சித்திரம் பேசுதடியில் "வாள மீனுக்கு" என்றொரு பாடல். ‘அஞ்சாதே’வில் "கண்ணதாசன் காரைக்குடி", "கத்தாழக் கண்ணால" – இன்னும் இரண்டு சகிக்க முடியாத கானா பாடல்கள். இதோ வரப்போகின்றது இயக்குனர் மிஷ்கினின் மூன்றாவது திரைப்படம் – நந்தலாலா! இம்முறை எத்தனை கானா பாடல்கள் என்று யோசிப்பதற்கு முன்னால், நிற்க!
"போதும் கானா பாடல்கள். எனக்கு ஐந்து பாடல்கள் வேண்டும். எல்லாம் மெலடிகளாக இருக்க வேண்டும். காதை அடைக்கும் வாத்தியங்கள் ஏதும் இருக்கக் கூடாது. பாடல்களைக் கேட்டால் யாரோ தாலாட்டுவது போலவே இருக்க வேண்டும்” என்று மிஷ்கின் இசைஞானியிடம் கேட்டுக்கொண்டிருப்பார் போல!! ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் ராஜா. பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகின்றது. ஒரே மாதத்தில் ராஜாவின் இரண்டாவது ஆல்பம்.
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
இளையராஜாவின் பியானோ இசை மீட்ட, சீக்கிரமே பாடல் நம் காதுகளில் புகுந்து விடுகிறது. ராஜாவின் குரலில் எத்தனை வித்தியாசம்! திடீரென்று அவருக்கு இருபது வயது குறைந்து விட்டது போன்ற உணர்வு. அழகான வரிகள் – நா.முத்துகுமார். அருமையாக வேதாந்தம் பேசுகின்றார். பாடலைக் கேட்டு முடிக்கும் போதே, கை தானாக பாடலை ரீவைண்ட் செய்து விடுகிறது!
ஒண்ணுக்கொண்ணு
எத்தனை நாளாகி விட்டது – ஏசுதாசின் குரலை கேட்டு! ஹை பிட்ச் எல்லாம் தராமல், அவர் குரலிற்கு ஏற்றாற் போல், இளையராஜா அவரை அற்புதமாக பயன்படுத்தியிருக்கின்றார். மு.மேத்தாவின் அற்புதமான வரிகளில் அன்பின் சிறப்பு அழகாய் வெளிப்படுகிறது. "கண்கள் இல்லா மனிதருக்கு கால்கள் என நாம் நடந்தால், நம் பூமியில் அனாதை யார்?" சரி தான்!
(குறிப்பு: திரைப்படம் இரண்டு அனாதைகளின் கதை என்ற பேச்சு அடிபடுகிறது! அவரவர் அன்னையை தேடும் கதையாம். ஆம், பத்து வருடங்களுக்கு முன் வந்த ஜப்பானிய திரைப்படத்தின் தழுவல்! (படத்தின் பெயர் – கிகுஜிரோ)
தாலாட்டு கேட்க நானும்
இளையராஜாவின் மெல்லிய குரலில் ஆரம்பிக்கிறது. தாயைத் தேடும் ஒருவன், அவள் கிடைக்கும் நேரத்தில் பாடும் பாடலோ? பாடலை முத்துலிங்கம் எழுதியுள்ளார். தாயிடம் பேசுவது போலவே முழுப் பாடலும் அமைந்திருக்கின்றது!
கை வீசி நடக்குற
பழனிபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை விஜய் ஏசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர் ஒரு பட்டாளமே பாடியிருக்கின்றது. மிகவும் ஜாலியான ஒரு பாடலை ராஜா தந்திருக்கின்றார். அதிகம் இரைச்சல் இல்லாமல், தாளம் போடவைக்கும் வேகமான ஒரு பாடல்.
ஒரு வாண்டு கூட்டமே
சிறுவன் யாதேஷ்வரனின் கீச்சுக் குரலில் ஆரம்பிக்கின்றது பாடல். சீக்கிரமே ராஜா சேர்ந்து கொள்கிறார். கபிலன் பாடலை எழுதியுள்ளார். ஒரு பெரிய வாண்டு கூட்டமே பாடலைப் பாடியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இன்னும் ஒரு ஜாலியான பாடல். நடுவில் வரும் ஃபிடில், வயலின் போன்ற இசையெல்லாம் – ராஜாவிற்கே உரித்தானது! திடீரென்று ராஜா குரலை மாற்றி குழந்தை போல பாடுவதும் – ஹப்பா ஹப்பா!! அறுபத்தைந்து வயது மனிதருள் இத்தனை புத்துணர்ச்சியா!!
குறவர் பாடல்
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஒரு முழு நீள நரிக் குறவர் பாடல், இசைத்தட்டில் இடம் பெற்றுள்ளது. ஆக்கமும் செயலும் சரோஜா அம்மாள். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற இயக்குனரின் எண்ணம் தெள்ளெனத் தெரிகின்றது. வாழ்த்துக்கள்!
சரி – ஒரு துணுக்குச் செய்தி. முழுப் படத்தின் ஆடியோவையும் வெளியிடுவார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்! முழுப் படத்தின் ஆடியோவா? ஏன்?
சில நாட்களாக திரைப்பட உலகில் பேச்சு – இந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் வார்த்தைகளே கிடையாதாம். ஆங்கிலத்தில் சொன்னால் – மைமிங்!! அதை உறுதிப்படுத்தும் விதத்தில் வந்திருக்கும் செய்தி என்னவென்றால், கடைசிக் காட்சியில் மட்டுமில்லாமல் படத்தின் கடைசி ஐம்பது நிமிடங்களும் மைம்தானாம்! எவ்வளவு துணிச்சல் இயக்குனருக்கு! இந்த மாதிரி சூழ்நிலைகளுக்கு ராஜா பின்னியெடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு!
“
Yesterday I saw the flm as a preview. The songs are not included in the film expect Onnukonnu, thalattu ketka naanum.
As you descriped Ilayaraja had work tremendously. He is very peculiar in the re-recording. Hats of Ilayaraja.