ஷ்யாமின் கன்னத்தில் பளாரென அறை இறங்கியது.
"என்ன தைரியம் இருந்தா ஹோட்டலுக்கு வர்றியான்னு கேட்டிருப்பே, நீ? உன் கையில பவர் இருந்தா பயந்திடுவேன்னு பார்க்கிறியா? உனக்கெல்லாம் ஊர்ல பெரிய மனுஷன்னு பேர் வேற. உன்னுடைய உண்மையான முகத்தை உலகத்துக்கு வெளிப்படுத்தாம விடமாட்டேன். ஒரு பெண்ணுக்குள்ள எவ்வளவு சக்தி இருக்குன்னு உனக்கு விளங்க வைக்கலை, என் பேர் பரிமளா இல்லை" அனல் கக்கிய வார்த்தைகளை அவன் மேல் விசிறிவிட்டு கம்பீரமாய் திரும்பி நடந்தாள் பரிமளா.
கண்ணில் கனலும் நிமிர்ந்த நடையுமாய் திரையில் அவளின் உருவம் ப்ரீஸ் ஆனது. ஸ்டூடியோவில் பலத்த கைதட்டல்.
பின்னிட்டே வெல் டென் நல்ல எதிர்காலம் இருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாய் இருந்தன.
பரிமளாவாக நடித்த ஆதிரைக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னே, சின்னத் திரையில் இயக்குநர் சந்திரன் மூலம் அறிமுகமாவதென்றால் சும்மாவா? அதுவும் சாதாரண அறிமுகமா? மிகவும் வித்தியாசமாக, பரிமளா தொடரின் முதல் அத்தியாயத்தை நேரடியாக ஒளிபரப்பி பெரிய சென்சேஷனை உருவாக்கிவிட்டார்களே! நிகழ்ச்சியின் விளம்பரத்தையே மிக வித்தியாசமாக செய்து பெண்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதில் தமிழகத்தின் அத்தனை பெண்களுக்கும் அவளின் முகம் பரிச்சயமாகி இருக்கும்.
நிகழ்ச்சி முடிந்து சந்திரன் நேயர்களிடம் நேரடியாக உரையாடிக் கொண்டிருந்தான்.
"சார், தூத்துக்குடில இருந்து மீனாட்சி பேசறேன். உங்களுடைய கதா நாயகிகள் எல்லாருமே தைரியமானவங்களா இருக்காங்களே, உங்களுக்கு அப்படிப்பட்ட பெண்கள்தான் பிடிக்குமோ?"
"உண்மைதான், மீனாட்சி. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்களால் நம் சமுதாயம் சிறப்புறும் என்பது என் நம்பிக்கை. இந்தத் தொடரைப் பார்த்து ஒரே ஒரு பெண்ணுக்கு அந்த கம்பீரம் வந்தால் கூட அதை என் லட்சியத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதுவேன்"
அடுத்த கேள்வி.
"சென்னையிலருந்து ரமணி பேசறேன், சார். தமிழகத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக நீங்கள் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க?"
"பெண்களை வணங்குபவன் நான். அவர்களின் நேசத்துக்குரியவனாக இருப்பதை விட எனக்கு என்ன பெருமை இருக்க முடியும்? என்னைத் தன் குடும்பத்தில் ஒருவனாக எண்ணும் தமிழ் சகோதரிகள் ஒவ்வொருவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன்" பனித்திருந்த கண்களைத் துடைத்துக் கொண்டான் சந்திரன்.
ஆதிரையைத் தவிர அந்த யூனிட்டில் மற்றவர்களெல்லாம் அவனுடன் ஏற்கனவே பலமுறை பணியாற்றியவர்கள். நிகழ்ச்சி முடிந்த அடுத்த நிமிடத்தில் பலரும் காணாமல் போய்விட, ஆதிரை சந்திரனுக்கு நன்றி சொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
ஆதிரைக்கு நடிக்க வருவதில் அவ்வளவு விருப்பமில்லை. ஆனால் வீட்டு நிலைமை அப்படி. அப்பா க்ளர்க் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பெனியை மூடியதிலிருந்து ஆரம்பித்த கஷ்டகாலம் ஒரு வருடமாய் ரொம்பப் படுத்திவிட்டது. ஏற்கெனவே அவரின் சில்லறை சம்பளத்தில் மூன்று பிள்ளைகளோடு சிரம ஜீவனம். இப்போது அதுவும் போய்விட்டதில் முதலில் நிலைகுலைந்து போனது அவர்தான்.
