தம்மோட ‘மடை திறந்து’ என்ற கட்டுரையில நிலா அவர்கள் கேட்டிருந்த இந்தக் கேள்வி, என்னை ரொம்ப சிந்திக்க வச்சுது:-
"பணம் பற்றிய தேவையே இல்லாத, முழுக்க முழுக்க அன்னியர்களால் (ஷங்கரோட பயங்கரமான அன்னியன் இல்லைங்க… முன்னப்பின்ன தெரியாத மனுஷங்க) நிறைந்த ஒரு புது உலகத்தில நீங்க விரும்பறதை எல்லாம் செய்யற சுதந்திரம் இருந்தால் நீங்க என்னென்ன செய்ய விருப்பப்படுவீங்க?"
இந்த மாதிரி நான் ஒரு நாள் கூட யோசிச்சிப் பார்த்ததில்லை. காலையில எழுந்தா அரக்கப் பரக்க டிபன் செஞ்சு, சமையல் செஞ்சு, அவசரமா ஒரு காக்கா குளியல் குளிச்சி, கண்ணுல படற ஒரு புடவையை எடுத்துச் சுத்திக்கிட்டு சாப்பிட்டது பாதி, சாப்பிடாதது பாதின்னு அலுவலகத்துக்கு ஓடற ஓர் இயந்திர வாழ்க்கையே கதின்னு இருந்தேன்.
அவங்க கேட்ட அந்தக் கேள்வி, ‘என் மனசில தூங்கிட்டுட்டு இருந்த பல எண்ணங்களை எழுப்பி விட்டுடுச்சி’.(நன்றி பழைய சினிமாப் பாட்டு)
பணத்தேவை சுத்தமா இல்லாது போனா நான் என்ன செய்வேன்? எது என் மனதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு? அப்படீன்னு முதல் முறையா யோசிச்சுப் பார்த்தேன்.
அது சம்பந்தமா என் மனசில ஓடின எண்ணங்களை அப்படியே ஒன்னு விடாம இங்கத் தந்திருக்கேன். அதனால தான் இதுக்கு நனவோடைன்னு தலைப்பு வைச்சிருக்கேன். (நனவோடைன்னா ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மனதில எழும் எண்ணங்களையும் உணர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதுதல்).
முதல் வேலையாப் பெளர்ணமி நிலவில மொட்டை மாடியில போய் உட்கார்ந்துட்டு பால் நிலாவை ரசிக்கணும்.
என்னோட சின்ன வயசில ஒரு பாட்டி நிலாவில உட்கார்ந்திருக்காங்கன்னு யாரோ சொன்னதை நம்பிக்கிட்டு ஒரு பாட்டியைக் கற்பனை பண்ணிக்கிட்டு நிலாவைப் பார்ப்பேன். நிஜமாவே ஒரு பாட்டி கால் நீட்டிக்கிட்டு அதுல உட்கார்ந்திருக்கிறது மாதிரி எனக்குத் தெரியும். இப்ப அதை நினைச்சா சிரிப்பா வருது.
போன மாசம் கூட நிலாவில ஒரு குழந்தையோட மேரி மாதா தெரியறாங்கன்னு யாரோ ஒரு புரளியைக் கிளப்பி விட, அதை உண்மைன்னு நம்பிக்கிட்டு அலவலகத்துல என் கூட பணிபுரியற ஒருத்தி கேட்டா. “மேடம், நிலாவில மேரி முகம் தெரியுதாமே, நீங்கப் பார்த்தீங்களா"ன்னு?
நாம யாரையாவது மனசுல கற்பனை பண்ணிக்கிட்டு, நிலாவைப் பார்த்தா அப்படியே தெரியும்னு, என் சின்ன வயசு அனுபவத்தை அவக்கிட்ட சொன்னேன்.
