நடந்தான் நடந்தான் (1)

இருட்டுகள் திரண்டு
இரக்கத்தைக் கழித்து
இறுக்கிக் கட்டிய
இருட்டோ இருட்டு

வெளிச்ச தாகத்தை
விக்கலாய்க் கக்கவும்
வக்கற்ற நிலையில்
அவன் உயிர்
.

காதுக் கதவு தொடக்
காற்றேறிய ஓசைகள்
கால் தடுக்கிக் கால் தடுக்கிக்
கருச்சிதைவாக…

கண்முன் நகரும்
வண்ணக் காட்சிகள்
கருந்திரை விரிப்பில்
கரியோவியங்களாய் ஓட…

நாசிக்குள் நுழைந்த
நரக நாற்றமும்
சாதிக்க வழியற்று
விக்கி விக்கி அழுதபடி
வெளியேறிப்போக…

ஈரம் செத்த நாக்கு
ருசிமொட்டு கெட்டு
பல்லிடுக்கில் வெட்டுப்படப்
பரிதவிக்க…

துக்கத்துக்கும்
தூக்கத்துக்கும் இடையில்
தூது சென்ற எண்ணங்கள்
தூள் தூளாகித்
தொலைந்துபோக….

மனக்குகைகளில்
பயமென்னும் வவ்வால்கள்
கீச்சுக்கீச்சென்று
கத்திக்கொண்டு
அலையோ அலையென்று
அலைந்தன
.

ஆம்
மனிதனை முதலில்
பயம்தானே
பாசத்தோடு பற்றிக்கொண்டு
பின்னடைய மறுக்கிறது

ஆயினும்…
காலமென்னும்
கோரைப்பல்லோ
பயத்தைப்
பக்குவமாய் மென்று
செரிமானச் சிறை தள்ளும்
வித்தை அறிந்த
வித்தகனாயிற்றே

தட்டில் விழும்
பிச்சையாய்ச் சேர்ந்த
சில்லறைத் தைரியங்கள்
தூரத்தில் மினுக்கும்
நட்பு நட்சத்திரமாய்
அழைக்க….

தானாகவா விட்டோடும்
இருட்டை
நீயன்றோ விரட்டவேண்டும்
என்ற ஞானக்கரம்
பிடறியில்
விரலச்சு பதிக்க…

‘பச்சை மிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author