மன அழுத்தம் வந்து அவர் முடங்கிப் போய்விட வேறு வழியில்லாமல் பி.காம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதிரை படிப்பை உதறிவிட்டு வேலை தேடும்படி ஆயிற்று.
பரிமளா தொடருக்காக முற்றிலும் புதிய முகமாய் தேடிக் கொண்டிருந்த சந்திரனின் கண்களில் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த ஆதிரை படவேண்டுமென்பது விதி போலும். கலைத்துறை பற்றி என்னென்னவோ கேள்விப்பட்டதால் ஆதிரையின் அம்மா மிகவும் தயங்கினாலும், வறுமையிலிருந்து விடுபட வேறு வழி தெரியாமல் அறைகுறையாய்த் தலையாட்டி வைத்தாள்.
நல்ல வேளை, இது வரை எந்தப் பிரச்சினையுமில்லை. பெண்களைத் தெய்வமாய் வணங்குகிற சந்திரனிடம் வாய்ப்பு கிடைத்துவிட்டதற்குக் காரணம் வடபழனி முருகனே என்பதில் அவளுக்கு சந்தேகமொன்றுமில்லை.
அறிமுக எபிசோடில் இவ்வளவு நல்ல பெயர் வாங்குவாள் என அவளே எதிர்பார்த்திருக்கவில்லைதான். வாங்கியிருக்கும் இந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். கிடைத்த அட்வான்ஸில் ஒண்டுக் குடித்தனத் தைக் காலி செய்துவிட்டு வளசரவாக்கத்தில் ஒரு சின்ன ப்ளாட்டுக்குக் குடி பெயர்ந்தாகிவிட்டது. வாடகையே மாதம் இரண்டாயிரத்து ஐநூறு.
சம்பளம் வந்ததும் அம்மாவையும் அப்பாவையும் பழனி போய் வரச் சொல்லவேண்டும் – எத்தனை வருடங்களாய் அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறாள், பாவம். சின்னத்தம்பிக்கு பள்ளி செல்ல ஒரு சைக்கிள் வாங்கித் தரவேண்டும். பெரியவன் தான் நிறைய செலவு வைக்கப் போகிறான். ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை வாங்கிக் குவித்துவிட்டு இஞ்சினியரிங் நுழைவுத் தேர்வு எழுதியிருக்கிறான். எல்லாம் இந்தத் தொடரின் வெற்றியில்தான் அடங்கி இருக்கிறது.
"ப்யூட்டிபுல்லா பண்ணினேம்மா. நல்லா வருவே" குரல் கேட்டுத் தன் நினைவுகளிலிருந்து மீண்டாள் ஆதிரை. சந்திரன்தான் தன் பாராட்டைச் சொல்லிக் கொண்டே காரை நோக்கி நடந்து கொண்டிருந்தான்
விரைந்து அவனுடன் சேர்ந்து கொண்டவள், "உங்கள் ஆசீர்வாதம்தான், சார். எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சார்" ஆதிரையின் குரல் தழுதழுத்தது.
சிரித்துக் கொண்டே, "நன்றிதானேம்மா. நைட் 10 மணிக்கு ஹோட்டல் அப்ஸராவில வந்து சொல்லிடு" என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டுக் காரில் ஏறினான்.
ஆதிரை அதிர்ந்து அவசரமாய், "நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை, சார்" என்றாள் நடுங்கிய குரலில்.
கார் கண்ணாடியை இறக்கி, "இந்த பிலிம் காட்டறதெல்லாம் என்கிட்ட வேண்டாம். என்னைப் பற்றித் தெரியும்ல. அட்ஜஸ்ட் பண்ணிக்கலைன்னா ஒழிச்சிருவேன். ஒரு பய பின்ன சான்ஸ் தரமாட்டான். அப்புறம் உன் இஷ்டம்" என்றான் மிரட்டுகிற குரலில்.
கார் கிளம்பிப் போனதும் ஆதிரைக்கு இருட்டுக் குகைக்குள் தனியே நிற்கிறது போல உடம்பு நடுங்கிற்று. ‘அடப்பாவி, பெண்ணைத் தெய்வம் என்பதெல்லாம் வெறும் வேஷம். இதையெல்லாம் நிஜம் என்று நம்பி ஏமாறுகிறதுகள் இந்த முட்டாள் ஜனங்கள்’ என்று முதலில் கோபம் எழுந்தாலும் சற்று முன் அசை போட்டுக் கொண்டிருந்த குடும்ப நிலை அவள் கோபத்துக்குக் கடிவாளம் போட்டு துக்கத்தில் தள்ளிற்று.
