ஸ்ரேயாவை வெள்ளித்திரையில் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது! ஹிந்தி, ஆங்கிலம் என்று அம்மணி ஒரு ரௌண்ட் போயிருக்கின்றார். அப்போ தமிழில் படம் கிடையாதா? இல்லாமல் என்னவாம்! விக்ரமின் கந்தசாமி கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டதாக சொல்கிறார்கள். அப்படியே, விஷாலுடன் இணைந்து இன்னொரு படத்தையும் முடித்துவிட்டார் இப்படத்தின் பெயர்தான் தோரணை. விஷாலின் தந்தை தயாரிக்கும் இத்திரைப்படத்தை புது இயக்குனர் ஐயப்பன் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் மணிஷர்மா. அற்புதமான பாடல்களைத் தந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு. கேட்டுவிடுவோமே!
வெடி வெடி சரவெடி
பாட்டு ஆரம்பிக்கும் பொழுதே, திரைப்படத்தின் ‘ஓபனிங் சாங்’ என்று தெரிந்துவிடுகின்றது. நாயகன் தம்மையே புகழ்ந்து பாடும் பாடல் போல. ரஜினி, விஜய்க்குப் பிறகு விஷால் கூட இதைச் செய்ய வேண்டுமா? இதற்குத் தகுந்தாற்போல, விவேகாவும் வரிகளை எழுதியுள்ளார். "நான் சண்டக்கோழி" என்று விஷாலின் பழைய திரைப்படத்தை நினைவூட்டுகின்றார். பாடலைப் பாடியிருப்பவர்கள் ரஞ்சித்தும் நவீனும். குறிப்பிட்டுச் சொல்ல வேறொன்றும் இல்லை.
வா செல்லம்
அருமையான கிடார் பின்னணியில், காதலியிடம் ஆங்கிலத்தில் நாயகன் ஏதோ பேசுகின்றார். விஷாலின் குரல்தானே அது! அடுத்ததாக சினிமாவில் பாடவும் ஆரம்பித்துவிட்டாரா என்ன? (படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது நினைவிருக்கட்டும்!) இல்லை, இல்லை, அவர் பாடவில்லை. உதித் நாராயணன்தான் முழுப்பாடலையும் பாடியிருக்கின்றார். ட்யூன் பரவாயில்லை என்று சொன்னாலும், எங்கேயோ கேட்டது போலவே இருக்கின்றது. பா. விஜய், ரொம்பவும் எளிதான காதல் வரிகளை உபயோகப்படுத்தியிருக்கின்றார். உதித் வார்த்தைகளை எல்லாம் நன்றாக கடித்துத் துப்புகின்றார். என்றுதான் தமிழ்ப் பாடல்கள் இவரிடமிருந்து விடுதலை பெறுமோ!!
பட்டுச்சா
மீண்டும் ஒரு காதல் பாடல், இம்முறை கபிலனின் வரிகளில். சரணங்களுக்கு நடுவில் வரும் இசையில் அழகான வாத்திய பிரயோகம். ஆனால், அந்த அம்சம் சரணங்களில் மிஸ்ஸிங். வெறும் பீட்ஸை மட்டும் வைத்து பாடலை ஓட்ட முயற்சி செய்திருக்கின்றார். இருந்தாலும் பரவாயில்லை, ரசிக்க முடிகின்றது. விஜய் ஏசுதாசுடன் இணைந்து ஜனனி இப்பாடலைப் பாடியிருக்கின்றார். முன்பே சொல்லியிருக்க வேண்டும், இப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வாசனை தெரிகிறது. இருந்தால் என்ன, ரசிக்க முடிகின்றது.
பெலிகன் பறவைகள்
ஒவ்வொரு படத்திலும், ஒரு பாடலிலாவது, ரேடியோ ஜாக்கி போல ஒருவர் ஆங்கிலத்தில் ராப் செய்வது ஏதோ ஃபேஷன் போல ஆகிவிட்டது. மேற்கத்திய பாணியில் ஒரு காதல் பாடல். ஏதோ வித்தியாசமாக முயற்சி செய்திருக்கின்றார் மணிஷர்மா. பாராட்டுக்கள். பாடல் வரிகளைக் கேட்டாலே எழுதியது வாலி என்று தெரிந்துவிடும். ஆங்கில வார்த்தைகளுடன் தமிழ் வார்த்தைகள் கலந்து எதுகை-மோனை எழுதுவதில் இவரை மிஞ்ச முடியாது. பெலிகன் பறவைகள் பசிஃபிக் கடலோரம் நின்று கொண்டு, பீதோவென் ஸ்டைலில் "மைனர் ஸ்கேல்" "மேஜர் ஸ்கேல்" என்று இசை பயிலுமாம். இசை நூலகத்தை நூலிடையுடன் ஒப்பிடுவதாகட்டும், அதை கீபோர்டென்று சொல்வதாகட்டும், மனிதர் ஒரு கலக்கு கலக்கியிருக்கின்றார். ஹப்பப்பா!! எழுபத்தியெட்டு வயதில் எழுதும் பாடல், ஹும்! ரஞ்சித்தும் ரீட்டாவும் ஜோதியில் கலந்து கலக்கியிருக்கின்றார்கள். புதுமையான பாடல். அருமையான பாடல்.
வா செல்லம்
பரவாயில்லை, உதித் நாராயணனை சகிக்க முடியாதவர்களுக்காக, இந்தப் பாடல் "ரிபீட்டு!" தமிழ் தெரிந்ததால், அத்தனை பாவத்துடன் பாடியிருக்கின்றார் ரஞ்சித். பா.விஜய்யின் எளிய தமிழை இன்னும் அழகாய் ரசிக்கலாம்.
மஞ்சசேல மந்தாகினி
இந்தப் பாடலயும் பா.விஜய்தான் எழுதியிருக்கின்றார். வரிகள் எல்லாம் பரவாயில்லை, ஆனால் இசைதான் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கின்றது. வெறும் டப்பாங்குத்துதான். கமர்ஷியலாக இசையமைக்க வேண்டும் என்றால் இப்படி எல்லாம் செய்தாக வேண்டுமா?! அது சரி, ஸ்ரேயாவிற்கு ஆடை குறைப்பு செய்து, அவரை பேயாட்டம் ஆடச் செய்ய வேண்டாமா! மணிஷர்மாவின் பழைய ‘ஆல் தோட்ட பூபதி’ பாடலைப் போல இதுவும் ஹிட் ஆகும் என்ற நைப்பாசையா? எனக்கென்னவோ தியேட்டரில் நம் மக்கள் சீட்டை விட்டு எழுந்து தம் அடிக்கச் செல்லும் வாய்ப்புதான் ஜாஸ்தி என்று தோன்றுகிறது.
பாடல்களின் தோரணையெல்லாம் பரவாயில்லை. சிறிது இடைவெளிக்குப் பிறகு மணிஷர்மா மீண்டும் ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மகிழ்ச்சிக்குரிய விஷயம். என்ன, மணிஷர்மாவின் பழைய ஸ்டைல் மெலடிகள் ஒன்றிரண்டு இருந்திருக்கலாம்! பரவாயில்லை, ஏதோ புதிதாக முயற்சி செய்திருக்கின்றார். நன்று!
“