நட்பு

என் வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
இறுதிப் பக்கம் வரை தொடர வேண்டிய நம் நட்பு
ஏனோ
ஆரம்பித்த சில பக்கங்களிலேயே
முற்றுப்புள்ளியை விரும்பி வாங்கிக்கொண்டது!!!

அன்று உன் கோபத்தையும் ரசித்தேன்,
இன்று
உன் புன்னகையை ஏற்கக்கூட வெறுக்கிறேன்!!

மாற்றம் ஒன்றே நிரந்தரமானது
எனும் பழமொழியை
நம் நட்பின் மூலம் பொய்யாக்க விரும்பினேன்…
ஆனால் என் எண்ணத்தை அல்லவா பொய்யாக்கி விட்டாய்!!!

அன்று விரும்பி விரும்பிப் புரட்டிய உன் பக்கத்தை
இன்று திருப்பிப் பார்க்கவே மனம் யோசிக்கின்றது…
இருப்பினும் உன் பக்கத்தைக் கிழிக்க என் கைகளுக்குத் தெம்பில்லை!!!

ஏனெனில்,
நம் கடந்த கால நட்பின் நினைவுகளால்
உன் பக்கத்திற்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் இன்றும்…

உன்னைப் பற்றி எழுதும் இந்த வார்த்தைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கவே தடுமாறுகின்றேன்…
வைக்கும் ஒவ்வொரு முற்றுப்புள்ளியும்
உன்னைப் பற்றி எழுத மீண்டும் ஒரு தொடக்கப் புள்ளியாய் மாறுகின்றது…!!!

மற்றவர்கள் இந்த வரிகளுக்குக்
‘கவிதை’ எனப் பெயர் சூட்டுகையில்,
நீயோ கவிதைக்கு மறுபெயர் கற்பனை என்கிறாய்…
இந்தக் கவிதையின் இறுதி வார்த்தைக்காக இன்னமும் தேடுகின்றேன்…
அட, தமிழ் வார்த்தைகளையே மறந்துவிட்டேன்…!!!

என் கண்களில் நீ இருப்பதால்தானோ
ஏனோ என் கண்ணீரில்
உப்பின் சுவை!!

இந்த உலகம் போட்டி நிரம்பிய உலகமாம்
நான் மட்டும் எப்படிப் போட்டியே இல்லாமல்
மீண்டும் மீண்டும் தோற்கிறேன் உன் அன்பில்!!!

உனக்காகவே கண்ணீர் சிந்தும் இந்த இதயத்திற்கு
எப்படிப் புரியவைப்பேன்,
என் கல்லறைதான் இந்தக் கவிதைக்கு
இறுதி வரி என்று!!!…

About The Author

1 Comment

Comments are closed.