நள்ளிரவில் டாக்டர் செய்த கூத்து
J.S. ராகவன் கொழும்புவில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அந்த அறை எண் 109. இரவு 10 மணிக்குத் திடீரென்று கதவு தட்டப்பட்டது. தூக்கக் கலகத்தில் எழுந்து கதவைத் திறக்கும்போது ஒருவர் பதட்டமாக உள்ளே நுழைந்து, “நீங்களா! ஏன் எழுந்து வந்தீர்கள்? மெதுவாக.. போய்ப் படுங்கள்” என்று படுக்கையில் தள்ளி, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார்.
ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு எல்லாம் சோதிக்க, ராகவன் துள்ளிக் குதித்து ‘என்ன ஆயிற்று?” என்று கேட்டார். என்ன ஆயிற்றா! நெஞ்சு வலி வரும்போது அலட்சியப்படுத்தக் கூடாது. அமைதியாக இருங்கள் என்றார் டாக்டர்.
“யாருக்கு?” என்றார் ராகவன். “என்ன.. கேலி செய்கிறீர்களா? ரூம் நம்பர் 106ல் ஒருவருக்கு நெஞ்சுவலி என்று அழைப்பு வந்ததே” என்றார்.
ராகவன் ”அவர்கள் சொன்னது சரிதான். நெஞ்சுவலி உள்ளவர் 106ல் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார். இது 109. நீங்கள் என்னை அவஸ்தைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார். டாக்டர் அவசரமாக 106க்கு ஓடினார்.
நீட்டி.. முழக்கி.. சொல்லி..
சிரிப்பு என்பது ஒருவரது அறியாமையிலும் இருக்கிறது. கல்கி சொன்ன ஒரு கதை.
நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம் இருந்தது. அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகளுக்கு குளத்தில் தவறி விழுந்து கால் ஒடிந்து விட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே, ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ’ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீபுஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளி கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணும் புரியறதோ?”
குப்பன் போய்ச் சொன்னான் சுருக்கமாக ‘மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான்’ என்று.
மோதிய நகைச்சுவை மலைகள்
அறிஞர்கள் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளும்போது மற்றவர் காலை வாரி விடுவார்கள். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். இருவரும் நகைச்சுவையாக மோதிக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு.
ஒரு சமயம், பெர்னார்ட்ஷா சர்ச்சிலுக்கு "இன்று நான் ஒரு பெரிய விழாவில் கலந்து கொள்கிறேன். நீங்களும் வருகை தாருங்கள், உங்கள் நண்பர்களுடன் – அப்படி யாராவது உங்களுக்கிருந்தால்! " என்று கிண்டலாக ஒரு கடிதம் அனுப்பினார்.
அதற்கு சர்ச்சிலின் பதில், "இன்று முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் – அப்படி ஏதாவது ஒன்று நடந்தால்!”
அரசியல் தலைவர்களின் சிரிப்பலைகள்
சர்ச்சிலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் சிறு பாலத்தைக் கடக்கும்போது எதிரில் வந்தவர் வழி கொடுக்காமல், "நான் முட்டாள்களுக்கு வழி கொடுப்பதில்லை“’ என்றாராம். சர்ச்சிலோ உடனே, "நான் முட்டாள்களுக்கு வழிவிடுவேன்” என்று சொல்லி வழி விட்டாராம்.
காந்தியிடம் ஒருமுறை கேட்டார்கள், "நீங்கள் ஏன் எப்போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்கிறீர்கள்?" அதற்கு காந்தி சொன்னார், "நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லை.. அதனால்தான்" என்று.
காமராஜர் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் காமராஜரைச் சந்திக்க வந்திருந்தனர். வந்தவர்கள் தலைவரிடம் தங்களுக்கு சுடுகாட்டுக்குச் செல்ல பாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ”நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
கலைஞரின் சந்தர்ப்பங்களுக்கேற்ற பதில்களும் சிந்தனையைத் தூண்டுவதோடு சிரிக்கவும் வைப்பவை.
"ஹெல்மெட் அணிவதை சட்டமாக்குவதை கொஞ்சம் தள்ளி வைக்கவேண்டும் எனச் சிலர் சொல்கிறார்களே?" என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது "தலையில் இல்லாதவர்கள் கூறுவார்கள்" என்று சொன்னார்.
“
நகைச்சுவை நிகழ்வுகல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிரது வாழ்த்துக்கால்