நம்மை அறிந்து கொள்வோம்(1)

*1இமய மலை முற்காலத்தில் கடலாக இருந்ததை யாராவது கற்பனையாவது செய்திருப்பார்களா?
(*1- சோவியத் நாடு-லெமூரியாக் கண்டத்தின் மர்மம் – ஏ.கொந்தராத்தோவ்)

இந்த இடத்தில் நமது எஸ்.ராமகிருஷ்ணன் தனது "தேசாத்திரி" என்ற உண்மைக் கட்டுரைத் தொடரில் எளிய மனிதர்களின் பொய்க்காத நம்பிக்கைகளைப் பற்றிக் கூறியிருப்பதைச் சிறிது பார்ப்போம்:

"விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய் சூரங்குடி என்ற கிராமத்தில், மழைக்காகத் தவளைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பத்திரிக்கை வைத்து அனைவரையும் அழைத்துக் கல்யாணச் சடங்குகள் அனைத்தும் செய்து வைத்தார்கள். சாந்தி முகூர்த்தத்திற்காகப் பின் கிணற்றிலும் விட்டார்கள்.

எளிய மனிதர்களின் நம்பிக்கை பொய்த்துப் போவதில்லை. எல்லா நாகரிகத்தையும் தாண்டி இன்னமும் நமது நிறைய கிராமங்கள் இயற்கையை மட்டுமே நம்பி இருக்கின்றன. எல்லா அழிவுகளையும் தாண்டி இயற்கை தங்களைக் காத்து விடும் என்று நம்புகிறார்கள். தவளைகள் சந்தோஷம் கொண்டால் மழை வந்துவிடும் என்ற நம்பிக்கை. இத்தனை நூற்றாண்டுகளைத் தாண்டியும் மனித மனத்தில் இன்னமும் ஆழமாக உயிர் வாழ்கிறது! அன்று கடும் மழை பெய்தது(!!??)
வாழ்வின் சரடுகள் எங்கெங்கோ புதைந்து கிடக்கின்றன. நாம் காண்பது அதன் வெளித்தோற்றத்தைத்தான்!"

இந்த மாதிரியான சமுதாயப் பாடங்களே நாம் நமது சந்ததியர்களுக்கு விட்டுச்செல்லப் போகும் ‘தமிழனென்ற’ அடையாளம்!
பிறகு தனி மனிதப்பாடங்கள் ! இவை நமது தற்போதைய புற வளர்ச்சிக்குக் காரணமானவை. மாறத்தக்கவை! இவைகளை நமது சந்ததியினர் நமது உதவி தேவையில்லாமல் தாமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ கற்றுக் கொள்வர்.

இக்கட்டுரைகளின் நோக்கம்- நம்முடைய சந்ததியினருக்கு, பழந்தமிழர் வாழ்ந்த வாழ்க்கை, நம்பிக்கைகள் ஆகியவற்றோடு, அவர்கள் விட்டுச்சென்ற, ஆனால் மறக்க அல்லது மறைக்கப்பட்ட, அறிவியல் பொக்கிஷத்தை, அறிமுகப்படுத்துவதேயாகும்.

இக்கட்டுரைகள்,

1.நம்பிக்கைகள் என்ற தலைப்புகளிலும்

2.வழிகாட்டும் ஆசான்கள் என்ற தலைப்புகளிலும்

3.ஒன்பது படிகளில் தமிழன் வரலாறு என்ற தலைப்புகளிலும்,

சிறு முயற்சியாக முதல் கட்டமாகத் தொடங்கப்படுகின்றன.

(சந்திக்கத் தொடங்குவோமா?)

About The Author