சடசடவென ஆகாயத்திலிருந்து நீர்க்கம்பிகள் இறங்கின. பேய் மழை. இதுபோல் எப்போதுமில்லை என்ற ஆச்சர்யம் விரவியதாய் அசுர மழை – அதற்கு அனுசரணையாய் பளீர் பளீர் என ஆகாயத்தைத் தாறுமாறாய்க் கிழிக்கும் மின்னல்கள். தொடர்ச்சியான இடியின் கொடூர சப்தங்கள்.
– யார் பாபம் போக்குகிற வருணனோ. நீரில் நிறைந்து கலந்து கலந்து கிடக்கின்றவனோ, குறைவற்றவனோ அவன் இறங்கி வந்து மனித குலத்தைத் தூய்மையாக்கட்டும் –
ஊர் அரவமற்று வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டது. மழைக்கு அச்சப்படும் அவலம். அழகை மறுக்கும் பரிதாபம்.
ஏதுமே நடக்காததுபோல் மெல்ல நடந்து வந்து ஆலமரத்தடியில் நின்றான். அப்படியே சுருண்டு படுத்தான். உடம்பு முழுதும் மண் அப்பிக் கொண்டது. ஆகாயத்திற்கு ஏதோ சேதி சொல்வதுபோல் சற்றே லேசாகத் தலையுயர்த்திப் பார்த்துவிட்டுத் தூங்க ஆரம்பித்தான்.வானம் பொத்துக் கொண்டது. இறைஞ்சியும் விடாத பேய் மழை –
ரங்கம், டீ ரங்கநாயகீ. உனக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு. நல்ல இடமா வந்திருக்கு வாண்டாங்கிறயே. பையனுக்கு என்னடி கொறச்சல். சீர் செனத்தின்னு ஏதும் கேழ்க்கலே. பொண்ணைக் கொடுங்கோ போறும்கறா. மாசம் லட்ச ரூபாய் சம்பளமாம். கார் பங்களான்னு ஏகத்துக்கும் வசதி. நீயானா இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா தலையாட்டறே வேண்டாம்னு. இந்த புரட்டாசிக்கு முப்பத்தி ரெண்டாறது. இனிமே ரெண்டாம்தாரமா ஏதாவது கிழங்கட்டைதான் விதி.
"நான் தேவ மகள். இமயபுத்ரி, யாரை நான் விரும்பு கிறேனோ அவன் மட்டுமே சிறந்தவன், மேன்மையானவன்."
அப்பா செத்துப் போனார். அம்மா செத்துப் போனாள். அவர்களின் ஆயிரம் சாபங்கள் என்னை நரகக் குழிக்குள் அமிழ்த்தி வதைக்குமோ? சிரிப்பாய் இருக்கிறது. சொத்து பத்தெல்லாம் எப்படியோ எங்கேயோ போய்ச் சேர்ந்தது. இப்போ நீ அனாதை என்றார்கள். அப்படி எப்படியாவேன்? கிணற்று ஜகடை ஒலி குசலம் விசாரிக்கும். சரியாக நான்கு மணியளவில் முற்றத்து கம்பிவலையில் மூக்கை உரசிக் கொண்டு இரண்டு குருவிகள் ஏதோ செய்தி சொல்லிவிட்டுப் போகும். தொலைதூரத்திலிருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் என் சினேகிதத்தை இனம்கண்டு கண்சிமிட்டும். வேப்பமரம் திடீரென காற்றிலாடி பூச்சொறியல்களில் பூக்களையோ பழங்களையோ இரண்டுமில்லாதபோது சருகுகளையோ உதிர்க்கும். நான் அனாதையாமே!
வரிசையாக வருபவர்களை நிராகரித்துக் கொண்டிருப்பதன் காரணமேதும் புரியாமல் ஊர் திகைத்தபோது –
ஹேய்… என்றான் எங்கிருந்தோ, கம்பீரமான குரலில். சிலநேரம் மெல்லிய குரலில். சில நேரம் குரலற்ற ரகசியமாய் –
இருட்டில் கைவளையல்களின் ஒலி – முணுமுணுப்புகள். சல்லாப ஒலி. யாரது? அரவமற்ற பொழுதில் அரவமெழுப்பிக் கொண்டு –
இவனது கண்கள் இருட்டை ஊடுருவி துளைத்துப் பார்த்தன.
இத்தனை நாளா எங்கேடி இவ்வளவு கொள்ளை ஆசையை மனசில் மனசில் வச்சிண்டு…. எப்படிடீ எப்படிடீ… ஒண்ணும் தெரியாதது மாதிரி பார்த்தே…
ஆளைப்பார்த்தாலே பதுங்கினே. உன் ஆசை தவறல்ல. அதற்கு அர்த்தமிருக்கிறது ரங்கம். தகதகனு மின்னுகிற உடம்பு. அபாரமான ஸ்தனங்கள், நீண்ட கேசம், அதை அலட்சியமாய் முடிந்திருக்கும் லாவகம், சதா எதையோ தேடும் கண்கள், மல்லிகைப் பூவும் லேசான வேர்வையும் கலந்த மயக்கும் வாசனை. ததும்பி வழியும் அழகு. நீ ராஜகுமாரி. ஆகாயத்தில் பறக்கும் சுதந்திரப்பட்சி. எந்த பந்தங்களுக்கும் உட்படாதவள். வயசு கடந்தாலென்ன. அழகு அழியுமோ?
