தேவதையோடு ஒரு போர்-(3)

யார் தெரியலையே பரமு. வெறிக்க வெறிக்கப் பார்க்கிறான். தாடியும் மீசையுமாய் பைத்தியமோ. எவராயிருந்தாலும் என்ன?

– இவன் சிரித்தான். ஆயிரம் சாபங்கள் வாங்கியும் அடங்காத இந்திரனை நானறிவேன். அறிந்தும் அறியாதவளாய் முயங்கிக் கல்லாய்ச் சாபமேற்கத் தயாரான அகலிகையை நானறிவேன். பூடகங்கள் ஏதுமில்லை. என் சிரிப்பைப்பார் வெள்ளையாய், மேன்மையாய் – பொய்களற்ற உலகம் புனிதமானது. நானும் கூட பொய்களைக் கடந்தவன். இந்தப் புனிதமான வேள்வி எனக்குச் சம்மதம்தான். அச்சமேது என் சினேகிதனே

காற்று மெல்லிய வருடலோடு இவனைக் கடந்து போனது. இலைகளைப் புரட்டி
தன்னோடு வெகுதூரம் இழுத்துச் சென்றது – காலத்தை விட வேகமாய் இன்னும் வேகமாய் –

‘உம்ம பொண்ணு வேண்டாம். சதா பிரமை பிடிச்சாற் போல தனக்குத்தானே சிரிச்சுக்கறா. அழறா. பைத்தியத்தைத் தலையில் கட்டிவிட்டீர். ஏழைப் பொண்ணாச்சே. அடக்கமா இருக்கும் வீட்டுக்கு ஒத்தாசையா இருக்கும்னு பண்ணிண் டோம். வைதீகம்னு தெரிஞ்சுதானே பண்ணிண்டா. ரெண்டாம்தாரம்னு தெரிஞ்சுதானே கழுத்தை நீட்டினா. ஏகப்பட்ட பூர்வீக சொத்து தினப்படி வரும்படி நகை நட்டு புடவை துணின்னு எராளமாத்தானே இருந்து ஆளப் பண்ணினது. இல்லே சாப்பாட்டுக்குக் கொறவச்சதா…. சதா மலங்க மலங்க மோட்டுவளையைப் பார்த்துண்டு… எனக்கு உம்ம பொண்ணு வாண்டாம்… எல்லாருமாச் சேர்ந்து என்னை ஏமாத்திட்டேள்…"

பரமு! எங்கே போயிட்டே. லாரி உனக்கு எமனா? பரமு பரமு என் பரமு. உன்னை அழிக்க முடியுமோ? ரங்கம் நன்னாத்தானே இருந்தே. என்னடி ஆச்சு உனக்குன்னு உலுக்கி எடுக்கறவாளை என்ன செய்ய. என்ன சொல்ல? உற்றுப் பார். நான் ரங்கமல்ல. இதுவரைக்கும் யாருக்குமே கிடைக்காத அனுபவங்களைப் பெற்றவள்.
விந்தைகளைப் பெற்றவள். க்ஷணத்தில் லாரி எமனாய் வந்தாலும் அவனை அள்ளிக்கொண்டு போனாலும் என் லயம் கலையுமோ. லட்சம்-கோடி வருஷங்களுக்கு அது நிரந்தரம். இந்தத் திருப்தியின் வெளிப்பாடுதான் இந்தப் புலம்பல், இந்த வெறித்த பார்வை. இந்த என் அற்புத மொழியாருக்கும் புரியாது.

ஓங்கி உயர்ந்து ஆகாசத்தைத் தொட்டுக் கொண்டிருந்த ஆலமரம் யாதொன்றையும் அறியாததுபோல் பாசாங்கு செய்து மனதுக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டிருந்தது. காலப் பெருவெளி தூய்மையாய் இருக்கட்டும். அதன் வேகம்கூட இதனினும் மேலான ஓர் அனுபவத்தின் பாய்ச்சலாக இருக்கட்டும்.

"மளமளனு வேலையாகட்டும். மூவாயிரம் அடி தோண்டணும் பதினேழு இடத்திலே. இருவது வருஷத்திற்கு தட்டில்லாமல் தண்ணீர் கிடைக்கும். நூத்து எழுபது கோடி ரூபாய் திட்டம். கவனமா இருக்கணும்."

