மேலத்தெரு உப்பாங்கரை ஆலமரத்தடியில் இவன் நின்று கொண்டிருந்ததை இரண்டொருவர் பார்த்தனர். விசேஷமாக ஏதும் தெரியவில்லை. தென்படவில்லை. வழக்கமாக சில பரதேசிகளும் வழிப்போக்குகளும் சித்த சுவாதீனமில்லாதவர்களும் மூன்று தெரு நாய்களும் அண்டிக் கிடக்கும் இடம்தான். ஊர்க்காரர்களுக்கும் கவலைகளை உதறிவிட்டு கொஞ்ச நேரமெனும் நிம்மதியாகத் தூங்குவதற்குத் தோதான இடமாகவும் இருந்தது. இராமசுப்பு மட்டும் சத்தியம் பண்ணிச் சொல்வான். அந்த இடம் அற்புதங்கள் கொண்டது. மகிமைகள் கொண்டது. ஏதாவது தீர்க்கமுடியாத பிரச்சினை யென்றால் நேரேவந்து துண்டை விரித்துவிட்டால் மனசுக்குள் பளிச்சென ஒரு வெளிச்சம் தோன்றும் – இது போதி மரம் –
இவன் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி மீசை. இடுப்பில் இன்ன நிறத்தில் என்று கண்டுபிடிக்க முடியாத கிழிசல் வேஷ்டி. சமீபத்தில் குளித்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. திக்கான அழுக்கு. ஏதோ யுத்தத்திற்கு ஓடிக் கொண்டிருப்பதைப் போல் அசுரகதியில் பறந்து கொண்டிருக்கும் ஊராருக்கு ஒரு வினாடிகூட நின்று விசாரிக்கத் தோன்றவில்லை. அக்கறையுமில்லை. அவ்வளவு அழுக்குக் குவியல்களுக்குள்ளிருந்து சற்றே தூக்கலாகத் தெரியும் கண்கள் ரத்தச் சிவப்பில் உக்கிரமாய் மினுமினுக்கும். ஏதோ வித்தியாசம் புலப்படும். எல்லாம் அறிந்த ஞானியா, எல்லாம் துறந்த துறவியா அல்லது ஏதும் தெரியாத பித்தனா? – அறிந்திலர் –
ஆலமரச் சருகுகள் குவியலாய் திடீரென காற்றில் பறந்து வரும்போதே சட்டென்று காற்றை நிறுத்துவதைப்போல் கைகளை உயர்த்திக்காட்டுவான். முகத்தில் வந்து அப்பிக் கொண்டிருக்கும் மூன்று நான்கு இலைகளை எடுத்து லேசாக முகர்ந்து பார்த்துவிட்டு காற்றின் போக்கில் விளையாட்டு போல பறக்கவிடுவான்.
வெகுதூரத்திலிருந்து மடத்திலிருந்தோ கோயிலிலிருந்தோ கோஷ்டியாக இசைப்பது மெல்ல மெல்ல மிதந்து வந்தது மேற்கிலிருந்து.
"காற்றே என் பாதையைத் தடுக்காதே. காற்று தேவனே சற்றே எனக்கு வழிவிடு. சுதந்திரமான என் நடைக்கும் செயல்களுக்கும் இடையூறு செய்யாதே…. நமஸ்தே வாயோ…"
மரத்தின் கிளைகள் – அவற்றின் இலைகள் அசைவற்று நின்றாற் போலிருந்தது. ஏதோ ஆணைக்குக் கட்டுப்பட்டதா?
– அனைத்து பூதங்களுக்கும் என் சேதி கேட்கிறதோ. என் ஆணை கேட்கிறதோ. ரட்சிக்கும் காரியத்தை தவறாது செய்க என்ற என் ஆக்ஞையை ஏற்றுக் கொள்ளுங்கள். உலகம் நிலை பெறட்டும். அது தாண்டியும் நிலைபெறட்டும். அனைத்தும் உத்தமமே.
காலப் பெருவெளி ஒரே மாதிரியாக தூய்மையாக இருக்கும். காலத்தின் வேகமும் அதன் இயக்கமும்கூட இதனினும் மேலான ஓர் அனுபவத்திற்கான பாய்சசலாக இருக்கட்டும்.
விண்ணை முட்டும் புகைமூட்டம் – வெள்ளையாய் கறுப்பாய் பழுப்பாய் எல்லாம் சேர்ந்த கலவையாய் – எங்கும் மறைக்க ஆலமரத்துக் கிளிகள் குருவிகளோடும் சேர்ந்து அவசர அவசரமாய் கூட்டம் கூட்டமாய் தெற்கு நோக்கிப் பறந்தன. பத்திரம் தேடி. ஏழெட்டுப் பேர் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பேர் உற்சாக மிகுதியில் ஆடிக் கொண்டிருந்தனர். நிறைய பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். நடு வீதியில் பிளாஸ்டிக் குப்பைகளை போராய்க் குவித்து, இனம் காண முடியாத கழிவுகளை மலைக்குவியலாய்ப் போட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தனர். எங்கும் புகையின் துர்நாற்றம். ஊரைச் சுத்தம் செய்யும் மாபெரும் காரியம். அதீத ஆர்வம். ஹோ…. ஹோ… ஹோ….