எப்படி நடந்ததிந்தக் குற்றம்… இதற்குட்பட்டது எப்படி! யாராலும் எப்போதுமே விளங்கிக் கொள்ள முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றா? மனநிலைப் பிறழ்ச்சியால் நேர்ந்ததா. அறங்கொன்றவளென்ற பெயரைத் தாங்கவா. தர்மம் தொலைத்த சண்டாளி என்று பட்டம் சுமக்கவா நடந்தது? ஊரே அதிசயம் கொண்டு நின்றது. நியாயம் பேசியது. இப்போதாவது புத்தி வந்ததே. இவளுடைய வயசுக்கு ராஜ புருஷனா கிடைப்பான். ரெண்டாம் தாரம்னா இளக்காரமா? பஞ்சு கனபாடிகளுக்கு ஏகப்பட்ட சொத்து. வேலிக்கணக்கிலே நிலம் நீச்சு, வில்வண்டி, அரண்மனை மாதிரி நாலு வீடு. வயசான காலத்திலே பஞ்சுவுக்கும் துணை. ஏகப்பட்ட ஐவேஜுக்கும் வாரிசு. அதிர்ஷ்டக்காரிதான்…
ரங்கம் உனக்குப் போறுமோ. எப்போதும் ரெண்டு மாச தாடி, சாளேசுரக் கண்கள். இடுக்கிக் கொண்டு யாருன்னு பார்க்கற கோணலான பார்வை. தலை பொட்டல். ஏராள சுருக்கங்களோடு நெற்றி – உடம்பு, நீர்க் காவியேறிய பஞ்ச கச்சம். மூக்குப்பொடி வாசனை உனக்குப் பிடிக்குமோ ரங்கம்… உனக்குப் போறுமோ? மலையென ஐஸ்வர்யம் இருந்தென்ன, மணிக்கணக்கா ஜபம் சதாமூக்கைப் பிடிச்சுண்டு காயத்ரி. அமாவாசை தவறாம தர்ப்பணம். மாசத்திற்கு ரெண்டு சிரார்த்தம், வாரத்திலே நாலு நாள் உபவாசம். சவுந்தர்ய லகிரி. துர்க்காஷ்டகம்… இதெல்லாம் உனக்குச் சரியாகுமோ. பொன்னிற இறகுகளோடு மேகங்களுக்கிடையில் சஞ்சரிக்கும் உனக்கு இது சரியோ? பஞ்சாபகேச கனபாடிகள் உனக்குப் பொருந்திய புருஷனாவாரோ?
உன்னருகே பிரம்மாண்டமாய் நிற்கும் என்னைத் தவிர உனக்குச் சரியானவர் யார்? பரந்த தோள்கள். முறுக்கேறிய புஜங்கள், ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் உசரம்.
ராக்ஷசனாய் அழகியவனாய் காமம் கொப்பளிக்கும் கண்களோடு உன்னை அடைய ஆட்கொள்ள அய்க்கியமாக சதா துடித்துக் கொண்டிருக்கும் என் அருகாமையை அலட்சியப்படுத்த முடியுமோ. புணர்ச்சிக்கான விதிகள் இல்லை. காலங்கள் இல்லை. லயமல்ல அது. வேகம் – புயல் – உனக்குப் பிடித்தமானது. நம்மைச் சுற்றிய இரவுகள் சூடானதை யாரறிவார். வேல் கம்பாய் உன்னில் கீறும் அந்த மத்திம ஒலிகளின் சுகத்தை யாரும் அறிந்திலர். நம்மைத் தவிர.
இந்த நினைப்பு அறம் தாண்டியது. தர்மம் கடந்தது என்றாலும் எந்த நியதிகளுக்கும் அடங்காத மேன்மைகள் கொண்டது. இயற்கையான இந்த இயக்க வேகத்தை எந்த சாத்திரங்கள் ஆட்சேபித்தாலும் அது அதர்மம்.
‘ஏய் என்ன வேகமிது. இதற்குமேல் உச்சம் ஏது என் கண்ணனே. நான் புரிந்துகொள்ள விரும்பியது. நான் தேடியது இது. கண்டது இது. உன் பாரம் தாங்காமல் மூச்சு திணறும் இது திகட்டாதது. துவைக்கும் கல்லில் ஓங்கி ஓங்கி வியர்வை ஆறாய் வழிய வழிய துவைத்து துவம்சம் செய்யும் இது அலுக்காதது. இன்னும் இன்னும் என்று பேயாய் அலையும் என் வேகத்தைப் புரிந்து கொண்டவனே. ரங்கம் பெரிதாய் முனகினாள். புரண்டாள். லேசாக அழுதாள். உரக்கச் சிரித்தாள். என் தோளை அழுத்திப் பிடி – என் பருத்த ஸ்தனங்களை இன்னும் அழுத்தமாகப் பற்று. என் முதுகெலும்புகளை முறித்துப் போடு. கன்றிச் சிவக்குமளவிற்கு என் பிரதேசங்களைக் கடித்துக் குதறு. போதும் என்ற வார்த்தை இங்கு கிடையாது. இது தவம். இது யாகம்.’
யார் உற்றுப் பார்ப்பது? யாரானாலும் பரமு உன் இயக்கத்தை நிறுத்தாதே. யாரானாலும் இந்த லயம் கலைத்தல் தகாது. சுநாதத்தின் ஊடே அபஸ்வரம் கூடாது. நகர்ந்து போங்கள்…
இவன் தாடியை உருவிக் கொண்டு ஒரமாய் நின்று கொண்டிருந்தான். சிருஷ்டிக்கான காரியமல்ல இது. அதனினும் தாண்டியது என்பதைப்போல் அலட்சியமாக ஆகாயம் பார்த்தான். தொடமுயல்வதைப் போல் நீண்ட கைகளை உயர்த்தினான்.
(தொடரும்)