2.
நானுனக்கு விஷம்,
நீயெனக்குப் பெருவிஷம்!
நீயெனக்கு விஷம்,
நானுனக்குப் பெருவிஷம்!
வேறெங்கும் இல்லை
நமக்கான படுகுழி:
எனக்கானது உன்னில்!
உனக்கானது என்னில்!
நீயும் நானும்
ஒழிந்துபோகும்வரை
ஒழியப்போவதில்லை
நம் தீரா ஓலம்!
3.
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய்
சதா பரிமாறிக்கொள்ளும்
அமிழ்தெனப் படுவதெல்லாம்
அமிழ்தம் தானா?
விஷமாவது விடுவித்திடக்கூடும்-
அமிழ்து?
4.
வலிகளின் வலைப்பின்னலால்
ஆனவொன்றை
"வாழ்வென"ச் சொல்லி
அதையே ஆடையாக்கி
முகத்தில் "பெருமை" பொங்கிட
வீதிவீதியாய்
ஊரூராய்
உலாத்திவரும்
உனக்கும் எனக்கும்
எப்போது உரைக்கப்போகுதோ
மெய்மை?