ஆரோக்கிய வாழ்வு
நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம் ஆரோக்கியமான வாழ்வே. இந்த ஆரோக்கியத்திற்கான அடிப்படை ரகசியம் நல்ல தரமான தூக்கமே! நவீன இயந்திர யுகத்தில், கடந்த பல ஆண்டுகளில் வாழ்க்கை முறை மாற்றத்தால் தரமான தூக்கத்தை மனித குலம் இழந்து வருகிறது என்பது துயரமான செய்தி தான்! உலகெங்கும் இப்போது தூக்க மாத்திரைகள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகள்
ஏழு மணி நேரம் கூடத் தூங்காமல் மிகக் குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் அடிப்படை ஆதாரமான உடல் நலத்தைக் கெடுக்கிறது என்பதை பலரும் அறியாதிருப்பது வேதனை தரும் விஷயம்! ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் பிரபல மருத்துவர் பிலிஸ் ஜீ தூக்கத்தை இழப்பவர்களிடம் உயர் அளவில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் இருப்பதையும் அது வீக்கத்தை அதிகரிப்பதால் நோயைத் தடுக்கும் ஆற்றலைக் குறைப்பதையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளார். தூக்கம் குறையக் குறைய ரத்த அழுத்த அளவு அதிகமாகிறது. ஏனெனில் தூக்கத்தின் போது தான் ரத்த அழுத்த அளவும் இதயத் துடிப்பு அளவும் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. ஏராளமான ஆய்வுகள் நோய் தடுக்கும் ஆற்றலை தூக்கமின்மை குறைத்து விடுவதால் தூங்காமல் இருப்பவர் அதிக நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளியாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன.
பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இதழில் ஜேன்.பி.. ப்ராடி,"யாருமே நல்ல தூக்கத்தின் மேன்மையை இதுவரை குறை சொன்னதில்லை! உடல் ரீதியாக 6 மணி நேரமோ அல்லது 8 மணி நேரமோ எவ்வளவு நேரம் தூங்கினால் நீங்கள் திறம்பட வேலை செய்ய முடியுமோ அவ்வளவு அடிப்படை தேவையான தூக்கத்தைக் கொள்ளுவது நலம். இந்த அளவு தூக்கத்தை நீங்கள் இழக்கும் போது ஞாபக மறதி, கற்பதில் குறைபாடு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைபாடு, உடல் ஆரோக்கியக் குறைபாடு, உணர்ச்சி பூர்வமான விஷயங்களில் கோளாறு, இதய சம்பந்தமான கோளாறுகள், உடல் எடை கூடுதல் உள்ளிட்ட ஏராளமான கோளாறுகள் வந்து விடும்! சரியான தூக்கமின்மை நாளடைவில் எரிச்சலையும் கோபத்தையும் தூண்டிவிடும். அடிக்கடி மூட் எனப்படும் நிலை மாற்றம் ஏற்படும். பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் சீரழிந்து அதிக அளவு சாப்பிடத் தூண்டி அதிக எடையில் கொண்டு விடும். பகலில் உறக்கத்தை ஏற்படுத்தி விபத்துக்களில் கொண்டு போய் விடும்" என்று எச்சரிக்கிறார்!
தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம்,ஹார்மோன் குறைபாடுகள், சீரற்ற உடல்வளர்ச்சி, அதிக வீக்கம் ஆகியவை தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகளில் சில.
டாக்டர் ஜி.ஹெச்.
வளர்ச்சியைத் தரும் க்ரோத் ஹார்மோன்கள் (growth hormones) வயது ஆக ஆக தசைகளையும் தோலையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.இதுவே இளமையான தோற்றத்தை நீட்டிக்கும். இந்த ஹார்மோன்களை நல்ல விதத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் முதல் தேவை சரியான தூக்கம் தான்!
சரியான தூக்கம் இல்லை என்றால் நீங்கள் பொலிவுடன் இருக்க மாட்டீர்கள். பொலிவுடன் இல்லையென்றால் கவர்ச்சி இருக்காது. செக்ஸ் உறவுகள் உள்ளிட்ட அனைத்திலும் தகராறு ஏற்பட்டால் உறவுகள் கெடும்!