மொழி படத்துல கூட நாம யாரையாவது ரொம்ப மிஸ் பண்ணினா, அவங்களை நினைச்சிக்கிட்டு நிலாவைப் பார்த்தா, அவங்க முகம் தெரியும்னு அந்தக் கதாநாயகன் சொல்வான்:
நிலாவைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தர் நிலாவைப் பத்திப் பாடின பாட்டு எனக்கு ஞாபகம் வரும்:
"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோல முழுதும் காட்டிவிட்டால்
காதற் கொள்ளையிலே
இவ்வுலகம் சாமோ?
…..
சொக்க வெள்ளிப் பால்குடமோ
அமுத ஊற்றோ?
காலை வந்த செம்பரிதிக்
கடலில் மூழ்கி தணல் மாறிக்
குளிரடைந்த ஒளிப்பிழம்போ?"
எவ்வளவு அழகான வர்ணனை பார்த்தீங்களா? அக்காலத்திலிருந்தே கவிஞர்களோட கற்பனைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி வர்ற வெண்மதியோட தண்ணொளிக்கு மயங்காதவங்க யாரு இருப்பாங்க?
சங்க காலத்தில பாரி போரில் கொல்லப்பட்ட பிறகு, கபிலரின் பாதுகாப்பில் இருந்த பாரி மகளிரும், இந்த நிலாவைச் சாட்சியா வைச்சுத்தான் தம் மனத்துன்பத்தைப் பதிவு செஞ்சிருக்காங்க..
"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத்திங்கள் இவ் வெண்நிலவில்
வென்றெரி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே"
.
விண் முகில்களுக்குள் ஓடி ஒளிஞ்சும், பின் மெல்ல தலையை நீட்டி எட்டிப் பார்த்தும் ஒளிஞ்சான் பிடிச்சு விளையாடும் நிலாவை எவ்ளோ நேரம் பார்த்துக்கிட்டிருந்தாலும் எனக்குச் சலிக்காது.
நிலாவுக்கு அடுத்து விண்ணில் அங்குமிங்கும் வேகவேகமாக ஓடும் கவின் முகில்களைப் பார்க்கிறப்போ, ஒரு சினிமாப்பாட்டு என் நினைவுக்கு வரும்:
"முகிலினங்கள் அலைகிறதே,
முகவரிகள் தொலைந்தனவோ?
முகவரிகள் தொலைந்ததினால்
அழுதிடுமோ, அது மழையோ?"
என்ன அழகான கற்பனை?
நிலாவை அணு அணுவா ரசிச்சிட்டு, அப்புறம் நம்மளைப் பார்த்துக் கண் சிமிட்டுகிற நட்சத்திரத்திங்களை, ஒவ்வொன்னாப் பார்த்து ரசிக்கணும்.
வானத்தை அண்ணாந்து பார்த்தவுடனே, நான் முதல்ல கண்டுபிடிக்கிற கிரகம் வெள்ளி தான். இருட்டில வைர மோதிரம் போல பளிச்சுன்னு தெரியற அதைச் சுலபமா நான் கண்டுபிடிச்சுடுவேன்.. அதற்கப்புறம் லேசான சிவப்புக் கலர்ல தெரியற சனியையும் கண்டுபுடிச்சிடுவேன்.
நட்சத்திரங்கள்ல நான் எளிதாக் கண்டுபிடிப்பது ஓரியன்தான். பட்டம் மாதிரி இருக்கிற சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம் இதெல்லாம் என் அப்பாவோட உதவியால நான் தெரிஞ்சிக்கிட்டேன். நேரங் கிடைக்கிறப்போ இன்னும் சில நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்க அப்பாக்கிட்ட கத்துக்கணும்.
அப்புறம் சாப்பாடெல்லாம் எடுத்துட்டுப் போயி மொட்டை மாடியில வைச்சு நிலாச் சோறு சாப்பிடணும்.
நிலாச் சோறுன்னவுடனே, என் சின்ன வயசுல என் வயசையொத்த புள்ளைகங்களோட சேர்ந்துக்கிட்டு, பாட்டி வீட்டுல கொட்டம் அடிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வருது. பாவம். இந்தக் காலத்து பசங்களுக்குத் தாம் இதுக்கெல்லாம் கொடுப்பினையே இல்லை..
