தூது சென்ற தூதுவளை (5)

அதிர்ஷ்டவசமாய் ஒரு நாள் கீரை கொடுத்தவர் சிக்கிக் கொண்டார்.

"திருச்சிற்றம்பலம்.. என்ன இது.. விளையாட்டு..!"

அவள் எதிரே சோமாசி மாறன். சிவனடியார்களைப் பார்த்தால் நெக்குருகிப் போய் பணிவிடை செய்யும் அருட்தொண்டர். தவறாமல் சோம வேள்வி செய்து ஈசனை வழிபடுவதையே வழக்கமாய்க் கொண்டவர். சுந்தரர் மீது மாறாப் பாசம் கொண்டு அவர்தம் நட்பைப் பெற விரும்பி இருக்கிறார். அதற்கான நேரம் வருமென்று காத்திருந்தாராம். இருமலால் சுந்தரர் அவதியுற்றது தெரிந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தூதுவளைக் கீரை கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

"என்ன யோசனை.. பரவை?"

சுந்தரருக்கே அவள் முகக் குழப்பம் புரிந்து விட்டது.

"இப்போதெல்லாம் தினசரி கீரை வருகிறது.. கவனித்தீர்களா?"

"அடடா..! என் மீது பிரியம் காட்டுகிற அந்த மகான் யார்?"

வாசல் நடையில் இருந்து நிழலாய் ஒரு உருவம் உள்ளே ஓடி வந்தது. ‘திருச்சிற்றம்பலம்..’

‘அடியேன்.. அடியேன்’

"யாரது.. எழுந்திருங்கள்..!"

சுந்தரர் கைலாகு கொடுத்து எழுப்பிப் பார்த்தார்.

"அடியேன் மாறன்.. "

"சோமாசிமாறனா.. தவறாமல் சோம யாகம் செய்து எம்பிரானுக்குப் பிரியமான சோமாசிமாறனா!"

தம்பிரான் தோழர் சுந்தரர் கண்களில் ஆச்சர்யம்.

"தங்கள் பிரியத்துக்கு ஏங்கித் தவிக்கும் அடியவன் மாறன்.. காணாமலே நெஞ்சில் நேசம் வளர்த்து, இன்று கண்டதால் புத்துயிர் பெற்றேன்."

"என்ன பாக்கியம் எனக்கு.. தங்கள் நட்பு கிட்டியது.." சுந்தரர் ‘அடியார்க்கும் அடியேன்’ என்னும் தொனியில் முகமெல்லாம் மலர்ச்சியாய்க் கூறியதைக் கேட்ட மாறன் மெய்சிலிர்த்துப் போனார்.

"சிவ..சிவ"

"நண்பரே.. என்னால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா.. சொல்லும்.. அவனருளால் கூட்டித் தருகிறேன்.."

சட்டென்று வாய் மொட்டு மலர்ந்து விட்டது!

"அடியேன் செய்யும் யாகத்திற்கு ஈசனே வந்து அவிர்ப்பாகம் பெற்றுப் போக வேண்டும்.. தாங்கள்தான் அருள் கூட்ட வேண்டும்"

‘ஆஹா! மாறனிடம் வசமாய் சிக்கிக் கொண்டேனே.’ சுந்தரர் மனம் விட்டு சிரித்தார்.

"அப்படியே ஆகட்டும்.. உங்கள் யாகத்திற்கு அந்தக் கைலாய நாதனே வருவார்.. செல்லும். ஏற்பாடுகளைச் செய்யும்"

ஊரெல்லாம் செய்தி பரவி விட்டது. ‘சோமாசிமாறனார் நடத்தும் யாகத்திற்கு ஈசன் வருகிறாராம். சுந்தரர் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.’

****

திருவம்பர் திருமாகாளம் விழாக் கோலம் பூண்டு விட்டது. எல்லா ஊரிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என பெருங்கூட்டம். யாகம் விமரிசையாக நடந்து பூர்ண ஆகுதி நேரம்.

யாகசாலை வாசலில் திடீரென ஒரு பரபரப்பு.

"ஓடுங்கள்.. இடம் அசுத்தமாகி விட்டது.. ஓடுங்கள்"

கூக்குரல் எழுந்தது. வேதியர்கள் வெளியே ஓடினார்கள்.

‘என்ன குழப்பம்..?’ சோமாசி மாறனார், மனைவி சுசீலா அம்மையாரைப் பார்க்க, அவர் சொன்னார். "வாசலில் இறந்த கன்றைச் சுமந்து நாய்களுடன் ஒருவர் வந்திருக்கிறார். அவருடன் அவர் மனைவி, இரு பிள்ளைகளும். மனைவி தலையில் மதுக்குடம் வேறு.. வேதியர்கள் அஞ்சுகிறார்கள் சுத்தம் பறிபோனதாய்.."

சோமாசிமாறனார் எழுந்து வெளியே வந்தார். எதிரே சுசீலா சொன்னது போலவே காட்சி. ‘இறைவா இது என்ன சோதனை.. சுந்தரர் வாக்கு பொய்யானதா.. யாகம் அரைகுறையாய் முடிந்ததா.. என் மனக் குறை தீராதா..’

கண்ணீர் பெருகியது மளமளவென்று. தடுமாறி கீழே சரியப் போனார். தாங்கிப் பிடித்தான் வாசலில் வந்த இரு பிள்ளைகளில் சற்றே பருத்த பிள்ளை.

"மாறா.. கவலை வேண்டாம்.. நன்றாகப் பார்.."

அவன் தொட்டதும் நம்பிக்கை துளிர்த்தது நெஞ்சில். கை பட்ட இடம் தும்பிக்கை தெரிந்தது அவர் கண்ணில்.

"விநாயகா.. வேழ முகத்தோனே!"

"எதிரே பார்.. அம்மையப்பன்தான் உனக்கருள வந்திருக்கிறார்.."

சுசீலாவுடன் தாள் பணிந்து தொழுதார் சோமாசி மாறனார். தம் கையாலேயே ஈசனுக்கு அவிர்ப்பாகமும் தந்தார்.

போட்டிருந்த வேடம் கலைத்து எம்பிரானும் பார்வதி சமேதரராய்க் காட்சி தந்தார். உடன் பிள்ளையாரும், முருகப்பெருமானும்.

தூதுவளைக் கீரையால் சுந்தரர் அன்பைப் பெற்று சோமாசிமாறன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராய் ஆனார்.

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார்

(சோமாசி மாற நாயானார் – வைகாசி – ஆயில்யம்)

(முடிந்தது)

About The Author

3 Comments

  1. mani

    Excellent!
    please write more stories like this….. I have been looking for when monday would come for the past one month…..

  2. Vijaya Amaarnath

    மிகவும் அருமையான கதைகள். இதுபோல் நாயன்மார்கள் கதைகளை எழுதுமாறு பணிவன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன்.
    விஜயா அமர்நாத்.

Comments are closed.