நவீன சரஸ்வதி சபதம்

அறிமுக இயக்குனர் சந்துரு இயக்க, பிரேம்குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஜெய், வி.டி.வி.கணேஷ் மற்றும் சத்தியன் நடித்திருக்கிறார்கள்.

காத்திருந்தாய் அன்பே

முதல் முறை கேட்கும்போது வசீகரிக்கின்ற பாடல் இது. காதல் தன்னுள் அரும்பியிருப்பதை உணரும் காதலி எவ்வாறு காதல் செய்யலாம் என அதை விவரிக்க, காதலனும் அதையேற்றுத் தலையாட்டுகிறான். சின்மயி, நிவாஸ் மற்றும் அபய் பாட, வைரமுத்து வரிகளைக் கொடுத்திருக்கிறார்.

பாடலின் துளி :

அவள் :

பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
உடைந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்

அவன்:

அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்

நெஞ்சாங்குளி ஏங்குதடி

தொலைதூரத்தில் காதலன் பிரிவை எண்ணி ஏங்குகிறான். அவளும் இவனின் பிரிவால் தவிக்கிறாள். காதலால் மீண்டும் சேருவேன் எனப் பாடுகிறான். கார்த்திக் மற்றும் பூஜா வைத்தியநாதன் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதுவும் வைரமுத்துவின் கைவண்ணமே. இந்தப் பாடலுக்கு இரண்டு வடிவங்கள் இருக்கின்றன ஆல்பத்தில். இரண்டும் வசீகரிக்கும் வகையாகத்தானிருக்கின்றன. அதுவும் கார்த்திக்கின் குரல் கச்சிதப் பொருத்தம்.

பாடலின் துளி :

என் இரவை எல்லாம் கொளுத்தி
அதை எல்லாத் திசையிலும் செலுத்தி
நான் உயிரோடுள்ளதை உணர்த்தி
உயிர் நீப்பேன் உன்னை மலர்த்தி

Saturday Fever

வாரக் கடைசி வந்தாச்சு, வாங்க… வெளிநாட்டுக்காரன் மாதிரி பார்ட்டி கொண்டாடலாம் என அழைக்கிறார் மதன் கார்க்கி. விஜய் பிரகாஷ் மற்றும் சயனோரா பிலிப் பாடியிருக்கிறார்கள். டெக்னோ இசையின் தாக்கத்தில் பாடல் தடதடத்து நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது.

பாடலின் துளி :

நீ அமெரிக்க டாலரில் செலவழி
ஜமேய்கனை போல் இங்க ஆடு நீ
ஐ ஐரிஷை போல் இப்ப நீ குடி
நீ இந்தியப் பெண்களை காதலி.. வா வா

வாழ்க்கை ஒரு குவாட்டர்

போதையில் புலரும் ஒரு தத்துவப் பாடல். கானா பாலா எழுதி அவரே பாடியுமிருக்கிறார். பாடலின் ஆரம்பம் சற்று சலிப்பூட்டினாலும் போகப் போக ரசிக்க வைக்கிறது. ஆரம்ப குவாட்டர் வரிகளை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சில ஜாலி தத்துவங்களும் இதில் உள்ளடக்கம். சற்றே கதையும்கூட சொல்கிறது. முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு இது புரியக் கூடும்.

நவீன சரஸ்வதி சபதம் – வெல்லும்.

About The Author