சிகரெட் புகையோடு ஆணைகளையும் உஷ்ணமாய்க் கலந்து அந்தப் பிரதேசத்தையே அதட்டிக் கொண்டிருந்தான். எங்கும் பரபரப்பு. அவனுடைய இறுக்கமான முகத்திற்கும் அதட்டலுக்கும் எல்லோரும் பணிந்து நடுங்கிக் கொண்டிருந்தனர். பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும். நிறைய ஆட்கள் – துணையாக பளபளப்பான கார்கள், ஜீப்கள் லாரிகள், விசித்திரமான வடிவங்களில் கரிய எந்திரங்கள் – அவை அரக்கர்களைப் போல ஆவேசத்தோடு பூமியையே பிளந்துவிடுவதைப் போல உருமிக் கொண்டிருந்தன. கிறுகிறுவென பூமியைத் துளையிட்டுக் கொண்டிருந்தன. குவியல் குவியலாய் மண் முட்டுக்கள்… தோண்டி எடுத்தவை. எங்கும் பேரிரைச்சல் மாபெரும் யுத்தம் நடப்பதைப் போல்.

ஊர் அதிசியத்து நின்றது. வேடிக்கை பார்க்கக் கூடியது கலைந்தது. ஊருக்கு ஏதோ நல்லது நடக்க இருப்பதை உத்தரவாதமாய்ச் சொன்னது. பெரிய தொழிற்சாலையாம்.

வெளிநாட்டிலிருந்து வந்து நம்மூரை வளப்படுத்தப் போகிறார்களாம். ஆளாளுக்கு ஒரு யூகம் –
– தண்ணியை பாட்டிலில் அடைத்து லட்ச லட்சமாய் விற்கப் போகிறார்களாம். நம்மூர் ஆசாமிகள் எல்லோருக்கும் வேலையாம்.

நீரின் அடிப்படை மூலம்போல் ஒளிர்கின்ற ஒளி நானே. வருணன் நானே. எங்கே எதைத் தேடி எடுக்கப் போகிறீர்கள்? வராக அவதாரமாய் மூக்கைத் தேய்த்துக் கொண்டு என்ன தேடுகிறீர்கள்?

இவன் சிரித்தான் எட்டி நின்றுகொண்டு.

– வெளிநாட்டுக் கம்பெனியாம். குடி நீரை பாட்டிலில் அடைத்து விற்கப் போறாளாம் –
ஜானுப்பாட்டி வியந்து நின்றாள். ஜலத்தை விற்பதா. ஜலத்திற்கு விலையா. அக்கிரமமாயிருக்கே. அது தேவதைன்னா. தேவீன்னா…. கங்காதேவீ… காவேரித்தாய்… தேவதையை விற்கலாமோ… புலம்பினாள்.

அப்போ கோடையில்கூட ஆறு வற்றாது. பிரவாகமாய் ஓடும். அப்புறம் கோடாய் ஓடியது. என் காலத்திலேயே பார்த்தேன். மணலை ரெண்டு கையாலேயும் அகழ்ந்தால் ஊற்றில் நிமிஷமாய் பளிங்காய் வரும் ஜலம் அம்ருதம். அதுபோச்சு. கொல்லைக் கிணற்றில் கடகடனு ஜெகடை உருள்கிற சப்தமே சங்கீதம். இப்போ அதுவும் போச்சு. கிணறு வறண்டு கிடக்கு. அடியில் துளி ஜலமும் அசுத்தமாம். அதற்கு அசுத்தம் உண்டோ. எல்லா அழுக்கையும் சுத்தப்படுத்தும் ஜலத்துக்கு அசுத்தமா? அதுவே சூதகமா? வேண்டாத சாமான்களை யெல்லாம் தூக்கிப் போட்டு ரொப்ப வசதியான குப்பைத் தொட்டியாச்சு. பெரிய ஆழமான குப்பைத் தொட்டி. பிரம்மாண்டமா ஊருக்குக் கிழக்கே சமுத்திரம் மாதிரி ஏரியில் உசர உசரமாய் வீடுங்க வந்தாச்சு. இந்த ஊர்லே பதிமூணு குளம். எங்கே போச்சு எல்லாம்? இப்போ இதுவென்ன புது விபரீதம்? – பேச தன்னொத்தவர் எவருமின்றி தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள் ஜானுப்பாட்டி.

"யார்ர்ரா… டே… யார்ர்ரா அது சாமியார் மாதிரி. நிக்கறான் பாரு. பைத்தியமா ஏதாவது போட்டு அனுப்பு…" ஆபீசரைப் போலிருந்தவன் கூலிங்கிளாசைக் கழற்றிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டான். தாடி மீசையோடு கந்தலாய் நின்றிருந்தவனைப் பார்த்துவிட்டு அப்பால் போனான் அலட்சியமாய்.

இவன் உற்றுப் பார்த்தான். பார்வையில் மூர்க்கம் தெரிந்தது. தலையைக் கோதிக்கொண்டு தாடியைத் தடவிக் கொண்டு ஆலமரத்தடிக்கு வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். என்ன சேதி என்று இரண்டு குருவிகள் குசலம் விசாரித்தைக்கூட கண்டு கொள்ளாமல் சிரித்தான். சட்டென்று சிரிப்பு மாறியது. சினத்தில் கண்கள் சிவந்து துடித்தன.

(தொடரும்)

About The Author