால் குடும்பத்தை எப்படி திருப்திப் படுத்த முடிகிறது?

நம் பெண்களிடம் தாய்மை என்பதற்கு தியாகம் என்ற அர்த்தம் இருக்கிறது. தன் வயிற்றுக்கு இல்லாமல் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நிலை என்பது வேறு. ஆனால் தன் மீது அக்கறை எடுத்துக் கொள்ளாமல் குழந்தைகளையும், கணவனையும் மட்டும் பார்த்துக் கொள்வது என்னைப் பொறுத்தவரை ஒரு ஆரோக்கியமான தாய்மை என்று சொல்ல முடியாது. குழந்தைகளுடைய தேவையைப் பூர்த்தி செய்வதிலும், அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதிலும் நான் என்றுமே கடமை தவறியதில்லை. அதற்காக நான் தாய் என்று எனக்கு ஒரு வட்டம் போட்டுக் கொண்டு குடும்பத்தைச் சுமப்பதால் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது.

எனக்கான வேலையையும் செய்கிறேன், அதே நேரத்தில் இன்றும் என் குழந்தைகளுக்குப் பள்ளி விடுப்புக் கேட்டு கடிதம் எழுதும் ஒரு சராசரி அம்மாவாகவும் என் வேலையைச் சரியாகச் செய்கிறேன். எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால் இன்னும் எங்களுக்குள் நல்ல புரிந்து கொள்ளும் தன்மையும், நட்பும் வளர்ந்திருக்கின்றன. நான் வளர்ந்த கிராமத்து வாசம் காட்டி வளர்ப்பதிலும் நான் தவறவில்லை. இவை எல்லாவற்றையும் மீறி எனது கணவர் எனக்கு முழுதும் உறுதுணையாய் இருக்கிறார். அவருடைய புரிந்து கொள்ளும் தன்மைதான் என்னுடைய இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

எல்லோரையும் திருப்திப்படுத்துபவராக ஒருவரால் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது எல்லோராலும் கொண்டாடப்படுவதும் அரிது. ஆனால் இவை இரண்டும் ஒரு நபருக்குக் கிடைப்பது வரம். அப்படிப் பார்க்கும் போது தமிழச்சிக்குக் கிடைத்திருப்பது வளமான வரம்.

About The Author

6 Comments

  1. R. Mahendran

    இன்றைய பெண் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதற்கான உழைப்பும் திறமையும் தமிழச்சியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதற்கு நிகழ்கால நிகழ்வுகளே சாட்சி….
    தமிழச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்…
    மதிப்பிற்குரிய சுகிதாவிற்கு எனது நன்றிகள்… (தமிழச்சி படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்ததற்காகவும் சேர்த்து)

  2. திரு

    இவரது செவ்வி பாராட்டும்படி உள்ளது. பன் முக திறமை உடையவர். நல்ல் எதிர்காலம் உடையவர். ஆனால் தமிழச்சி என பெயர் வைத்துகொண்டு (னல்ல) தமிழை பயன்படுத்துவது இல்லை. பெயர் வைத்த உனர்விற்காகவவது நல்ல் தமிழை பயன்படுத்தினால் இவருக்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது.

  3. arasezhilan

    தோழர் தமிழச்சியின் நேர்காணல் சிறப்பானது
    ஆனால் ஆன்மீகம் சார்ந்த வாழ்க்கை தேவை என்று ஏன் கூறுகிறார் என்பதுதான் புரியவில்லை
    அரசெழிலன்
    திருச்சி

  4. NE Appasamy

    It was not only a great pleasure to see you talking with the interviewer on Monday the 21st June 2010 but it was full of information. As a 70 old Appa I am happy to wish you a long and happy life with all blessings abundantly to take the sweetness of Tamil and its heritage to all corner of the world.
    NE Appasamy
    WINDCARE INDIA PVT LTD
    4 ROAD GUDIMANGALAM
    642 201
    97502 68149

  5. Sundharapandian.R

    தமிழச்சி அவர்களின் சிந்தனை, இயல்பான வாழ்வியலை அடிப்படையாக உடைய தமிழுலகின் உயர்ந்த வாழ்க்கைமுறையை, நாகரீகத்தை உணரவைக்கின்றது. ஆன்மீகத் தேவை என்பது, அவரின், வாழ்வின் புரிதலை காட்டுகிறது. படிப்பவர்களுக்கு நல்ல தெளிவையும்,வழிகாட்டுதலையும் ஏற்படுத்தவல்லதாய் உள்ளது.

Comments are closed.