பாட்டி தன் விசிறியை வைத்து வானத்தில் தோன்றிய பெரிய நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டினாள். ஆஹ் ஷுங்கின் விலாவில் இடித்தாள்.
"அங்கே எத்தனை பெரிய நட்சத்திரங்களைப் பார்க்கிறாய், குட்டிக் கரடிப் பையா?", எனக் கேட்டாள் தன் பேரனிடம். சிறுவன் கவனமாக எண்ணினான். "ஆறு", என்றான்.
"ஆறு என்பது சரி தான்", என்றார் அப்பா. "ஆனால், முன்பு அந்தக் குழுவில் ஏழு இருந்தன. நமது பெருமைக்குரிய ஸூ ச்சீ தான் ஏழாவது நட்சத்திரமானது. இப்போது அது இல்லை. அது பற்றிய கதையை அம்மா சொல்லி நான் பல முறை கேட்டிருக்கிறேன். உன் பாட்டி வாயாலேயே அந்தக் கதையை நீ கேட்க வேண்டும்", என்றார் அப்பா. தன் அம்மாவின் முன்னால் பணிந்து நின்றார்.
"ஆமாம் மகனே, இளைய சமுதாயம் பழங்கதைகளை அறிவது நல்லது தான். தொலைந்து போன நட்சத்திர இளவரசியின் கதையை நான் சொல்கிறேன்", என்றார் பாட்டி தன் பட்டு விசிறியை முன்னும் பின்னும் ஆட்டியபடி.
"ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஸிங் வூ எனும் ஒரு நல்ல கிழவர் வாழ்ந்தார். வசிக்க ஒரு வீடோ, பணமோ இல்லாமல் பணக்கார வீடுகளின் முன்பு இருந்த முரசு ஒன்றை இசைத்து உணவு கேட்டு வந்தார்.
"ஒவ்வொரு இரவிலும் இந்தக் கிழவர் மலை மீதிருந்த கோவிலில் தங்கினார். அங்கு வழிபட வருவோர் தன்னிடம் கருணை காட்டுவார்கள் என்று நினைத்தார். நீட்டிய அவரது உள்ளங்கையில் ஒவ்வொரு முறையும் ஒரு காசு விழும் போதும் அதைக் கொண்டு அரிசி வாங்கி மற்ற பிச்சைக்காரர்களுடன் பகிர்ந்து கொள்வார்."
"இப்போது யு ஹுவாங் என்ற ஜேட் மாமன்னர் மேலுலகிலிருந்து ஸிங் வூவைப் பார்த்தார். கிழவரின் கருணையையும் அன்பையும் புரிந்து கொண்டு அதற்குரிய பரிசாக எதையேனும் தர வேண்டும் என்று நினைத்தார். போய் கிழவரை அழைத்து வர தன் தூதுவராக ஜேட் மாமன்னர் தன் ஏழு மகள்களில் கடைசி மகளான நட்சத்திர இளவரசியை அனுப்பினார்.
"என் வலக்கரத்தை நேசிப்பது போல நான் நேசிக்கும் என் செல்ல மகளே, நான் உன்னை ஒரு முக்கிய பணி நிமித்தம் பயணம் அனுப்பப் போகிறேன். இந்தப் பயணம் நீண்டதும் கடுமையானதும் கூட. இங்கே சௌகரியமாக நீ வசிக்கும் மாளிகையை விட்டுவிட்டுப் போக வேண்டியிருக்கும். ஆனால், ஒரு நற்செயல் புரிந்த மகிழ்ச்சி உனக்குக் கிட்டும். நிச்சயம் உன் பணி உனக்குப் பிடிக்கும்."
(மீதி அடுத்த இதழில்)
(‘மீன்குளம்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“