சாலையோரம் கொட்டி வைத்திருந்த மணற்குவியலில் விழுந்ததால் வெளிக்காயம் ஏதும் படாவிட்டாலும் சாகரி மயங்கி வீழ்ந்திருந்தாள். நல்ல வேளையாக அருகிலேயே மருத்துவமனை இருந்ததில் உடனடியாக முதலுதவி தரப்பட்டது.
இரண்டு நாட்கள் தொடர் மயக்கத்திற்குப் பின் விழித்தெழுந்த சாகரி, அந்த நிலையிலும் சுரேஷைப் பார்த்துப் பூரித்துப் போனாள். மறுகணம் தனக்கு நடந்த விபத்து நினைவுக்கு வந்ததும் பதட்டமானாள்.
"சுரேஷ்… அந்தக் குழந்தைக்கு ஒண்ணும் ஆபத்திலையே?"
"இல்லம்மா.. அவ பாதுகாப்பாத்தான் இருக்கா! ஆபரேஷன் முடிஞ்சி இன்னிக்குத்தான் கண் விழிச்சிருக்கே, நீ பதட்டப்படாதே, ஓய்வெடுத்துக்கோம்மா"
"ஆபரேஷனா?" அப்போதுதான் தன் வயிற்றின் குறுக்கே போடப்பட்டிருந்த கட்டை உணர்ந்தவளாய்ப் பதறினாள். "ஐயோ, இதென்ன வயித்துல கட்டு? சுரேஷ், சுரேஷ்.. நம்ப பாப்பாக்கு ஒண்ணும் ஆகலைதானே?"
சுரேஷ் பதிலளிக்காமல் மௌனமாக இருந்ததைப் பார்த்தும் அவளுள் அமிலம் சுரந்தது… "சுரேஷ்….. ஐயோ, நீங்க ஊர்ல இருந்து வரதுக்கு முந்தின நாள்தானே டாக்டர் கிட்ட போய் உறுதிப்படுத்திக்கிட்டு வந்தேன். நம்ப பிள்ளைக்கு இவ்ளோ அல்பாயுசா?"
"இன்னமும் சரியாக உருவாகாத குழந்தையின் சிதைவுக்கே அலமலந்து போகிறவள் இனி தனக்குக் குழந்தையைச் சுமக்கும் வாய்ப்பே இல்லை என்று அறிந்தால் எப்படித் தாங்குவாள்?" தனக்குள் துடித்தான் சுரேஷ்.
நரக வேதனையுடன் இரண்டு மாதங்கள் கழிந்தன. தங்களுக்கென வாரிசு உருவாகும் வாய்ப்பே இல்லாமல், விபத்தில் பலமாக அடிபட்டு கருப்பையை அகற்றிவிட்ட கொடுமையை சாகரிக்குப் புரியவைப்பதற்குள் பெரும்பாடுபட்டுத்தான் போனான் சுரேஷ். எந்த உணர்ச்சி மிகுந்த கண்களைப் பார்த்து மயங்கினானோ, அதே கண்களில் இப்போது கடலைப் போல் எப்போதும் கண்ணீர்தான்!
"சாகரி…" சுரேஷின் குரல் ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு வானத்தை வெறித்துக் கொண்டிருந்த சாகரியின் கவனத்தைக் கலைக்கவில்லை.
அருகில் நெருங்கி மெதுவாகத் தோள்களில் கையை வைத்து மீண்டுமொரு முறை மிக மென்மையாக "சாகரி, அழுதது போதும்மா.. கிளம்பு" என்றான். வெறுமனே அவனை ஒருமுறை வெறித்து விட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பிய சாகரியின் தலையைக் கோதினான். "சாகரி, கிளம்புடா… நாம ஒரு இடத்துக்குப் போகணும்" என்றான்.
”ம்ப்ச்.. நான் எங்கயும் வரலே.."
"உனக்கு என்னைப் பத்தித் தெரியுமில்லே, உன்னோட நல்லதுக்குத்தானே சொல்வேன், கிளம்பும்மா.." மெல்ல வற்புறுத்தினான் சுரேஷ்.
