"சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன்
இரங்கும் குணம்,
உதவும் மனம்,
உள்ள இதயம்
என்று சொன்னார் கடவுள்!!
இவ்வளவுதானா என்று வியந்தேன்?
இப்போது அந்த விலாசம் அச்சடித்து
வினியோகம் செய்யும் வேலையைச் செய்ய நினைக்கிறேன்!!!"
"ஒரு தேவதையாகவோ ஒரு தேவனாகவோ ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு…."
கஷ்டமான நேரங்களில்,
மனம் உடைந்த நிலையில்,
அவ்வளவுதான் இனி வாழ்ந்து பிரயோசனமில்லை…
என்ற நிலைக்கு வந்த போதிலும்…
திடீரென்று ஒரு தேவதை வந்து வாழ்க்கைக்கு புது அர்த்தத்தை உங்கள் காதில் ரகசியம் போல் முணு முணுத்து விட்டுப் போனதில்லயா?
உடனே துக்கம் மறந்து வாழ்வின் புதுப் பாதையில் துள்ளிக் குதித்து ஓடியதில்லையா?
அதே மாதிரி ஒரு தேவதையின் முணு முணுப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தோணி முத்து…..
யாரிந்த தெய்வக் குழந்தை?
ஒரு சாதாரண குழந்தை தனது 11-வது வயதில் அந்தக் கொடூரக் கிணற்றுக்குள் விழுந்து தனது முதுகுத் தண்டை உடைத்துக் கொண்டு கழுத்துக்குக் கீழே உணர்வை இழந்து தெய்வக் குழந்தையாய் மாறியது.
இன்று அந்த தெய்வக் குழந்தைக்கு வயது 35. ஒரு சின்ன அறைக்குள் தனது 24 வருட வாழ்க்கையை ஒளித்து வைத்துக் கொண்டு…
வெயில் வானத்தையும், இரவு நட்சத்திர வானத்தையும் தரிசித்து வாரக் கணக்கோ, மாதக் கணக்கோ ஆகியிருக்கலாம்!
இயற்கைக் கடன்களைக் கூட சுயமாய்க் கழிக்க இயலா நிலை.
ஆயினும்….
இப்போது இயங்குவது
எதிர்காலம் குறித்த முழு (தன்)நம்பிக்கையும்…
இரு கைகளும்…,
அதோடு…
எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கும் மூளையும்…
சக மனிதனின் அன்புக்காக ஏங்கி நிற்கும் மனதுடன் வாழ்வை எதிர்நோக்கும் அந்தோணி முத்து……
இசையில் இறைவனையும், கணினியில் கனவும் காணும் இவர், ஒவ்வொரு நிமிடமும் மற்றவரிடம் உதவிக்காக முகம் பார்ப்பதால் உங்களுக்கு திருப்பி என்ன கொடுக்க என்று தவிக்கும் உயிர்…
கண்தானம், உடல் தானம் என்று எதை வேண்டுமானாலும் தானம் செய்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உள்ளம்.
"என் தேவைக்கு நானே சம்பாதிப்பேன்" என்று இன்டெர்நெட்டில் வேலை செய்யும் துடிப்பு…
பள்ளியில் படித்தது 5-ஆம் வகுப்பு.
பள்ளிக்குச் செல்லாமல் கண்டதைப் படித்துப் பண்டிதனானது தனிக்கதை..
குப்பத்துக் கவிதை முதல் க்வான்டம் பிசிக்ஸ் வரை அனைத்தும் அத்துப்படி.
இரவு முழுவதும் விழிப்பு,
இடையிடையே கோழித்தூக்கம்,
நேரம் காலம் பார்க்காமல் கணினியில் வேலை.
ஒரு நிமிடம் யாராவது தன்னோடு பேசமாட்டார்களா, தன்னைப் பற்றி அன்புடன் கேட்க மாட்டார்களா என்று ஏங்கும் இதயம்.
ஒரு வார்த்தை நலம் விசாரிக்கும் அனைவரையும் உடனே தங்க சிம்மாசனத்தில் ஏற்றி உருகும் உள்ளம்….
வசிப்பது சென்னை, செங்குன்றத்தில் மூத்த சகோதரியின் அரவணைப்பிலும் ஆதரவிலும்.