இவன் சிரித்தான். பொருளற்றதா. செழுமையான பொருள் பொதிந்ததா என்றறிய யாருமில்லை. சிரிப்பின் அபத்தமோ மகத்துவமோ – யாருமறிந்திலர்.
ஹோ… ஹோ… ஹோ… வெகுநேரம் சிரித்தான். யுத்த களத்தில் தனியனாக நின்றும் சிறிதும் அச்சமின்றித் திரிந்தான். தோற்பதும் ஜெயிப்பதும் குறித்த சிந்தையின்றிச் சிரித்த அந்த வீச்சின் கேலி யாருக்குப் புரியும்? ஊரைச் சூழ்ந்த அடர்த்தியான புகை மூட்டம் அகல வெகுநேரமாயிற்று.
"மாப்பிள்ளை வீட்டிலிருந்து எட்டு மணிக்கே கிளம்பியாச்சாம். நிமிஷத்திலே வந்திடுவா. மசமசனு நிக்காதீங்கோ. பொம்மனாட்டிங்க ஊர்க் கதையெல்லாம் அப்புறமா பேசிக்கலாம். பார்வதி… டீ அபயம், ஆளுக்கொரு காரியத்தப் பாருங்கோ. ரங்கநாயகி கண்படற மாதிரிதான் இருக்கா. கசகசனு பவுடர், செண்ட்னு போட்டு அலங்காரம் பண்ண மெனக்கிட வேண்டாம். அதோ யார்ரா அது. வாசல்லே யாருன்னு பாரு…?"
சித்தப்பா எட்டிப் பார்த்தார்.
"சாஸ்திரிளே வெறும் நிச்சயதார்த்ததிற்கே ஆயிரத்தி நூறு பேசியிருக்கு. ரெண்டு காபி, வடை பாயசத்தோட சாப்பாடு, வெத்திலை சீவல் பன்னீர்ப் புகையிலை உபசாரம் தனி. இதெல்லாம் கணக்கிலே சேராது. மந்திரத்தை பூடகமா மனசுக்குள்ளேயே முணுமுணுக்கப்படாது. சம்பந்தி யூ.எஸ்.ஸிலே செட்டிலாயிட்டாலும் தேதியூர் பஞ்சாபகேச கனபாடிகள் பரம்பரை. மந்திரங்கள் கணீர்னு இருக்கணும். லே… சுயம்பு… சமையல் நளபாகமா இருக்கணும். இடையாத்து மங்கலம் பெரிய பண்ணை கல்யாணத்திலே பண்ணினது மாதிரி கவுத்துடாதே. தீர்த்தம் கீர்த்தமெல்லாம் அப்புறமா சாவகாசமா வச்சுக்கலாம். லே… யார்ர்ரா அது? வாசல்லே ரொம்ப நாழியா நிக்கறது!”
"போ… போ… வீட்டிலே இன்னிக்கு விசேஷம்… எதுவும் போடமாட்டா… போயிட்டு காலம்பற வா…"
யாரை விரட்டுகிறீர்கள். யாரை மறுக்கிறீர்கள். நீங்கள் துரத்துவது யாரை?
"இந்தப் பிரதேசத்திற்குரியவன் நான். எந்தக் காடுகள், எந்த சபைகள், எந்தப் போர்கள், எந்தக் கூட்டங்கள் பூமியின் மீது உள்ளனவோ அந்த இடங்களிலிருந்தெல்லாம் இனிமை யானவற்றையே பேசுவோம், பெறுவோம். வசைச் சொல் வேண்டாம். இனிமையே சாந்தி. இனிமையே சாந்தி…"
"சொன்னா கேட்கமாட்டே…?"
ஒரு சொம்பு தண்ணீர் பளிச்சென்று முகத்தில் அறைய நகர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல் மெல்லச் சிரித்தான்.
"என்னிலும் சுபம் ஏது. என்னிலும் மகிழ்ச்சி ஏது" மழையில் நிற்பவன்போல் நாக்கைச் சுழற்றி ஒரு துளி நீரைச் சுவைத்தான். தலை தோள்கள், வயிறு, முழங்கால் பாதங்கள் என இறங்கி பூமியில் பல நூறு கோடுகளாய் வழிந்தோடியது. நீர்த்தாரைகளை குறுநகையோடு பார்த்தான். குழந்தையாய்க் குதூகலித்தான். தாடிக்கற்றையை மென்மையாக வருடிக் கொண்டான். ஆகாயத்தை நோக்கினான்.
க்ஷணம்!!!
(தொடரும்)