நான் – இசை விமர்சனம்

"நான்". விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்துத் தானே நாயகனாகவும் அறிமுகமாகும் திரைப்படம். இது விஜய் ஆண்டனிக்கு 25ஆவது படம் என்பது கூடுதல் தகவல். ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். இரண்டு தீம் ட்ராக்குகள் இடம்பெற்றுள்ளன.

மக்காயலா

வழக்கம் போலப் புரியாத வார்த்தைகளுடன் தொடங்கும் பாடல். எழுதியிருப்பவர் ப்ரியன். இந்தக்கால ஆண் – பெண் நட்பு, பழக்கம் ஆகியவை பாடலாக்கப்பட்டுள்ளன. ரசிக்க வைக்கும் பார்ட்டி வகைப் பாடல்.

உலகினில் மிக உயரம்

குத்துப் பாடலில் மட்டுமே கவனம் பெற்று வந்த அண்ணாமலை இந்த மென் சோகப் பாடலை எழுதியுள்ளார்! விஜய் ஆண்டனியே பாடியிருக்கும் இந்தப் பாடல் வாழ்வின் எதார்த்தத்தை வருடும்படி எழுதப்பட்டுள்ளது.

"ஊசி துளைக்கும் துணிகள் மட்டும்தான் உடுத்தும் ஆடை என்று உருமாறும்" போன்ற வரிகள், ‘அட!’ குரலில் சோகம் இழையாடுவது கூடுதல் ப்ளஸ்.

தப்பெல்லாம் தப்பேயில்லை

சமுதாயத்தின் உன்மையான முகத்தை நேர்த்தியான வார்த்தைகளால் விலாசப்படுத்தியிருக்கிறார் இந்தப் பாடலை எழுதியுள்ள அஸ்மின். ஆதி மற்றும் சந்தோஷ் ஹரிஹரனின் அலட்டாத உச்சரிப்பு ஈர்ப்பு!

"பாம்பில் விஷம் உள்ளதென்று அஞ்சி தூரம் தள்ளி நிற்ப்பான்,
பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்"

"கையில் கத்தியுள்ளவனைக் கடவுள் என்பான்" – இப்படி நல்ல வரிகள் பல இதில் உள்ளன.

தினம் தினம்

அண்ணாமலை எழுதியிருக்கும் இன்னொரு பாடல். தனி மனித இயலாமை, ஏக்கம், வருத்தம் ஆகியவற்றைச் சொல்லும் சோகப் பாடலுக்கு தீபக்கின் குரல் கச்சிதம். மனதைக் கனக்க வைக்கும் பாடல் என்றாலும் ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்துவது மைனஸ் பாயிண்ட்.

No one is Perfect

அதிரும் இசையுடன் ஆரம்பிக்கும் இந்த தீம் மியூசிக் கிட்டார், ட்ரம்ஸ் என மாறிச் சிறப்புக் கவனம் பெறுகிறது.
ஆல்பத்தைக் கேட்கும்பொழுது விஜய் ஆண்டனியின் உழைப்பு தெரிகிறது. தன்னால் மனதை வருடும் மெல்லிசையையும் கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவதற்கு ஏற்ற ஆல்பம்தான்.

About The Author