கோடை விடுமுறை விட்டவுடனே என் தங்கை, தம்பிங்க சகிதம் பாட்டி வீட்டுக்குப் போனேன்னா, பள்ளி திறக்க ரெண்டு நாள் இருக்கும் போதுதான் ஊருக்குத் திரும்புவேன். மாமா வீட்டுல பத்து பதினைஞ்சு வாண்டுங்க ஒன்னா சேர்ந்து அடிக்கிற லூட்டி இருக்குதே, அதை இப்ப நினைச்சாலும் மனசு சந்தோஷத்தால நெறைஞ்சிடுது..
நல்லா ஓடியாடி விளையாடறதுன்னால, செம பசியெடுக்கும். ஒரு பெரிய குண்டான் போன்ற பாத்திரத்துல எங்கப் பெரியம்மா(அம்மாவோட அக்கா) நிறைய சாதத்தைப் போட்டு, அதுல சாம்பாரைக் கொட்டிக் கிளறி உருண்டையாப் புடிச்சி எங்க அத்தனை பேரையும் வட்டமா உட்கார வைச்சி நடுவுல அவங்க உட்கார்ந்துக்கிட்டு கதை சொல்லிக்கிட்டே ஒவ்வொருத்தருக்கும் ஒரு உருண்டை கொடுப்பாங்க. கதையைக் கேட்டுக்கிட்டே சாப்பிட்டு முடிக்கிறது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.
சாப்பிட்டு முடிச்சப்புறம் முற்றத்துல அந்த நிலா வெளிச்சத்துல பாயைப் போட்டு எல்லாரும் படுத்துக்கிட்டு, கதை பேசிக்கிட்டே இருப்போம். எப்பத் தூங்குவோம்னு எங்களுக்கே தெரியாது.
மின்சாரம் வர்றதுக்கு முந்தின காலத்து வாழ்க்கையைப் பத்தியும் நிலாச்சோறு பத்தியும் திரு சொ.ஞானசம்பந்தன் அவர்கள் மிகவும் சுவையா எழுதின கட்டுரை ஏற்கெனவே நிலாச்சாரலுல வந்திருக்கு. அதைப் படிக்க விரும்புறவங்களுக்காக, கீழே அந்த இணைப்பைக் கொடுத்திருக்கேன்:.
https://www.nilacharal.com/ocms/log/08170914.asp
அந்த மாதிரி நாட்கள் இனி வருமா? நம்ம பசங்களுக்குப் பொழுது போய், பொழுது விடிஞ்சா, கணிணி. அது இல்லேன்னா தொலைக்காட்சி. இப்ப இதை ரெண்டையும் பின்னுக்குத் தள்ளிட்டு செல்போன் முன்னுக்கு வந்துட்டுது. முழிச்சிட்டுக்கிருக்கிற பெரும்பான்மை நேரம் செல்போனைத் தான் நோண்டிக்கிட்டிருக்குங்க. எஸ்.எம்.எஸ் அனுப்புறதும், அது வந்திருக்கான்னு பார்க்கிறதும் தான் வேலை.
பிட்ஸா, சிப்ஸ், பர்கர், கேக், ஐஸ் கிரீம்னு தின்னுட்டு உடம்புக்கு எந்தப் பயிற்சியும் இல்லாம, இப்படி ஒரே இடத்துல ஒட்கார்ந்தே இருக்கிறதினால, நீரிழிவு நோய் இந்தப்புள்ளைங்களுக்கு வருது. இந்தியாதான் நீரிழிவு நோயோட தலைநகரம்னு சொல்றாங்க.
இப்போ சின்னச் சின்னப் பசங்களுக்குக் கூட சர்க்கரை வியாதி, இருதயக் கோளாறு வருது. அதுக்கு அவங்க சாப்பிடற பாஸ்ட் புட் தான் காரணம். சாப்பாட்டுக்குக் காய்கறி கீரை இதெல்லாம் தொட்டுக்காம, எப்பப் பார்த்தாலும் எண்ணெயில பொரிச்சது அல்லது வறுத்ததைத் தின்கின்றனர்.
