நரை

குமரனுக்கு சௌந்தரியைப் பார்க்கப் போகிற பரபரப்பில் சரியான உறக்கமில்லை. காலை நாலரைக்கெல்லாம் இனி தூங்க இயலாதென்பது போல உடம்பும் மனமும் மொத்தமாய் விழித்துக் கொண்டன. அருகில் நிம்மதியான உறக்கத்திலிருந்த மனைவி மேகலாவை நோக்கினான். தான் இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போகிற பரவசத்தில் உறங்காமலிருப்பது தெரிந்தால் இவள் என்ன நினைப்பாள் என தன்னையே கேட்டுக் கொண்டான்

மேகலாவிடம் கேட்டால் பொலபொலவெனச் சிரிப்பாளாயிருக்கும். அவளுக்கு வாழ்க்கையில் எல்லாமே அற்புதம். அதுவும் அவள் கணவன் அவளுக்கு மெகா அற்புதம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் திருஷ்டி கழிப்பாள்.

அலுத்துக் கொண்டால் "அத்தனை பொண்கள் கண்ணும் உங்க மேலதானிருக்கு" என்பாள்.

மேகலா அத்தனை அழகில்லை. குமரனை ஏதோ உறவு வீட்டுக் கல்யாணத்தில் பார்த்து ஆசைப்பட்டு கோடீஸ்வர தந்தையின் கைங்கர்யத்தில் அவனைக் கைப்பிடித்தவள். மேகலாவை சௌந்தரியுடன் ஒப்பிடக் கூட முடியாது. இதுவரை அவன் சந்தித்திருந்த எந்தப் பெண்ணும் எட்டமுடியாத சிகரத்தில் சௌந்தரி…

சௌந்தரியை அவன் இருபது வருடங்கள் கழித்து சந்திக்கப் போகிறான். சௌந்தரிக்குத் தங்கள் பெயர் தெரியுமென்பதே கூட அந்தக் காலத்தில் பெருமைக்குரிய விஷயமாகத்தானிருந்தது அவர்கள் கல்லூரி மாணவர்களிடத்தில். அவள் அந்தக் கிராமத்துக் கலைக் கல்லூரியில் இருந்திருக்க வேண்டியவளே இல்லை. அவள் அப்பாவின் அரசாங்க உத்தியோக உபயத்தில் அந்தக் கல்லூரிக்கு அந்தப் பேறு கிடைத்ததாகத்தான் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

பளீரென்ற ரோஜா நிறமும், பெரிய கண்களும், மூங்கில் போன்ற உடல்வாகும், நவநாகரீகமான உடைகளும் அவளுக்கு விசேஷ அந்தஸ்தினை வழங்கியிருந்தன. அவளும் அங்கே யாருடனும் ஒட்டாமல்தானிருப்பாள். கல்லூரி மணி அடிக்கும் நேரம் சரியாய் வகுப்புக்குள் நுழைவாள். அரை நிமிடம் கூடத் தங்காமல் வகுப்பு முடிந்தவுடன் கிளம்பிவிடுவாள். மூன்று வருடமாய் நட்பென்று ஒருவரையும் அருகில் சேர்த்ததில்லை. அவளின் அந்த ஆணவம் அவள் மேலிருந்த கவர்ச்சியை அதிகரிக்கவே செய்திருந்தது. எத்தனை சிலாகித்தாலும் நிலவைப் பிடித்துப் பையில் போட்டுக் கொள்ள முடியாதென்பது போல சௌந்தரியும் தான் தொடும் தூரத்தில் இல்லை என்பது குமரனுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தாலும் தன் முதல் கவிதையின் பாடுபொருளாக அவள் அமைந்தது அவனுக்குத் தவிர்க்கமுடியாததாகத்தானிருந்தது.

நான்கு வாரங்களுக்கு முன்பு சௌந்தரியிடமிருந்து மின்னஞ்சல் வந்த போது ஆனந்தக் கூத்தாடினான் குமரன். "நம்பவே முடியலைடி, மேகி. என் வெப் சைட்டைப் பாத்துட்டு எழுதிருக்கா. நான் அவ கூடப் படிச்சேன்னு அவளுக்குத் தெரியும்கறதே எனக்கு அதிசயமாயிருக்கு" என மேகலாவிடம் பகிர்ந்து கொண்டபோது, "சும்மா உங்களையே ஏன் குறைச்சு சொல்லிக்கணும்? எந்தக் கூட்டத்திலயும் நீங்களும்தான் பளிச்சின்னு தெரிவீங்க" என்று விட்டுக் கொடுக்காமல் பேசினாள் அவன் மனைவி

கேள்விகளோடு அவன் உடனே அனுப்பிய மடலுக்கு பதிலொன்றும் சொல்லாமல் சட்டென்று நேற்று, "உங்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று சொல்லவில்லை. அமெரிக்காவிலிருந்து நேற்றுதான் சென்னை வந்தேன். நுங்கம்பாக்கத்தில் அப்பா வீட்டிலிருக்கிறேன். நாளை காலை உணவுக்கு வாங்களேன்" என விபரம் தந்திருந்தாள். குமரனுக்கு அதிலிருந்து தலைகால் புரியவில்லை.

"நீயும் வாடி, மேகி" என்றான்

"எதுக்கு? நீங்க வழியறதை வேடிக்கை பாக்கவா?" அவள் புன்னகையோடுதான் கேட்டாள். ஆனால் குமரனுக்கு அது சுருக்கென்று குத்திற்று.