ஏனோதானோ என்று ஒரு புடவையைச் சுற்றிக்கொண்டு கிளம்பிய சாகரி, சுரேஷ் தன்னை அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்தும் திகைத்துப் போனாள்.
ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த அந்தப் பெரிய வீட்டின் முன் "நந்தவனம்" என்று குழந்தையின் கிறுக்கலில் ஒரு பெயர்ப் பலகை தொங்கியது. குளுமையான மரங்கள் சூழ்ந்த அப்பெரிய வீட்டின் முன் சின்னஞ்சிறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுரேஷைப் பார்த்ததும் ஆரவாரமாக ஓடி வந்த குழந்தைகள், உடன் சாகரியைப் பார்த்தும் சற்றே தயங்கினார்கள். அவர்களில் ஒரு சுட்டிக் குழந்தை மட்டும் சுரேஷிடம் "இவங்கதான் அம்மாவா?" என்று ரகசியம் பேசினாள்.
"அம்மாவா?" அந்த வார்த்தையில் சிலிர்த்துப் போனாள் சாகரி. திகைப்போடு சுரேஷைப் பார்த்தாள்.
"ஆமாம் குட்டி, இவங்கதான் உங்க அம்மா… " என்றவாறு அதைத் தூக்கிக் கொண்டு முத்தமிட்டான்.
"சாகரி, நமக்குப் பிறகு நம்மோட சேவையைத் தொடர்ந்து செய்ய வாரிசில்லையே, ஒரு குழந்தையைச் சுமக்கற பாக்கியம் உன் வயிற்றுக்கு இல்லாமப் போச்சேன்னு நீ படற துன்பம் எனக்குப் புரியுது. இனிமே அந்தக் கவலை உனக்கு வேண்டாம், இந்த ஒரு குழந்தைக்கு மட்டுமில்லே, இங்க இருக்கற எல்லாக் குழந்தைகளுக்குமே நீதான் அம்மா, நான்தான் அப்பா…"
"இந்தக் குழந்தைகள் இல்லத்தை நடத்திட்டிருந்த பெரியவர் சமீப காலமா ரொம்ப உடம்பு முடியாமப் போய் தன்னோட தேவைகளுக்கே பிறர் தயவை எதிர்பார்த்துக்கிட்டிருக்கார். ஐந்து வருஷங்களுக்கு முன்னாடி தன் வீட்டுக்கு முன்னாடி கிடத்தப்பட்டிருந்த ஒரே ஒரு குழந்தையோட ஆரம்பிச்ச இந்த இல்லத்துல இப்போ 23 குழந்தைகள். தனக்குப் பின்னாடி இவங்களை எல்லாம் யாரு பார்த்துப்பாங்கற கவலையே அவருக்குப் பெருசா இருந்துச்சி. தற்செயலா ஒரு நண்பர் மூலமா அவரைப் பத்திக் கேள்விப்பட்ட நான் இந்த இல்லத்தை நேர்ல வந்து பார்த்தும், இதை நடத்த வேண்டியது இனிமே நம்ப பொறுப்புன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ முறையா இந்த இல்லத்தை தத்தெடுத்தாச்சி."
"நமக்குன்னு வாரிசு இல்லைன்னு கவலைப்பட்டியே, நமக்குப் பிறகு நம்ப பணியைத் தொடர எத்தனை வாரிசுகள் பார்த்தியா?" உணர்ச்சிவசப்பட்டதில் குரல் கரகரத்தது.
சுரேஷின் கையில் இருந்த குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்ட சாகரி நெகிழ்ந்து போனாள்.
"ஒரு அரும்பு மலர்வதற்கு முன்னமே கருகி விட்டதை எண்ணி துடித்துக் கொண்டிருந்த தன் முன் இன்று எத்தனை மலர்கள்!" இறைவன் தன்னைப் படைத்ததன் காரணத்தை உணர்ந்தவளாய் மெய் சிலிர்த்தாள் சாகரி.