இந்த வாய்ப்பை உதறினால் என்னவாகும் என்று நினைக்கவே பயமாயிருந்தது. இயலாமையில் கண்ணீர் சுரந்து இமைகளை நனைத்தது.
மணி எட்டாகிறது. யோசிக்க வேண்டும். எல்லோரும் பயமுறுத்தியது போலவே அவளுக்கு நடக்கிறது. மனது சோர்ந்து போனது.
தன்னைப் பெண்ணாய் அதுவும் ஏழைப் பெண்ணாய் ஓநாய்களுக்கு மத்தியில் படைத்ததற்காய் வடபழனி ஆண்டவன் மீது கோபம் பொங்கியது. அவனிடம் நாலு கேள்வி கேட்டுவிட்டு வரவேண்டுமென்று எண்ணி ஆட்டோ பிடித்து வடபழனி கோவில் சென்றாள்.
வெள்ளிக்கிழமையாதலால் கோவிலில் கூட்டம் அதிகம். க்யூவில் நிற்கும்போது திரும்பிப் பார்த்த டீன் ஏஜ் பெண் ஒன்று, "நீங்க பரிமளாதானே?" என்றது. ‘இல்லை, ஆதிரை’ என்று அவள் சொல்ல வாயெடுக்குமுன் அவளைச் சுற்றி ஒரு சிறிய கும்பல்.
"பரிமளா, இப்பதான் ஒன்ன டிவில பாத்துட்டு நேர கோவிலுக்கு வரேன். நீ இங்க நிக்கறே. ஷ்யாமுக்கு நல்லா குடுத்தே. அதைக் காட்டி உன்ன மாதிரி இருக்கணும்னு என் பொண்ணுக்குச் சொல்லிருக்கேன்" என்றாள் ஒரு நடுத்தர வயது மாமி.
"பொம்மனாட்டின்னா சும்மா அழுதிண்டிருக்கப் படாது, உன்ன மாதிரி எதையும் துணிச்சலா எதுத்து நிக்கணும். நல்லாரு கொழந்தே" பாட்டி ஒருத்தி தலை மேல் கைவைத்து ஆசீர்வதித்தாள்.
"அந்த கேரக்டர் உங்களுக்கு நல்லா சூட் ஆகுது. நிஜத்திலயும் நீங்க பரிமளா மாதிரி ஸ்ட்ராங்கான கேரக்டராத்தான் தெரியறீங்க. ஆல் த பெஸ்ட்" என்றாள் ஒரு புத்திசாலி நடுத்தர வயதுப் பெண்.
அத்தனை பாராட்டுக்களையும் அன்பாய் ஏற்றுக் கொண்ட ஆதிரைக்கு அதற்கு மேல் முருகனைப் பார்க்கத் தேவையிருந்திருக்கவில்லை. அன்புப் பிடியிலிருந்து மென்மையாய் விடுபட்டு ஆட்டோவில் ஏறினாள். "ஹோட்டல் அப்ஸரா போங்க" என்றாள்.
கதவைத் திறந்த சந்திரனின் முகத்தில் ஏளனப் புன்னகை.
"நீ வருவேன்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு நினைக்கலை".
சந்திரனின் கன்னத்தில் பளாரென அறை இறங்கியது.
"என்ன தைரியம் இருந்தா ஹோட்டலுக்கு வர்றியான்னு கேட்டிருப்பே, நீ? உன் கையில பவர் இருந்தா பயந்திடுவேன்னு பார்க்கிறியா? உனக்கெல்லாம் ஊர்ல பெரிய மனுஷன்னு பேர் வேற. உன்னுடைய உண்மையான முகத்தை உலகத்துக்கு வெளிப்படுத்தாம விடமாட்டேன். ஒரு பெண்ணுக்குள்ள எவ்வளவு சக்தி இருக்குன்னு உனக்கு விளங்க வைக்கல, என் பேர் பரிமளா இல்லை" அனல் கக்கிய வார்த்தைகளை அவன் மேல் விசிறிவிட்டு கம்பீரமாய் திரும்பி நடந்தாள் பரிமளா.
நன்றி: ராணி வார இதழ்
“