தூது சென்ற தூதுவளை (4)

"நான் ஒருத்தி உங்களிடம் சிக்கிக் கொண்டது போதாதா.. இன்னுமொருத்திக்கு ஏற்பாடா..?"

"அப்படி இல்லை பரவை.."

"உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் சுவாமி. அந்த கயிலைப் பிரான் ஒரு நாள் ஆடியில் அழகு பார்த்து வியந்து.. வா சுந்தரா.. என்று சொல்லியிருப்பார். அப்படி வந்தவர்தானே நீங்கள்.. நிச்சயம் அழகாய்த்தான் இருக்கிறீர்கள்.. குறையே வேண்டாம்.."

"பசிக்கிறது கண்ணே.."

"அடடா.. உம்மோடு இதென்ன கூத்து. அலங்கரிக்க பல நாழிகை.. பிறகு பசியென்று அடம்.. என்னால் உம்மை சமாளிக்க இயலாது சுவாமி!"

"தயை செய் பெண்ணே.. வாடிய வயிறுடன் ஆலயம் வந்தால் பார்ப்பவர் கண்ணுக்கு நன்றாய் இருக்குமா?"

"இப்போது என்னவென்று உங்களுக்கு படைப்பது.. சமையல் பாதிதான் ஆனது.. உங்கள் வற்புறுத்தலால் சன்னிதிக்குக் கிளம்பினேன்.. சித்தம் போக்கு சிவம் போக்கானது இன்று"

"கீரை சமைத்திருப்பாயே.. அது மட்டும் கூட போதும் . "

பரவை நாச்சியார் முகம் சற்றே வாடியது. சுந்தரருக்குப் பிரியமான தூதுவளைக் கீரை இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அதுவும் அவருக்கு இருமல் தொந்திரவு ஏற்பட்டு அவதியுற்ற போது எத்தனை விதமாய் வைத்தியம் செய்தாகி விட்டது. போகிற வருகிறவர் எல்லாம் ஆளுக்கொரு மருந்து சொல்லிப் போனார்கள். எதிலும் குணம் தெரியாமல் திண்டாடி கடைசியில் தூதுவளைக் கீரை சமைத்துக் கொடுத்தால் குணம் தெரியும் என்று ஒருவர் கொண்டு வந்து தந்தார். அவர் யார்.. என்ன என்று விசாரிக்கும் பொறுமை கூட இல்லை. சுந்தரர் குணம் பெற்றால் போதும் .. என்று வாங்கிக் கொண்டார் பரவை. ஓயாமல் இருமிக் கொண்டிருந்த சுந்தரரிடம் நல்ல மாற்றம் தெரிந்தது தொடர்ந்து சாப்பிட்டபோது.

அப்போதிருந்து அவருக்கு அந்தக் கீரை மீது ஒரு ருசி. அயலாரிடம் கூடச் சொல்லிப் பார்த்தாகி விட்டது. வழக்கமாய் கீரை கொண்டு வரும் பெண்ணிடம் கேட்டாகி விட்டது. எங்கும் கிடைக்கவில்லை. நடுவில் ஒரு நாள் வாடிப் போய்க் கிடைத்ததை அரைமனதாய்ச் சமைத்து வைத்திருந்தாள். அதைக் கூட சுந்தரர் அவ்வளவு ஆசையாய் சாப்பிட்டார். பரவையைக் காதலாய்ப் பார்த்தார். குரல் கணீரென்று ஒலித்தது.

எந்த உணர்வானாலும் உடனே சுந்தரர் மனம் கசிந்து ஆரூரானை அழைக்க மறந்ததில்லை.

பொய்த்தன்மைத்தாய மாயப்
போர்வையை மெய்யென்றெண்ணும்
வித்தகத்தாய வாழ்வு
வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்குவார்க்கு
அத்தன்மைத்தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சினேனே

****

பசி என்று சொன்னவர் அடுத்த நொடி அதை மறந்தவர் போலக் கிளம்பி விட்டார். உற்சாகமாய் வீதியில் இறங்கி எதிர்ப்பட்டு வணக்கம் சொல்பவர்களுக்கு ‘திருச்சிற்றம்பலம்’ சொல்லி துள்ளல் நடையுடன் செல்ல, பின்னால் வாடிய முகத்துடன் பரவை வந்தார்.

‘ஈசா.. எனக்கிரங்க மாட்டீரா.. கேவலம் ஒரு கீரைக்கு நான் இத்தனை அல்லல் படுவதா!!’

"அம்மா.. "

பிஞ்சுக் குரல் அருகில் கேட்டது. யாரது..

எதிரே இடுப்பில் அழகாய்க் கட்டிய துண்டுடன் கை உயர்த்தி அந்தச் சிறுவன். நீட்டிய கரங்களில் பசுமை மாறாமல் புத்தம்புது தூதுவளைக் கீரைக் கட்டு.

"என்னப்பா..?"

"பிடியுங்கள் அம்மா. என் கை வலிக்குது." கொஞ்சியது மழலை.

வாங்கிக் கொண்டாள். ஈசனே! என் குரல் கேட்டு விட்டதா உமக்கு. கண்ணீர் ஒரு நொடி பார்வையை மறைக்க சுதாரித்து எதிரில் பார்த்தாள். எங்கே அந்தச் சிறுவன்.. வந்த சுவடு அறியாமல் மறைந்து விட்டான்.

"பரவை.. அங்கே என்ன செய்கிறாய்.." சுந்தரரின் குரல் கேட்டது தொலைவில்.

"இதோ வந்து விட்டேன் சுவாமி"

தன் வீட்டு வழியே செல்கிற பெண்ணிடம் கீரைக்கட்டைக் கொடுத்து அனுப்பினாள். வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த வருத்தம் பரவையிடம் மறைந்து போக, தானும் சுந்தரரின் உற்சாகத்தில் பங்கேற்றவளாய் கோவிலுக்கு உள்ளே போனாள்.
அன்று மட்டும் இல்லை.. தொடர்ந்து யாரோ ஒருவர் பரவையிடம் தினமும் தூதுவளையைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

"கொஞ்சம் இருங்கள்.. எதுவும் வாங்காமல் போகிறீர்களே.."

"இது நான் கொண்டு வரவில்லையம்மா. உங்களிடம் கொடுக்கச் சொல்லி யாரோ தருகிறார்கள்.. அவரைக் கேட்டால் இன்னொருவரைச் சொல்கிறார். "

இது என்ன விளையாட்டு.. அலகிலா விளையாட்டுடையானின் திருவிளையாடலா?

(அடுத்த இதழில் முடியும்)

About The Author