எழுந்து
மெதுவாய்
ஓர்
அடி
எடுத்து
வைத்தான்…
அம்மா…
காலில் பட்ட கல்லடியில்
நகங்கள் உடைந்து
இரத்த நதி
இனியோர் அடியும்
எடுத்து வைப்பதா
ஊசலாடும் உயிரையும்
ஒழித்துப் போடுவதா
என்று
மூளை அடுக்கிலிருந்து
அபாயச் செய்திகள்
அவசர கதியில் அலறின
மனமோ
அட…
இன்னும் எனக்குள்
இரத்தமுண்டோ என்று
சந்தோசம் கொண்டது
கோபத்தோடு….
அடுத்த
அடி
எடுத்து
வைத்தான்…
அய்யோ….
இப்போது
இடறியவன் விழுந்தது
பாம்புகளும் தேள்களும்
நட்டுவாக்காலிகளும்
கடித்துக் குதறும்
படுபாதாள நரகத்தில்
திரும்பி ஓடடா
மடையா என்று
அறிவு
துப்பாக்கி ரவைகளாய்
இராணுவ ஆணையிட்டது
மனமோ…
தரையைப் பெயர்த்து
வானத்தில் வீசவும்
வானத்தை உடைத்துக்
கடலுக்குள் புதைக்கவும்
தன்மான வெறிகொள்ள….
எழுந்தான்
நரம்புகளில் புகுந்த
ஆத்திரம் முறுக்க…
நடந்தான்
எலும்புகளில் நுழைந்த
மும்முரம் விரட்ட…
கால்களில்
கற்கள் அடிபட்டு
கோவென்று அலறின
மிதிபட்ட தளத்திலேயே
விசஜந்துக்களெல்லாம்
மறுபிறப்பில்
பார்த்துக்கொள்கிறேன்
என்று
சபதமிட்டுச் செத்தன
நடந்தான்
நடந்தான்
அட…
வெளிச்சம்!
முன்பு எப்போதும்
கண்டிராத
மகோன்னத வெளிச்சம்!
* (ஜூன் 2003)
‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“