இன்றும் நாம் பார்க்கும் ‘திரும்பிடும் ஆன்மா’ கோயிலின் முகப்பு பழங்காலத்தில் இல்லை. வேறு விதமான தோற்றம் இருந்தது. அக்காலத்தில் நூறு வீடுகள் கொண்ட ஒரு கிராமம் இருந்தது. அங்கு மலைகளோ பாறைகளோ காணப் படவில்லை. அங்கே இருந்த ‘திரும்பிடும் ஆன்மா’ கோயிலில் ஒரு பௌத்தத் துறவி வாழ்ந்து வந்தார். அவரை ‘சக்தி’ பிக்கு என்று அழைத்தனர். தன் காலில் ஒரு ஜோடிப் பாதுகைகளையும் கையில் ஒரு விசிறியையும் வைத்திருந்த அவர் மது மற்றும் புலால் உண்ணக் கூடாது. கிராமத்தினர் அவரை மிகவும் கோமாளித்தனமானவர் என்று நினைத்தனர்.
கிராமத்தினருடன் மிகவும் இணக்கமாக இருந்தார் பிக்கு. ஒரு நாள், "ஓ, நீ எல்லாம் ஒரு ‘சக்தி’ பிக்குவா? செய்ய ஒன்றுமில்லாமல் நாளெல்லாம் கழிக்கிறாய். நீ உன் பெயரை ‘கிறுக்கு’ பிக்கு என்று மாற்றிக் கொள்", என்று யாரோ அவரைக் கேலி செய்தார். துறவி மனம் நிறைய சிரித்தார். "நல்ல யோசனை! இப்போதிலிருந்து என் பெயர் ‘கிறுக்கு’ பிக்கு!"
அதே ‘கிறுக்கு’ பிக்கு எதிர்காலத்தைக் கணிக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்று கிராமத்தினருக்குத் தெரியாது. ஒரு நாள், அதிகாலையில், அவருக்கு கிராமத்துக்கு ஏதோ துரதிருஷ்டம் ஏற்படவிருக்கிறது என்ற ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டது. அதனால், அதிர்ந்து பெருங்கூச்சலுடன் படுக்கையிலிருந்து பட்டென்று எழுந்து கொண்டார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஸிச்சுவான் மாநிலத்தில் ‘எமி’ மலைத் தொடர் என்ற ஒன்று இருந்தது. அது பறக்கக் கூடியது. அது பறந்து எங்கே இறங்குகிறதோ அந்த இடத்துக்கு பெரும் அழிவைக் கொணரும். அந்த மலைத் தொடர் கிராமத்தை நோக்கிப் பறந்து வந்தது.
துறவி கிராமத்துக்குள் போனார். மாட்டுச் சாணம் சேகரித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்தித்தார். பறந்து வந்து கொண்டிருந்த மலைத் தொடரைப் பற்றி எடுத்துச் சொன்னார். "சீக்கிரம், ஓடிச் சென்று தப்பித்துக் கொள்ளுங்க!", என்றார் துறவி. கிழவர் அதையெல்லாம் நம்பவில்லை. ஆகவே, அதை எச்சரிக்கை என்றும் நினைக்கவில்லை. "சுத்த அபத்தம்", என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
துறவி விறகுக் கட்டு சுமந்து சென்ற ஒரு மூதாட்டியைச் சந்தித்தார். அவளிடமும், முதியவரிடம் சொன்ன கதைச் சொன்னார். கிழவி அடக்க முடியாமல் சிரித்தாள். "என் கிட்ட தானா உங்க நையாண்டியை வச்சிக்கணும்? இது போல நான் கேட்டதேயில்லை", என்று சொல்லிப் போய் விட்டாள். தலையை ஆட்டிக் கொண்டே தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டாள்.
ஓடையிலிருந்து நீர் சேந்திக் கொண்டு திரும்பிய இன்னும் இரண்டு இளையர்களைச் சந்தித்தார். அவர்களிடம் துறவி வரவிருக்கும் ஆபத்தை எடுத்துச் சொன்னார். ஒரு இளையர் துறவியின் முதுகில் தட்டி, "இதென்ன அபத்தக் கதை! இதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். மலை பறக்க முடிந்தால், கீழே இறங்கும் மலையை எம் தோள்களில் தாங்கிக் கொள்வோம்", என்று நையாண்டி செய்தான்.
துறவி ஒவ்வொரு வீட்டுற்குள்ளும் நுழைந்து வெளியேறினார். கிட்டத்தட்ட 100 குடும்பங்களுக்கு ஆபத்தை எடுத்துரைத்து மிகவும் களைத்தார். வாய் வலிக்கும் அளவுக்குப் பேசிக் கொண்டே போனார். இருந்தும் யாரும் அவரை நம்பவில்லை. ஒரு குடும்பம் கூட கிராமத்தை விட்டுக் கிளம்ப யோசிக்கவில்லை.
சூரியன் உச்சி வானை அடையவிருந்தான். சீக்கிரமே நண்பகல் ஆகிவிடும். துறவி மிகவும் பொறுமையற்றுப் போனார். திடீரென்று கிராமத்து எல்லையிலிருந்து குழல் வாத்தியம் மற்றும் கொட்டு மேளம் கேட்டது. மணமகளின் பல்லக்கைத் தொடர்ந்து ஒரு கல்யாணம் கோஷ்டி ஊருக்குள் வந்து கொண்டிருந்து.
திடீரென்று ஒரு யோசனை தோன்றியது துறவிக்கு. "கடவுளே", என்று முணுமுணுத்துக் கொண்டே, ஊர்வலத்தின் பின்னால் போனார்.
மணமகனின் வீட்டின் முன்னால் ஊர்வலம் நின்றது. பல்லக்கைத் திறக்கும் முன்னரே, கூட்டத்தை விலக்கிக் கொண்டு மணமகளை நெருங்கியிருந்தார். மணமகளை எடுத்துத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு கிராமத்தை விட்டு ஓடினார்.
(தொடரும்…)