"அப்பாடி! உடம்பெல்லாம் முறிச்சு முறிச்சு வலிக்கறது. ஒரு வேலையும் செய்ய முடியலை" என்றாள் அடுத்த வீட்டுக் கோமதி.
"அப்படியா? எதாவது டாக்டரைப் பாருங்கோ மாமி!" என்று கீதா சொல்ல, "எல்லாம் பாத்தாச்சு. பெயின் கில்லர்னு ஒண்ணைக் கொடுக்கிறார். அதுல வயிறுதான் கெட்டுப்போறது" என்றாள் கோமதி பதிலுக்கு.
"மாமி! நான் ஒரு கோயில் சொல்றேன். என் ஓர்ப்படி போன வாரம்தான் போய்ட்டு வந்தா. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அங்க ஒரு தடவ போய்ட்டு வாங்கோ!"
"அங்கன்னா எங்கே? விவரமாச் சொல்லு! அப்பத்தானே போக முடியும்?"
"சரி சொல்றேன் கேளுங்கோ!" என்று கீதா நரம்புக் கோளாற்றை நீக்கும் அருள்மிகு சோளீஸ்வரர் ஆலயம் பற்றி விவரித்தாள். நாமும் அதைக் கேட்கலாமே!
சென்னை திருவள்ளூர் அருகே, தென்மேற்கில் சுமார் 18 கி.மீ தொலைவில் உள்ள பேரம்பாக்கம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்தக் கோயில். அரக்கோணம் வழியாகச் சென்றால் கிழக்கே 30 கி.மீ தூரத்தில் வரும். இறைவன் அருள்மிகு சோளீஸ்வரர் ஆவார். தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் கூவம்.
பல கோயில்கள் நம் நோய் தீர்த்து அருள் புரிகின்றன. அதில் இதுவும் ஒன்று. சோழர் காலத்துக் கோயில். ஊரின் உண்மைப் பெயர் பெரும்பாக்கம். இப்போதோ பேரம்பாக்கம் என்று மருவிவிட்டது.
இந்தக் கோயிலில் நியமமாகப் பூஜை செய்தால் நரம்புத் தளர்ச்சி முதலான நரம்புக் கோளாறுகள் நீங்குமாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேண்டிக்கொண்டு, நோய் குணமாக மனதாரப் பிரார்த்தனை செய்து, ஈசனுக்கு வில்வமாலை அணிவித்து நெய் விளக்கும் ஏற்ற வேண்டும். இது போல் ஆறு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். வேண்டுதல் நிறைவேறி விட்டால் திரும்பவும் இங்கு வந்து முடிந்த வரையில் பல வகைகளில் வழிபாடு செய்து நேர்த்திக்கடனைச் செலுத்த வேண்டும். பால் அபிஷேகம், சங்காபிஷேகம், பதினோரு தடவை ருத்ரம் ஓதுதல் எனப் எதுவும் செய்யலாம்.
கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் அருள்பாலிப்பவர் பிள்ளையார். அருகில் காசி விசுவநாதர் வீற்றிருக்கிறார். பின், கருவறையில் மூலவர் சோளீஸ்வரர் அமர்ந்து அருள்புரிவதைக் காண முடிகிறது. அம்பாள் காமாட்சியும் தெற்குமுகமாய் வீற்றிருக்கிறாள். கல்யாண சுப்பிரமணியனாக முருகன் வள்ளி, தெய்வானையுடன் அழகு பூரிக்கக் காட்சி தருகிறார். பிரகாரத்தில் ஐயப்பனும் அமர்ந்திருக்கிறார்.
கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கி.பி 1112-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் பெயர் முதலில் குலோத்துங்கச் சோழீச்வரமுடைய மகாதேவர் என்பதாக இருந்தது. அம்பாளின் பெயர் காமாட்சி. இங்கு கிடைத்த கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. விஜயநகரத்தின் மன்னரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்திருக்கிறார். பக்தர்கள் கூட்டம் அதிகமாகி எல்லோரும் நேர்த்திக்கடன் செய்வதைப் பார்த்தால் பலருக்கு இங்கு நோய் தீர்ந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. நீங்களும் ஒருமுறை சென்று அருள் பெறலாமே!