கோடை விடுமுறை விட்டவுடனே, இந்தக் காலத்துப் பெற்றோரும் பசங்களைப் பாட்டி தாத்தா வீட்டுக்கு அனுப்பாம, மத்த புள்ளைங்களோட சேர்ந்து விளையாட விடாம, ஏதாவது கோர்சில சேர்த்து விட்டுடுறாங்க. புள்ளைங்க அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாவும் இருந்தா மட்டும் போதுமா? அவங்க உடம்பு ஆரோக்கியமா இருக்க வேண்டாமா? சுவரை வைச்சுத் தானே சித்திரம் எழுத முடியும்? இப்பல்லாம் தெருவில புள்ளைங்க ஒண்ணா சேர்ந்து விளையாடற காட்சியையே பார்க்க முடியல.
நிலாவைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சி, எங்கேயோ தறி கெட்டுப் போயிக்கிட்டிருக்கிற, என் மனக் குதிரையைக் கடிவாளம் போட்டுத் தடுத்து நிறுத்தி, விஷயத்துக்குத் திரும்பறேன்.
அடுத்து பழைய சினிமாப் பாடல்களைப் போட்டுக் கேட்கிறதுல இருக்குதே ஒரு சொகம், அது தனிச் சொகம்.
‘நெஞ்சில் நின்றவை’ அல்லது ‘இரவின் மடியில்’ அப்படீங்க பேரில அந்தக் காலத்துல வானொலியில ராத்திரி பத்து மணிக்குப் பாட்டுப் போடுவான். விளக்கை அணைச்சிட்டு படுத்தப்புறம் அமைதியான அந்த இரவில, அந்தப் பாடல்கள்ல அப்படியே மனசு ஒன்றிக் கேட்டு ரசிக்கிற சொகம் அலாதி சொகம்தான்.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.’ இந்தப் பாசமலர் பாட்டை எத்தினி முறை கேட்டாலும் அந்த அண்ணன் தங்கச்சி பாசக் கதையை அசை போட்டு மனசு கனமாகும்.
"வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய்,
துணையுடன் வந்தாய்,
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க"
நெஞ்சில் ஓர் ஆலயப் படத்தின் இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த உன்னதமான டாக்டர் கதாபாத்திரத்தை நினைச்சி மனசு உருகி கண்ணுல தண்ணி வந்திடும்.
"உள்ளத்தின் கதவுகள் கண்களடா, அந்த
உறவுக்குக் காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு, அந்த.
ஒருத்தியை உயிராய் மதித்துவிடு"
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா"
எவ்வளவு கருத்துள்ள பாட்டுக்கள்! இப்போதுள்ள சினிமா பாட்டுக்களில் இசைக்கருவிகளின் சத்தம் அதிகமாகி என்ன பாடுகிறார்கள் என்றே புரியவில்லை.
கதையோடு ஒன்றிய அந்தக் காலப் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. அதிலும் சுசிலாவோட இழையிற அந்த இனிமையான குரலைக் கேட்கிறப்ப காதுல தேன் பாயும். இப்ப அந்த மாதிரியான கிளாசிகல் பாட்டெல்லாத்தையும் ரீமிக்ஸிங்குற பேரில, டிரம்ஸைப் போட்டு அடிச்சி கும்மாங்குத்துப் பாட்டா மாத்திக்கிடிருக்காங்க. வேற புதுசா குத்துப் பாட்டு எழுதிக்கிட்டுப் போங்க. யார் வேண்டாம்னு சொன்னாங்க?. அத விட்டுட்டு, பழைய அருமையான பாட்டுக்களை ஏன் இப்படிச் சிரச்சேதம் பண்றீங்க?
