தமிழர் இலக்கியங்களில் பல்வேறு சமுதாயச் சீர்திருத்தங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம் என்னும் நிலைகளில் சமுதாயத்திற்கு வளம் சேர்க்கும் பண்பாடுகளை இலக்கியங்கள் களங்களாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் நாட்டுப்புற இலக்கியங்களின் பாடுபொருளும் சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையால் பல்வேறு சமூகக் கோட்பாடுகளை விளக்கி உள்ளது. நாட்டுப்புறப் பழமொழிகள் பாமர மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப் போனவை. அவை மக்களின் குடும்ப வாழ்க்கையைச் செம்மையாக்கும் வகையில், வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில், ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி இலக்கியமாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றன.
வயதில் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரை பகரப் பழமொழிகளைக் கையாள்வதை கிராமப்புறங்களில் காண முடிகிறது. பழமொழி என்பதைப் ‘பழமைமொழி’ எனப் பண்புத் தொகையாகவும், ‘பழம்மொழி’ என உவமைத் தொகையாகவும் கூறலாம். பொதுமக்களுடைய கருத்துகளை நுட்பமாகவும், தெளிவாகவும் எதிரொலிக்கும் வழக்காற்று இலக்கியம் பழமொழி எனலாம். பழமொழிகள் எல்லா மொழிகளிலும் மக்கள் அறிவையும், நாகரிகத்தையும் பிரதிபலிப்பவையாகவே அமைகின்றன.
‘அறிவின் நுட்பத்தைப் புலப்படுத்தும் நிலையில் சுருங்கிய சொல்லால் அமைந்து, புகழ் பயக்கும் உயர்ந்த கருத்தினைத் தன்னகத்தே கொண்டு, யாவரும் எளிதில் உணருமாறு கருதிய பொருள் முடித்தற்கு வரும் காரணத்துடன் பொருந்தி விளங்குவது பழமொழி’ என உரையாசிரியர் வெள்ளை வாரணர் பின்வரும் தொல்காப்பியப் பாடலுக்கான உரையில் விளக்குகிறார்.
"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி யென்ப"
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக எண்ணப்படும் நாலடியாரில், அறத்துப்பாலில் பல செய்யுள்கள் பழமொழிகளை எடுத்தியம்பி உள்ளன. முன்றுரையரையனார் நானூறு பழமொழிகளின் தொகுப்பான ‘பழமொழி நானூறு’ எனும் நூலைப் படைத்துள்ளார்.
நாட்டுப்புறவியல் அறிஞர் சு.சக்திவேல் அவர்கள் "பழமொழி என்ற சொல்லே மிகப் பழமையானவற்றை உணர்த்துவதாகும். பலரது அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அறிய முடியும் அறிவின் சுருக்கமே பழமொழி எனலாம்."1 என்கிறார்.
"பண்பாட்டுப் பழமையிலிருந்து வரும் பழமொழியின் குரல் மரபின் அடிப்படையில் உண்மையைப் பேசுகிறது. பழமொழியைப் பயன்படுத்துபவர் ஒரு கருவியாக இருந்து அவர் வழியாகப் பழமொழி, கேட்போருக்குக் கருத்துப் புலப்படுத்தம் செய்கிறது"2 என்கிறார் தே.லூர்து அவர்கள்.
பல்வேறு மேலைநாடுகளும் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றன. உலக நாடுகள் பலவும் பழமொழிகளை உயர்ந்த சிந்தனை மொழிகளாகக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் டச்சு, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் பழமொழிகள் பற்றிய குறிப்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன.
நாள்தோறும் அனுபவம் பெற்ற குழந்தைகளே பழமொழிகள் – டச்சு.
அறிவின் குழந்தைகள் பழமொழிகள் – இங்கிலாந்து.
இறைவனுடைய குரல் பழமொழி – ஸ்பெயின்.
