பெரிய யாகம் செய்யும்போது அதன் முடிவில் அழகான புடவை, அல்லது வேட்டியுடன் பழங்களும் அக்னிக்கு ஸ்வாஹா என்று அளிக்கப்படுகின்றன. நாம் அளிக்கும் அந்த ஆடை, குறிப்பிட்ட கடவுளிடம் போய்ச் சேர்ந்து விடுகிறதாம். இதைச் செய்யும் அக்னியின் பெயர் பரணி.
அக்னியில் பலவகை உண்டாம். அதில் பரணி எனும் ருத்ராக்னி நாம் அளிக்கும் எல்லாப் பொருட்களையும் இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது என்பது ஐதீகம். இந்த நம்பிக்கையைக் உறுதிப்படுத்தும் விந்தை அரங்கேறிய ஊர்தான் ‘நல்லாடை’. இங்கு இருக்கும் கோயிலில் அருள்புரிபவர் ஸ்ரீ அக்னீஸ்வரர்; இறைவியாய் விளங்குபவள் சுந்தரநாயகி. ஊரின் பெயர் நல்லாடை என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? இதோ, அதற்கான காரணத்தைப் பாருங்கள்!
மிருகண்டு மகரிஷிக்குச் சிவனை நோக்கி ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக, இந்தத் தலத்திற்கு வந்தார். யாகத்திற்கும் ஏற்பாடு செய்தார். பல சிவ பக்தர்கள் யாகத்திற்கு வந்து கூடினர். அவர்கள் மிருகண்டு ரிஷியிடம் "முனிவரே! யாகத்தின் புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினர்.
"அப்படி என்றால் பக்தர்களே, யாகத்திற்கு வேண்டிய பொருட்களில் சில நீங்கள் வாங்கி அதில் பங்கு பெறுங்கள்" என்றார் மகரிஷி.
"அப்படியே செய்கிறோம். எங்களால் இயன்ற வரை பொருட்கள் வாங்கி வருகிறோம்" என்றனர் பக்தர்கள்.
அந்த பக்தர்களில் ஊரின் நெசவாளர்களும் இருந்தனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, தங்கச் சரிகை பின்னி மூன்று பட்டாடை நெய்தனர். அதில் ஒன்று இறைவனுக்கு, மற்றொன்று இறைவிக்கு, மூன்றாவது மகரிஷிக்கு என்று கொண்டு வந்து சேர்ப்பித்தனர்.
நாதஸ்வரத்துடன் ஹோமம் ஆரம்பமாகியது. பின், வேத கோஷங்கள் முழங்கப் பூஜை ஆரம்பமாயிற்று. முடிவில் மகரிஷி மிருகண்டு மூன்று பட்டாடைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அக்னியில் இட்டார். நெசவாளர்கள் ஒருவர்க்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். ‘என்ன இது! நாம் இறைவன், இறைவிக்கு நெய்த ஆடைகளையும் அக்னியில் போட்டுவிட்டாரே!’ என்ற வருத்தம் அவர்களுக்கு மேலோங்கியது. ஒரு நெசவாளி தைரியமாய், "என்ன சுவாமி, நாங்கள் இறைவன், இறைவிக்கென்று செய்த ஆடைகளையும் தீயீட்டுக் கருக வைத்துள்ளீரே! இது நியாயமா? உங்களுக்கென்று அளித்ததை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை உண்டு. ஆனால்………"
"ஏன் தம்பி முடிக்கவில்லை?" என்று புன்முறுவலுடன் கேட்ட மகரிஷி தொடர்ந்தார்.
"நான் யாககுண்டத்தில் இட்ட புடவையும் வேட்டியும் எங்கு போய்ச் சேர்ந்தன என்று தெரியுமா உங்களுக்கு? அவை வேறெங்கும் போகவில்லை. கருகிச் சாம்பலாகவும் இல்லை. அவை இறைவனுக்கும், இறைவிக்கும் போய்ச் சேர்ந்துவிட்டன."
"எங்கே, நாங்கள் போய்ப் பார்க்கிறோம்" என்று அனைவரும் கர்ப்பகிரகத்திற்குச் சென்று பார்த்தனர். என்ன ஆச்சர்யம்! அந்த சிவலிங்கத்தில் நெசவாளர்கள் கொடுத்த பட்டாடை மிளிர்ந்தது.
அன்று முதல் இந்தக் கோயிலுக்கு ‘நல்லாடை’ என்ற பெயர் வந்தது. பரணி எனும் அக்னி பட்டாடைகளை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதனால் இந்தக் கோயில் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோயிலானது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். சுந்தரநாயகிக்கென்று தனி சந்நிதியும் உண்டு. சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புதுப்பித்ததற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒன்று என்பதால் இது மிகப்பழமை வாய்ந்த கோயில் என்பது தெரிய வருகிறது. இதுவே குலோத்துங்க சோழபுரம் எனப்பட்டது. கோயிலுக்காக ஏராளமான நிலங்களும் வழங்கப்பட்டன.
இங்கு சிவராத்திரி, திருவாதிரை ஆகியவை மிகவும் விமரிசையாக நடக்கும். சித்திரை விசாகம் மிகவும் பெரிய அளவில் நடக்கும். கோயில், நடக்க நடக்க சென்றுகொண்டே இருக்கிறது; சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது! மூன்று கோபுரங்கள், பெரிய பிராகாரங்கள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. சிவலிங்கத்தைச் சுற்றி அகழி போல் நீர் இருந்து கொண்டே இருக்கிறது. சிவபெருமானைக் குளிர வைக்கும் நோக்கமாக இருக்கலாம்; பெயர் அக்னீஸ்வரர் ஆயிற்றே!
இந்த நல்லாடை, திருக்கடையூர் அருகில் இருப்பதால், புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இங்கும் போய் தரிசனம் செய்து அருள் பெற்று வரலாம்.