நட்பின் விலை

"அவசியம் வரணும்!" என்றபடி, பத்திரிக்கையை எழுந்து நின்று கையில் கொடுத்தான் சேகர்.

மலர்ச்சியாய் வாங்கிக் கொண்டேன்.

"கட்டாயமா உங்களை எதிர்பார்க்கிறோம்!"

சேகரின் மனைவி என் மனைவியிடம் குங்குமச் சிமிழை நீட்டினாள். புவனாவின் முகத்தில் எந்த மாறுதலும் இல்லை. ஒப்புக்குத் தொட்டு நெற்றியில் வைத்துக் கொண்டாள். சேகரைப் பின்பற்றி வாசலுக்குப் போனேன்.

"அப்புறம்… எப்படி ஏற்பாடெல்லாம்…?"

"ம், இதுவரை ஒண்ணும் பிரச்னை இல்லே."

"ஜவுளி எல்லாம் எடுத்தாச்சா?"

"ம், அதுலதான் கொஞ்சம் கூடிப் போயிருச்சு."

தோளைப் பற்றி அழுத்தினேன்.

"கவலைப்படாதே! நல்லபடியா முடியும்."

"என்னங்க… போவலாமா?"

புவனாவும் வாசலுக்கு வந்தாள். சேகரும் மனைவியும் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டனர். டாட்டா காண்பித்து விட்டு உள்ளே திரும்ப முயன்றேன்.

"என்ன? தனியா அழைச்சிட்டு போயி… கிசுகிசுப்பு?" என்று சிடுசிடுத்தாள்.

"என்ன…?"

"அதான்… உங்களை வாசலுக்கு அழைச்சுக்கிட்டுப் போனாரே, ஏன் அதை ஹால்லயே வச்சு பேசக் கூடாதா?"

"புவனா! நீ ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டே. ஏற்பாடெல்லாம் எந்த அளவுல இருக்குன்னு விசாரிச்சேன். அவ்வளவுதான்!"

"என்ன சொன்னாரு? புலம்பியிருப்பாரே? பணம் கேட்டாரா? இங்கே பாருங்க! எனக்குத் தெரியாம, அவங்க கேட்டாங்கன்னு எதையாச்சும் செஞ்சீங்க… அப்புறம் இருக்கு!"

கோபத்துடன் உள்ளே போய் விட்டாள்.

எனக்குத்தான் பதற்றமானது. சேகருக்குப் பணப் பிரச்னையா…? ஏன் என்னிடம் கூடச் சொல்லவில்லை? இத்தனை வருட நட்பில் இந்த உரிமை கூட எனக்குத் தரவில்லையா?

காலை அலுவலகம் போனதும் முதல் வேலையாக ஃபோன் செய்தேன்.

"அவரு இன்னிக்கு வரலீங்க!"

"லீவா… தகவல் எதுவும் சொன்னாரா?"

"பொண்ணு கல்யாண விஷயமா அலையறாரு. அவ்வளவுதான் தெரியும்."

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு நேரே அவன் வீட்டிற்குப் போனேன். அவன் மனைவி சுகந்தி மட்டும் வீட்டில் இருந்தாள்.

"வாங்கண்ணா…"

"வரது இருக்கட்டும். எங்கே அவன்…?"

"வெ… வெளியே போனாரு."

"எப்ப வருவான்?"

"தெரியலே…" மென்று விழுங்கினாள்.

"குடிக்கக் கொஞ்சம் தண்ணி" என்றேன்.

உள்ளே போய்த் திரும்பியபோது நான் சோபாவில் அமர்ந்திருந்தேன். கை நீட்டித் தண்ணீர்ச் சொம்பை வாங்கிக் கொண்டேன்.

"அப்படி உட்காரு!" என்றேன் குரலில் அழுத்தத்துடன். பட்டென்று அமர்ந்து விட்டாள்.

"என்ன பிராப்ளம்?" என்றேன் மெல்ல.

"வந்து…"

"இங்கே பாரு! நான் இப்ப உள்ளே வரும்போது ‘வாங்க அண்ணா’ன்னு கூப்பிட்டது உதட்டு அளவிலயா, இல்லே… உள்ளத்திலேர்ந்தான்னு இப்ப நீ பேசப் போற வார்த்தைகள்தான் முடிவு செய்யும். புரியுதா?"