நாட்டுப்புறப் பழமொழிகள்
‘நாட்டுப்புறவியல் என்பது மக்கள் பண்பாட்டின் ஒரு கூறாகும். அப்பண்பாட்டுக் கூறுகள் நம்முடைய பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், கலைகளிலும் இலைமறை காய்போல் மறைந்து கிடக்கின்றன’3 என்கிறார் சு.சக்திவேல். பாமர மக்கள் தங்கள் அனுபவ மொழிகளைப் பல தலைமுறைகளாகப் பழமொழி வடிவில் உணர்த்தி வருகின்றனர். நாட்டுப்புறப் பழமொழிகளை அவற்றின் பொருண்மைகளின் அடிப்படையில் உருவகப் பழமொழிகள், நேர்பொருள் பழமொழிகள் என வகைப்படுத்தலாம்.
வாழ்வியல் பயன்பாடுகள்
மனிதன் கண்டுபிடிக்கும் புதுமைகள் அவனுக்குப் பயன்படாத நிலையில் வழக்கிழந்து விடுகின்றன. படைப்பு இலக்கியங்களிலும் மனித வாழ்விற்குப் பயன்படுபவை நிலைத்து நிற்கின்றன; மற்றவை தங்கள் தடங்களை மறந்து விடுகின்றன. பாமர மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளதால் ஏட்டில் எழுதப்படாத நிலையிலும் காலம் கடந்து நிற்கின்றன. உலகநியதி, பெண்மை, நேர்மை, களவு, இல்லறம் எனப் பல வாழ்வியல் சிந்தனைகளைத் தூண்டும் பழமொழிகளைப் பாமர மக்கள் பயன்படுத்துகின்றனர்.
"அரச்சு அரச்சு மிஞ்சினது அம்மி
செரச்சி செரச்சி மிஞ்சினது குடுமி"4
நிலையானது என்று உலகில் எதுவும் இல்லை என்பதை உணர வைக்கிறது இம்முதுமொழி.
"கிளிபோலப் பெண்டாட்டி இருந்தாலும்
குரங்குபோல ஒரு கூத்தியா வேணுமாம்!"5
"நோஞ்சான் பூனை மத்தை நக்கினது போல!"6
இத்தகைய பழமொழிகள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் களவு நிலையைத் தவிர்த்து இனிய வாழ்வை அமைக்க வலியுறுத்துகின்றன.
இயற்கை உணவும், பெரியோர்களின் அரவணைப்பும் இல்லாத இல்லம் வீண் என்பதைச் சொல்கிறது இப்பழமொழி.
"கீரை இல்லாச் சோறும்
கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!"7
மக்கள் பழமொழிகளை எவ்வளவுதான் பயன்படுத்தினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட இளைய சமூகமே வளம் பெறும். பாமர மக்கள் தங்கள் முன்னோர்களின் சிந்தனைகளில் உதித்த தீர்க்கமான உண்மைகளைப் பழமொழிகளாக இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவனது வாழ்க்கையின் சரியான பாதையே அவனைப் பண்படுத்தும். அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை நெறிப்படுத்தி சிறந்த மனிதனைச் சமூகத்திற்கு வழங்குவதில் பழமொழிகளின் பங்கும் உள்ளது. வாழ்வியல் பயன்பாடுகளைக் ஒருங்கே கொண்டுள்ள பழமொழிகள் இவ்வுலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்.
உசாத்துணை (Guides):
1.சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு (பக்கம் – 105)
2.தே.லூர்து, ‘நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள்’ (பக்கம் – 210)
3.சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு (பக்கம் – 300)
4.சண்முகம், வயது 57, முள்ளிக்காடு, தருமபுரி மாவட்டம்
5.செய.செல்வராசு, கிராமியப் பழமொழிகள் (பக்கம் – 25)
6.செய.செல்வராசு, கிராமியப் பழமொழிகள் (பக்கம் – 106)
7.செய.செல்வராசு, கிராமியப் பழமொழிகள் (பக்கம் – 25)
“