3.
அதீதா என்பது
என் அதியற்புதப் பரவசத்தின்
என் அதியுன்னதப் பிரார்த்தனையின்
என் பெரும்பேரானந்தத்தின்
குறியீடு நண்பா!
மேலும்
என் மரத்துப்போன தழும்பொன்றில்
அரூபமாய் ஒழுகும்
மெல்லிய கவிதையாய்
என் மௌன அழுகையின்
துயர இசையாய்
தாங்கவொன்னா வலியொன்றின்
உருமாறிய இன்ப அதிர்வாய்
கொடியதோர் துக்கமொன்றின்
குயில்பாட்டாய்
இன்னும் பிறவுமாய்
இருப்பது அதுவே!
என்னைப் பித்தன் என்று எண்ணிவிடாதே:
நாணயத்தின் ஒருபக்கத்தில் மட்டும்
வாழ்பவன்தான் பித்தன்!
ஒரே க்ஷணத்தில்-
என் ஆனந்தத்தின் துக்கமாய்
என் அன்பின் வெறுப்பாய்
என் நன்மையின் தீமையாய்
ஆவதென் அதீதா.
அது என் பௌர்ணமி
அதேபோலவே
என் வளர்பிறையும் தேய்பிறையும்
அதுவே எனக்கு!
4.
தொண்ணூறு சதவீதம் கண்ணீராலும்
ஐந்து சதவீதம் குழப்பத்தாலும்
சூழப்பட்ட நம் வாழ்வை நினைத்தால்
என் கண்களில்
குருதிவழிகிறது நண்பா!
மீதமுள்ள
ஐந்து சதவீத வாழ்வில்
என்னை நிரப்புபவள் அதீதா
உன்னை நிரப்ப
ஏதாவது வைத்திருக்கிறாயா நீ
துப்பாக்கிகளையும்
இன்னபிற
கொலைக்கருவிகளையும் விடுத்து?
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“