சத்தியத்தின் கனம் தாள முடியாததுதான். சட்டென்று கண் கலங்கி விட்டாள்.

"பணப் பிரச்னைதான்!"

"எவ்வளவு வேணும்?"

"இருபதாயிரம்."

யூகித்து செக் புத்தகத்தைக் கையோடு எடுத்து வந்திருந்தேன்.

"இந்தா… கையெழுத்து மட்டும்தான் போட்டிருக்கேன். அக்கௌண்ட்ல முப்பதாயிரம் வரைக்கும் இருக்கு."

"வே…ணாம்…" குரல் பிசிறியது.

"ஏன்…?" என்றேன் புரியாமல்.

"அண்ணிக்குப் பிடிக்காது. தெரிஞ்சா அவ்வளவு நல்லா இருக்காது."

"நீ ஏன் சொல்லணும்? இது என்னோட பணம். நான் தரேன். அவளுக்கு இதுல என்ன சம்பந்தம்?"

"ஏற்கனவே தாறுமாறாப் பேசிட்டாங்க" என்றாள், அதற்கு மேலும் அடக்க விரும்பாமல்.

"எ…ன்ன…!" உள்ளூர அதிர்ந்தேன். பண நெருக்கடி என்று சுகந்தியை என்னுடன் பேச வீட்டிற்கு அனுப்பியிருக்கிறான். அவள் வந்த நேரம் புவனா மட்டும் வீட்டில். அவள் மட்டும் என்ன அந்நியமா என்ற உணர்வில் வந்த விவரம் சொல்லப் போக, புவனா நறுக்குத் தெறித்தாற்போலப் பேசிவிட்டாளாம்.

"நட்பு வேற, பண விஷயம் வேற. ஆம்பளைங்களுக்குத்தான் அறிவு கிடையாது. நீயாச்சும் எடுத்து சொல்லக் கூடாதா? இந்த மாதிரி கேட்டு வரது உனக்கே சரின்னுபடுதா? ஏதோ பழகின தோஷத்துக்கு இப்படி ஒரு தண்டனையா?"

இத்யாதி விமர்சனங்கள்.

விஷம் விழுங்கிய நிலையில் அமர்ந்திருந்தேன்.

ஆண்களைப் போலப் பெண்கள் அறிவையும் அன்பையும் குழப்பிக் கொள்வதில்லை. அடுத்தடுத்த வீடானாலும், நெருங்கிய உறவானாலும், பஸ் டிக்கெட் எடுத்தால் கூட நீ தனி… நான் தனிதான். இந்தக் கணக்கு முறைகள் புதிர்தான் என்றாலும், புரியாதவை அல்ல.

ஆனாலும் சேகருக்கும் எனக்கும் உள்ள நட்பின் வலிமை புரியாதவளா…? ஏன் இப்படிப் பேசி எங்களைக் கொச்சைப்படுத்தி விட்டாள்?

"சரி… எத்தனை நேரமானாலும் காத்திருந்து சேகரைப் பார்த்துட்டே போறேன். ஒரு நல்ல செயலுக்கு எதை வேணும்னாலும் செய்யலாம். செய்யிற வழி நேர்மையா இருக்கணுமே தவிர, அடுத்தவங்களுக்குப் பிடிச்சு இருக்கணும்னு கட்டாயம் இல்லே" என்றேன் அசையாமல் அமர்ந்து.

இன்றுதான் சேகர் பெண்ணுக்குத் திருமணம். நூறு ரூபாயில் ஏதோ எவர்சில்வர் பாத்திரம். கிப்ட் பேப்பர் சுற்றிப் பளபளத்தது. புவனாவின் செலக்ஷன். பட்டுப்புடவை சரசரக்க அவளும் தயாராக நின்றாள்.

"என்னங்க… பரிசு பிடிச்சிருக்கா?"

"ஏ ஒன்!" என்றேன்.

"எதுக்குமே ஒரு அளவு இருக்கு. உங்க நண்பர் வீட்டுக் கல்யாணங்கிறதாலே நூறு ரூபா என்னோட எஸ்டிமேட்!" என்றாள் பெருமையாக.

"போகலாமா?" என்றேன் அடக்கிக் கொண்ட புன்முறுவலுடன். நட்பின் விலை புரியாதவள்!

About The Author