இன்னும் இழந்தவைகள்:
ஆறு மாதங்களுக்கு முன்பான அப்பாவின் இழப்பு அவருள் தாங்க முடியாத சோகம்.
அம்மாவின் படுத்த படுக்கையான உடல் நிலை இன்னும் அந்தச் சோகத்தை அதிகப்படுத்துகிறது.
ஆதலினால் வாழ்வேன் :
ஆனாலும் வாழ்வேன்….
அந்தோணி முத்துவின் பதிவில் அவரே சொல்வது…
"எத்தனை துன்பங்களைச் சந்தித்திருந்தாலும்….
இப்போது…
நான் மிக, மிக சந்தோஷமாக இருக்கிறேன்.
இயற்கை என்னும் அந்த மகா சக்தி (கடவுள்), ஒரு கதவை மூடினால், மற்றொரு கதவைத் தயாராகத் திறந்து வைத்திருக்குமாம்.
ஆம். இது நிஜம்.
என் கழுத்துக்கு கீழ் முடக்கப்பட்ட சக்தி முழுவதும்…
என் தலையில் (மூளையில்)…,
கைகளில் மாற்றப்பட்டிருப்பதாக உணர்கிறேன்."
அவ்வளவு தன்னம்பிக்கை…
வளர்ந்து வரும் போது தன் சக்தியை முழுவதும் இசைக்கு அர்ப்பணித்து இயேசு பாடல்கள் பாடியுமிருக்கிறார்.
சினிமாவில் நுழைய முயற்சி, டி.வி, ரேடியோ ரிப்பேரில் சில காலம் என எப்படி எப்படியோ தன் வழியில் சம்பாதிக்க முயன்றுமிருக்கிறார். இப்போதைய உலகம் குரு அழகி விஸ்வநாதனும், தந்தைக்குச் சமமான என்.சுரேஷ் அண்ணனும். அவருக்காக எத்தனை இதயங்களை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள்!
அன்பை மட்டுமல்ல, வாழ்க்கையின் ஆதாரமாய் இணைய வழி வேலைக்கும், வேலையை எளிதாக்க மடிக்கணினிக்கும் இவர்கள் வழி செய்ததில் அந்தோணியின் இதயம் நன்றியில் நெகிழ்கிறது. என்றென்றும் அன்புடன் பாலா செய்திருக்கும் உதவிகளும் மகத்தானவை என்கிறார்.
அந்தத் தெய்வக் குழந்தையின் தற்போதைய தேவை தன் சின்னச் சிறையிலிருந்து வெளிவந்து, வெளிக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்க ஒரு எலெக்ட்ரானிக் சக்கர நாற்காலி மற்றும் உங்களின் அன்பான விசாரிப்பு.
பணம் மட்டுமல்ல, உங்களின் அக்கறையான ஒரு வரி மடலும், வாஞ்சையான தொலை பேசி அழைப்பும்கூட அவரது வாழ்க்கையில் ஒளியேற்றக் கூடும்.
தொடர்புக்கு:
Mr. S. Anthony Muthu
C/O Mr.J.Dharmaraj
5/96, Cheran Street
KK Nagar
Pammadhu Kulam
Redhills
Chennai 600052
Tamilnadu, India
Phone Number : 91-44-26323185
Mobile Number : 0-94444-9660
Email(s) : anthonymuthu1983@yahoo.com, anthonymuthu1983@gmail.com
Weblink(s) :http://anthony.azhagi.com, http://anthonymuthu.azhagi.com
Blogs : http://positiveanthonytamil.blogspot.com
ஏதோ ஒரு நிலாச்சாரல் வாசகரோ, வாசகியோ (அ) சிலராக இணைந்தோ…,
இவற்றைக் கொடுக்க முன்வந்தால்…
இந்தக் குழந்தை வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் சுகித்துப் பார்க்கும்…
மற்றும் அவர்களுக்கும் கூட ஒரு தேவதையாகவோ ஒரு தேவனாகவோ ஆக ஒரு வாய்ப்பு!”
மிக்க நன்றி , இந்த மாத மத்தியில் சென்னை வரும் போது , திரு.அந்தோணி அவரை சந்திக்க எண்ணியிருந்தேன், தங்களது பதிவைக்கண்டதில் மிக்க மகிழ்ச்சி…