கூறையே ஆடையாய்!
ஆடைக்குத் தமிழில் கூறை எனவும் ஒரு பெயருண்டு. தறியில் நெய்யப்பட்டு, கூறுபடுத்தப்படுவதால் அப்பெயர். ஆடை வகைகளைப் பதினேழாகப் பிரிப்பர் தமிழர்.
கந்தை, விரிபம், கண்டை, பிழையல், வேதகம், புங்கம், பங்கம், கத்தியம், துரியம், சிற்றில், நாகம், பாரி, பாளிதம், காம்பு, நேத்திரம், மயிரகம், வயிரியம் என்பவை அவை.
— தினமலர் ‘பக்திமலர்’, டிசம்பர் 24, 2009.
இது என்ன கிராபி?
உளவறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை யாருக்கும் தெரியாமல் கொண்டு போய்ச் சேர்ப்பது! தகவல் தருபவர், தகவல் தெரிந்துகொள்பவர் இருவரும் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் முறைக்குப் பெயர் கிரிப்டோகிராஃபி!
கி.மு-1900இல் எகிப்தில் உள்ள பிரமிடு ஒன்றில் செதுக்கப்பட்ட ஒரு வாக்கியம்தான் கிரிப்டோகிராஃபியின் ஆரம்பம். ஆரம்பக் காலத்தில், படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் செய்தியை நேரடியாகவே எழுதி அனுப்பினார்கள். பின்னர் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே, செய்தியைக் கொண்டு போகிறவர்களோ அவர்களிடமிருந்து செய்தியைப் பறித்து வேறு யாருமோ படித்துத் தெரிந்து கொண்டுவிடக் கூடாது என்பதற்காக விடுகதைகள், கவிதைகள் மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டன. அடுத்ததாக எழுத்துக்களை மாற்றியமைத்துத் தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார்கள். உதாரணமாக ‘ALEX’ என்ற பெயரை ‘BMFY’ என்று அனுப்புவார்கள். முதலில் குழப்பமாக இருக்கும். எல்லா எழுத்துக்களுக்கும் முந்தைய எழுத்துக்களை எழுதினால் விடை கிடைத்துவிடும்!
— மதுமிதா. ‘உளவாளி விகடன்’, டிசம்பர் 23, 2009.
இதுதான் சாக்லேட்டா?
சாக்லெட்டின் சிறப்புப் பெயர் ‘தியோ பிரோமா காகோ’ என்பதாகும். 1728ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டுத் தாவரவியல் விஞ்ஞானி லின்னேயஸ் என்பவர் சூட்டிய இந்தப் பெயரின் பொருள் ‘கடவுளின் உணவு’ என்பதாகும். நம்மூரில், கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்திற்கு இணையான பெயர் இது!
— தினமலர். டிசம்பர் 18, 2009.
ப(ல்)லே ப(ல்)லே!
மாவீரன் நெப்போலியன், ஜூலியஸ் சீஸர், ஹனிபால், பதினான்காம் லூயி… இன்னும் பல மாவீரர்கள் எல்லாரும் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள்!
— ஆனந்த விகடன், செப்., 26, 1999.
வலமா இடமா?
வலமிருந்து இடமாகப் படித்தாலும் அதே வார்த்தையாக அமைவதுதான் ‘பாலின்ட்ரோம்’. தமிழில் ‘விகடகவி’ என்பது போல! ஆங்கிலத்தில் பாலின்ட்ரோம் உபயோகித்தே உரையாடுகிற மன்னர்கள் உண்டு! ஓட்டோ ராட்காட் இதில் கில்லாடி! பிரிட்டனில் 9.3.39இல் பிறந்தார் அவர். ஆச்சர்யம் …. பிறந்த தேதியே பாலின்ட்ரோம்!
அவரிடம் ஒரு பேட்டியில் “உங்களுக்கு என்ன கார் பிடிக்கும்?” என்றதற்கு "Race Car" என்றார் அவர். (திருப்பிப் படியுங்கள்!). "சாதாரண காரில் என்ன மாடல் பிடிக்கும்?" என்றதற்கு "A Toyota" என்று பதில் வந்தது. "சினிமாவுக்குப் போவீர்களா? வீட்டில் டி.விதானா?" என்றதற்கு "Same nice Cinemas" என்றார் ராட்காட்.
கடவுளுக்கும் பாலின்ட்ரோம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. எல்லாப் பிரச்னைகளையும் ஆரம்பித்து வைத்தவர் பெயரை Eve என்று வைத்தவராச்சே!
— ‘ஹாய் மதன்’ பகுதி, ஆனந்த விகடன், ஜூன் 24, 2001.
— நன்றி: கே.சந்தானம் வலைப்பூ.
“