என்னோட ரசனைகளைச் சொன்னா எல்லோரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க.
எனக்குப் பவழமல்லிப்பூ பிடிக்கும்.
லேசான தூறல்ல நடக்க பிடிக்கும்.
பிடிச்ச முகங்களோட தயக்கமில்லாம அறிமுகப்படுத்திக்கிட்டு பேசப் பிடிக்கும்.
அழகை ரசிக்கப் பிடிக்கும்.
தாவணி போட்ட பெண்கள் ரொம்பப் பிடிக்கும்.
பஸ்ஸில், டிரெயினில் தொலைதூரம் போகணும்னா பயணத்தை அலுப்பில்லாம கழிக்க என்னோட வழியே தனி. பக்கத்து ஸீட்டுகளில் ரசனையான ஒரு பெண் நபரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் முழுக்க மானசீகமாகப் பேசிக்கிட்டு வருவேன்.
– இப்படி இன்னும் எத்தனையோ! ஆனா, மொத்தமா பார்த்தா என்னால யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது. பாருங்க…. அன்னிக்கு அந்த பஸ்ஸில நாகர்கோவில் போனேன்.
எனக்கு முன் ஸீட்டுல ஒரு தம்பதி, ரெண்டு குழந்தைகளோடு. பெரியவனுக்கு நாலரை வயசிருக்கும். சின்னவளுக்கு மூணு வயசிருக்கலாம். அந்தப் பெண்ணைப் பார்த்தா ரெண்டு குழந்தைகளுக்கு அம்மான்னே சொல்ல முடியாது.
ஏனோ புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேருமே மௌனமாகத்தான் பயணம் செஞ்சாங்க. ஏதாவது சண்டையா? மனஸ்தாபமா?
பஸ்ஸில் இருந்தவர்களில், இவங்கதான் முதல் மார்க் வாங்கற அளவுக்கு அழகு!
ஆனா இன்னொருத்தனோட மனைவியாச்சே… மனசாட்சி உறுத்த, கண்களை வெளியே வேடிக்கை பார்க்கவிட்டேன்.
பஸ்ஸின் எதிர்க் காற்று, வெளியே பறந்த புழுதி பொட்டல்வெளி எல்லாம் அலுப்புத் தர,… தூங்கக்கூட முயற்சித்தேன், முடியலை.
ஏதோ ஓர் இடத்துல பஸ் நின்னுச்சு.
"பத்து நிமிஷம் பஸ் இங்கே நிக்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்." என்ற அறிவிப்பு கேட்டுது.
நானும், முன் ஸீட் கணவனும், குழந்தைகளும் இறங்கினோம். அவள் மட்டும் ஸீட்டிலேயே இருந்தாள்.
ஒரு கூல் டிரிங்கை வாங்கி ஸ்டிராவினால் உறிஞ்ச ஆரம்பித்தேன்.
மூன்று இளநீர்களுடன் வந்தான் முன் ஸீட்டுக்காரன். தனக்கு ஒன்றும், குழந்தைகளுக்கு இரண்டுமாக.
"அப்பா, அம்மாவுக்கு…"என்றது பெண்.
"உனக்குக் கொடுத்ததைக் குடி…’ என்றான் கடுப்பாக.
"அம்மா பாவம்ப்பா…" என்றான் பையன்.
"ஏய், பேசாம குடிக்கறியா… இல்லே!" என்று மிரட்டினான்.
நான் யூகித்தது சரிதான். கணவன் – மனைவிக்குள் ஏதோ பிணக்கு போலிருக்கு.
மனசே இல்லாமல் இளநீரைக் குடித்துவிட்டுத் தயங்கித் தயங்கி பஸ் ஏறின குழந்தைகள் இரண்டும்… பின்னாலேயே அவனும்.
பஸ் கிளம்பும்போது நானும் தொற்றிக்கொண்டேன்.
புத்துணர்ச்சியுடன் முன் ஸீட்டைக் கவனிக்க ஆரம்பிச்சேன். அரை மணி நேரம் போனது.
முதலில் பையன்தான் கவனிச்சான்.
அவனைத் தொடர்ந்து அந்தப் பெண் குழந்தை.
அவர்களின் கசமுசாவில் அந்தக் கணவன் திரும்பினான்.
"என்னடா…?" என்றான் பையனிடம்.
"அந்த மாமா இங்கேயே பார்த்துக்கிட்டிருக்கார்…" என்றான் கிசுகிசுப்பாக!
"உஸ்ஸ்… பேசாம இரு!"
முன் ஸீட்டுக்காரனுக்குக் குறுகுறுப்புத் தோன்றிவிட்டது.
தற்செயலாகத் திரும்புவது போல் அடிக்கடி என்னைப் பார்த்தான்.
ஸீட்டில் நெளிந்தான். மனைவியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான்.
"வந்து… அம்மாவை…" என்று ஏதோ சொல்ல நினைத்துத் தயங்கினான்.
நான் அசையாமல் அமர்ந்திருந்தேன்.
கடைசியில் அவன் பொறுமையிழந்து அவளிடம் பேசியேவிட்டான்.
" நீ இந்தப் பக்கம் வாயேன்…"
"ஏங்க… இதுவே நல்லாத்தானே இருக்கு" என்றாள் ஒன்றும் புரியாமல்.
கணவன் தன்னிடம் பேசியதில் உள்ளூரக் குதூகலம் தெரிந்தது.
"வான்னா வா…"
இடம் மாறிக் கொண்டனர்.
"இதுவும் நல்லாத்தான் இருக்கு.." என்றான் மகிழ்ச்சியாக.
"பசிக்குதா … அடுத்த தடவை நிறுத்தும்போது ஏதாவது வாங்கிக்கிட்டு வரேன்…" என்றான் அவனாகவே.
அவன் பார்வை என்னைத் திரும்பவும் அலசியது.
எந்தவித முக மாறுதலுமின்றி அவனை உற்றுப் பார்த்தேன். பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
பயணம் முடியும் வரை குழந்தைகளுடனும் மனைவியுடனும் பேசினான்.
இறங்கும்போது என்னை முறைத்தான்.
‘ நான் ஒரு மாதிரியாம்!’
அவன் பார்வையில் தெரிந்தது.
இப்போ சொல்லுங்க… நான் ஒரு மாதிரியா?
ரிஷபன், உங்களுக்கு வேற வேலையே இல்லையா… எப்போ பார்த்தாலும் ஒரு முடிச்சோடதான் கதையா? ஹ்ம்ம்ம்.. எப்பவும் போல நல்லாவே இருக்கு, வாழ்த்துகள் ரிஷபன்!
உஙல் பர்வை ஒரு குடும்பதை சேர்த்து வைததது. ஆனால் அப்படி பார்க்க கூடாது.
உண்மையில் நீங்க ஒரு மாதிரிதான். ஆனா, நல்ல மாதிரி…..
கதையும் கூட……