பாட்டுக்கு அப்புறம் எனக்குப் புடிச்சது தோட்டம். இப்பல்லாம் தண்ணி ஊத்த நேரமில்லாம, நான் வைச்ச பாதிச் செடிங்க காய்ஞ்சு போச்சு. நாம பார்த்துப் பார்த்து வளர்க்கிற ரோஜாச் செடியில ஒரு மொட்டு வந்துச்சுன்னா. எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா? தெனந் தெனம் அந்த மொட்டைப் பார்த்து அது என்னிக்கு விரியும்னு காத்திருந்து, விடிஞ்சும் விடியாத ஒரு காலைப் பொழுதில கொஞ்சூண்டு விரிஞ்சி பனித்துளி பட்டு சிலிர்த்திருக்கிட்டிருக்கிற ரோஜாப் பூவைப் பார்க்கும் போது, அதன் நறுமணத்தை நுகரும் போது மனசில ஒரு விதமான புத்துணர்ச்சி பரவும். அந்தப் பூவைப் பறிக்கக் கூட மனசில்லாம, செடியிலேயே வைச்சு அதன் அழகை ரசிக்கிறது இருக்கே, அந்த இன்பத்தை வார்த்தையால விவரிக்க முடியாது.
அதுக்கடுத்து பறவைகளை நோட்டம் விடுறது எனக்குப் பிடிச்ச விஷயம். நான் சின்னப்புள்ளையா இருந்த காலத்துல, எங்க வீட்டு முற்றத்துல நெல்லைக் கொட்டிக் காய வைப்பாங்க. அந்த நெல்லைக் கொத்தித் தின்ன கூட்டங் கூட்டமா சிட்டுக்குருவிங்க வரும். இந்தக் காலத்துல சிட்டுக்குருவியைப் பார்க்கிறது ரொம்ப அபூர்வமாப் போயிடுச்சி. நம்மூர்ல மட்டும்தான் சிட்டுக்குருவியைப் பார்க்க முடியலேன்னு நான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா அந்த இனம் உலகம் பூராவும் அழிஞ்சிக்கிட்டு வருதுங்கிற தகவலு எனக்கு போன வருசம்தான் தெரிஞ்சுது. அந்தக்குருவி இனத்தைக் காப்பாத்த ஒவ்வொரு வருஷமும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கிறாங்க. இந்த இனம் அழியறதுக்கு முக்கிய காரணம் நம்மூர்ல அங்கங்க இருக்கிற செல்போன் டவர்தானாம்.
இந்த இனத்தைக் காப்பாத்த நம்மால முடிஞ்சது ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்ட நான், என் வீட்டு காம்பவுண்டு சுவரில அப்பப்ப கொஞ்சம் அரிசி தூவி வைக்கிறேன். ஒரு கிண்ணத்துல தண்ணி வைக்கிறேன். அதுங்க கூடு கட்ட வசதியா என் வீட்டுத் தோட்டத்தில, செடி கொடிகளை வளர்த்து வைச்சிருக்கேன். எங்க தெருவில இப்போ நாலு சிட்டுக்குருவிகள் இருக்குதுங்க.. அதுகளைப் பார்க்கும் போது நம்ம பால்ய காலத்துத் தோழிகளைப் பார்க்கிற மாதிரி மனசு சந்தோசமாயிடுது. அதனாலதான் ஒரு பழைய பாட்டில் கூட,
"சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி
சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சு
போன கணவன்
வீடு திரும்பலை,"ன்னு சிட்டுக்குருவியைத் தோழியா நினைச்சி தன் துன்பத்தைப் பகிர்ந்துக்கிறா ஒரு தலைவி.
(என்னோட ஆசைகள் இன்னும் இருக்கு. நீங்க விரும்புனா தொடர்ந்து எழுதறேன்)
“
ஒவ்வொரு பெண்ணின் ஏக்கத்தையும் பிரதிபலிக்கும் உங்கள் நனவோடை தெளிந்த நீரோட்டம் போல் என் மனதிலும் பாய்கிறது. அற்புத உணர்வு வெளிப்பாட்டைப் பாராட்டுகிறேன்.
மடை திறந்ததன் மூலம் நனவோடை பாய்ச்செய்த நிலா அவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்.
உங்களது பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா!