காந்தியடிகள் தங்கிய வீடு, வ.உ.சி செக்கிழுத்த சிறை, போப் ஜான்பால் விஜயம் செய்த ஆலயம் என பல நல்லோர்களின் பாதம் பதியும் இடங்கள், வரலாற்றுச் சுவடுகளில் அழியா தனியிடம் பெறுகின்றன. அவ்வாறே முத்துநகர் என்றழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயமும் அநேக தூயோர்களால், புனிதர்களால் விஜயம் செய்யப்பட்ட ஒரு திருத்தலம்.
1542களில் தூய பிரான்சிஸ் சவேரியார் முத்துக்குளித்துறைப் பகுதிகளில் வருகை தந்த வேளையில் பனிமய அன்னை ஆலயம் இருக்கவில்லை. ஆனால் அவரே இந்த ஆலயத்தின் நாயகியாம் பனிமய அன்னையின் திரு ரூபத்தை இவ்வாலயத்திற்கு அளித்திட முயற்சி எடுத்தவர். சிறு கோவிலாக இவ்வாலயத்தை எழுப்பியவரும் இவரே.
இந்த அன்னையின் ஆலயத்திற்கு வருகை தந்த மாமனிதர்களில் ஒரு சிலர்: தமிழ் அறிஞர் வீரமாமுனிவர், தூயவராம் ஜோசப் வாஸ் அடிகள், அன்னை தெரசா, பாளியோன் மரித் தாயார். இது போன்று எண்ணற்ற மாமனிதர்கள், மாமேதைகள் ஆவலுடன் வருகை தந்த தனிப்பெரும் பேற்றினை பெற்றுள்ள தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் தற்போது தங்கத் தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
1806ம் வருடம் பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதன்முதலாக இத்தங்கத் தேர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அது முதற்கொண்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பனிமய மாதா தங்கத் தேர் தூத்துக்குடியின் தெருக்களில், சாலைகளில் வலம் வரத் தொடங்கியது. போப்பாண்டவரின் ஆசியுடன், 25 கத்தோலிக்க பாதிரிமார்கள் மற்றும் Apostolic Nuncio in India இத்திருவிழாவைத் துவக்கி வைப்பர்.
மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்பு சொல்லிலடங்காது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளது.
இவ்வாண்டுத் திருவிழாவின் நிகழ்ச்சி நிரலை அறிய இங்கே சொடுக்கவும். http://snowschurch.org/Festival_2008/index.asp
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் www.snowschurch.org இணையதளத்தில் நேரலையில் (Live Telecast) காணலாம்.
“