இந்த க்ரோத் ஹார்மோனை டாக்டர் மைக்கேல் ப்ரெஸ் தனது ப்யூடி ஸ்லீப் என்ற புத்தகத்தில் டாக்டர் ஜி.ஹெச். எனக் குறிப்பிடுகிறார்! ஏனெனில் இது ஒரு காஸ்மடிக் சர்ஜன் செய்ய வேண்டிய வேலையைச் சிறிதும் செலவின்றி அன்றாடம் உங்களுக்குச் செய்து வருகிறது! ஏராளமான அழகு சாதனங்கள், பணத்தைக் கொட்டி வாங்கும் விட்டமின் நிறைந்த உணவு வகைகள், மஸாஜ் , லோஷன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி செலவில்லாத பெரும் நன்மையைத் தரும் இந்த டாக்டர் ஜி.ஹெச் என்னும் க்ரோத் ஹார்மோனைப் பெற நல்ல தூக்கம் தூங்கினால் போதும்!
நல்ல உறக்கம் மூளை செயல் திறனைக் கூட்டுகிறது.
எடையைக் குறைக்கிறது.
நோய் வந்தால் அதை சீக்கிரம் குணப்படுத்துகிறது.
நோய் வராமல் தடுக்கும் இயற்கை ஆற்றலை உடலில் ஏற்படுத்துகிறது.
அதிக எனர்ஜியை_ ஆற்றலை தருகிறது.
பொறுமையைக் கூட்டுகிறது.
வேலை இடங்களில் விபத்துக்களைத் தவிர்க்கிறது.
ஆக நல்ல தூக்கம் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையான ரகசியம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான தூக்கத்தை அடையப் பழகவேண்டும்
.
நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ்
தூக்கம் வரவில்லையே என்ன செய்வது என்பவர்க்கு சில டிப்ஸ்:
• ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்;ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழகுங்கள்
• மது அருந்துவதை நிறுத்துங்கள். உறங்கச் செல்லுமுன் காப்பி, டீ அருந்தாதீர்கள்
• தூக்க நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்பாக உணவை இரவு உணவை முடித்து விடுங்கள்.
• தேகப்பயிற்சி மிகவும் அவசியம். தூங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகவே இப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்து முடித்து விட வேண்டும்,
• பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். பவர் நேப் என்றால் அது இருபது நிமிடத் தூக்கம் மட்டுமே என்பதை நினைவிலிறுத்தி இருபது நிமிடங்களுக்குக் குறைவாகவே தூங்குங்கள்.
• கம்ப்யூட்டர், டி.வி, போன்றவற்றை படுக்கை அறையில் வைத்திருக்காதீர்கள்
• படுக்கை அறையை சுத்தமாகவும் குளுமையாகவும் கூடிய வரையில் வைத்திருங்கள்.
• நல்ல படுக்கை, மென்மையான தலையணை ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.
• படுக்கையை தூக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.
• படுப்பதற்கு முன் நல்ல மனதுக்கு இதமான மெல்லிய இசையைக் கேட்கலாம். அல்லது நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.
• கடிகாரத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது கவலையையும் டென்ஷனையுமே தரும்.
• ‘நாளை செய்யவேண்டியவற்றை’ எண்ணிக் குழம்பாதீர்கள்.அவற்றை ஒரு பேப்பரில் எழுதி வைத்து விடுங்கள்.நிம்மதியாக உறக்கம் வரும்
• ஆற்றலை அதிகரிக்கும் பவர் நேப் (Powere nap) என்பது மதியம் ஓய்வு நேரத்தில் 15 நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை அயர்ந்து தூங்குவது தான். இது நல்ல ஆற்றலைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
• அத்தோடு நன்கு வயிறு குலுங்க பத்து நிமிடம் சிரித்து விட்டுத் தூங்கினால் அது இரண்டு மணி நேர வலியற்ற நிம்மதியான தூக்கத்தை நோயாளிகளுக்குக் கூடத் தரும் என்ற உண்மையை உணர்ந்து நல்ல ஜோக்குகளைப் படித்து மகிழுங்கள்; காமடி படங்களைப் பார்த்துச் சிரியுங்கள்.
சீரான தூக்கம் சீரான வாழ்க்கைக்கு இன்றியமையாத அஸ்திவாரம்!
(நன்றி : குவைத் தமிழ் அமுதம்)
“