"போக வேண்டாங்கறியா?"

"ச்சீ… லூசு" என்று அவன் நெற்றியில் கைவைத்துச் செல்லமாய்த் தள்ளிவிட்டுப் போய்விட்டாள்

நினைவுகளில் நீந்தியபடி குமரன் எழுந்து பால்கனிக்கு வந்தான். நட்சத்திரங்களின் பிரகாசம் இன்னும் மங்கியிருக்கவில்லை. பறவைகளும் இன்னும் விழித்துக் கொண்டிருக்கவில்லை. எட்டு மணிக்கு முன் எழுந்திராத தான் இப்படி நாலரைக்கெல்லாம் எழுந்து கொண்டு எப்போது விடியும் எனக் காத்திருப்பது அவனுக்குக் கொஞ்சம் விநோதமாகவும் குறுகுறுப்பாகவுமிருந்தது. மேகலா இப்படி யாரோ ஒருவனிடம் மையல் கொண்டால் தனக்கு எப்படியிருக்கும் என்று எண்ணியபோது வெட்கமாயிருந்தது. மீண்டும் படுக்கையில் விழுந்து இறுக கண்களை மூடிக் கொண்டு சிவன் கோவிலிலிருந்து வந்த தேவாரத்தில் கவனத்தைச் செலுத்த விழைந்தான்

காலையில் ஆர்வமில்லாமல் கிளம்புவதாய் சிரத்தையோடு பாவனை செய்தான். நல்ல உடைகளைத் தவிர்த்து சுமாரானதைத் தேர்ந்தெடுத்து உடுத்துக் கொண்டான். முள்ளாய் முளைத்திருந்த தாடியை வேண்டுமென்றே மழிக்காமல் விட்டான். மேகலாவைப் பார்க்கத் துணிவின்றி, "கிளம்பறேண்டி, மேகி" என்று எங்கோ பார்த்துச் சொல்லிவிட்டு வாயிலை நோக்கி விரைந்தான்

"என்ன பண்றீங்க நீங்க? இங்கே வாங்க" மேகலா அதட்டலாய்ச் சொன்னாள். அவன் தயக்கமாய் அருகில் வந்ததும், அவனைப் பார்வையால் அளந்து, "அய்யய்யே, ஆதர்சக் காதலியைப் பார்க்கப் போற அழகா இது? போங்க, முதல்ல போய் ஒழுங்கா ஷேவ் பண்ணிட்டு வாங்க" என்று பாத்ரூமுக்கு இழுத்துப் போனாள்.

"என்ன கண்றாவி டிரஸ் இது. கழட்டுங்க, நான் வேற எடுத்துத் தர்றேன்" என்றவளிடம் குமரன், "உனக்கு பயமா இல்லையாடி?" என்றான் குறும்பாக.

"எதுக்கு? அவ கூட ஓடிப் போயிருவீங்கன்னா? போனா போய்க்கோங்க. ஆனா சொத்து எல்லாம் என்னுது. ஞாபகம் இருக்கில்லே?" கலகலவெனச் சிரித்தபடிச் சொன்னாள்.

ஷேவ் பண்ணி முடித்தபோதுதான் நடு நெற்றியில் துருத்திக் கொண்டிருந்த ஒற்றை நரைமுடியை கவனித்தான். அதனைத் தனிமைப் படுத்திப் பிடுங்கப் போகையில் என்னவோ தடுத்தது. தலையைக் கொஞ்சம் கலைத்து அதனை மறைக்க முயன்றான். ஆனாலும் அது சௌந்தரிபோலப் பளிச்சென்று வேறுபட்டுத் தெரிந்தது. நரை தன்னை முதிர்வாய்க் காட்டுமோ என்று அசௌகரியமாயிருந்தது குமரனுக்கு. மீண்டும் அதனைப் பிடுங்க யத்தனித்து மனசாட்சியின் அதட்டலில் நிறுத்திக் கொண்டான்.

நரை மனமுதிர்வின் அடையாளமென்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என தன்னைச் சமாதானம் செய்து கொள்ள முற்பட்டாலும் மணல் துகள்கள் இதயத்துக்குள் சிக்கிக் கொண்டாற் போல நரநரவென்ற உறுத்தலாயிருந்தது. எனினும் வேறு யோசனைக்கு இடம் தராமல் ஆஃப்டர் ஷேவைத் தடவிக் கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியேறினான். கை அனிச்சையாய் அந்த நரைமுடியை மறைக்க முயன்று கொண்டே இருந்தது.

மேகலா எடுத்து வைத்திருந்த உடைகளை அணிந்து கொண்டு, "ஓகேயா? கிளம்பட்டுமா?" என்றான் அவளிடம்.

இடுப்பில் கைகளை வைத்துப் பார்த்தவள், "ஏன் தலை இப்படிக் கலைஞ்சிருக்கு?" என்றபடியே அவன் கேசத்தை ஒழுங்குபடுத்தினாள்

முன்நெற்றியில் தனித்துத் தெரிந்த அந்த ஒற்றை நரையை விரலால் வளைத்துச் சட்டென நீக்கினாள்

"இந்த நரை உங்களுக்குப் பொருத்தமா இல்லை" என்றாள் அவன் முன் அதனை நீட்டி ஒரு சின்னப் புன்னகையோடு. மேகலாவின் காதோரம் கொத்தாய் நரைத்திருந்ததை அப்போதுதான் கவனித்தான் குமரன்

About The Author

1 Comment

Comments are closed.