தூது சென்ற தூதுவளை (2)

நாத முனிகளின் திருப்பேரன். ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரர். ஷேத்திராடனம் போனபோது யமுனை நதிக்கரையில் அவதரித்ததால் ‘யமுனைத் துறைவன்’ (யமுனாச்சார்யார்) என்று திரு நாமம்.

நாதமுனிகளால்தான் நாலாயிரத் திவ்யப்ரபந்தம் புத்துயிர் பெற்றது. பேரன் யமுனைத் துறைவன் சின்ன வயசிலேயே பயங்கர சூட்டிகை. ஆச்சார்யன் சந்தை (வேதம் பாடம் சொல்லித் தருதல், ஒரே பகுதியை நாட்கணக்கில் உருப்போடுதல்) சொல்லித் தரும்போது, முதல் நாள் சொல்லித் தந்ததை மறுநாள் திருப்பி உருப் போடச் சொன்னால், செய்யாமல் விளையாடப் போய்விடுவான் யமுனாச்சார்யன்.

அழைத்து விசாரித்தால் ‘அதையே எத்தனை முறை சொல்வது’ என்று அலுத்துக் கொள்வானாம். ஒரு முறை கேட்டாலே அப்படியே மனப்பாடமாகிவிடும் அவனுக்கு!

அவனது குரு மஹா பாஷ்ய பட்டர். அப்போது சோழ ராஜாவின் அரசவைக்கு ஆக்கியாழ்வான் என்கிற பண்டிதர் வாதப் போர் செய்ய வருகிறார்.

அந்த நாட்களில் இது சகஜம். பெரும் பண்டிதர்கள் தங்கள் புலமையை பறைசாற்ற இப்படி தேசம் தேசமாய்ப் போவார்கள். அரசர்களின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. ‘எம்மோடு வாதம் செய்ய எவர் உண்டு இங்கே’ என்று ஆக்கியாழ்வான் சவால் விட, சோழ அரசர் தமது நாட்டில் இருக்கும் பண்டிதர்களுக்கு அதை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கிறார்.

தனது ஆச்சார்யன் இல்லாத நேரம். அரச சபையில் இருந்து வந்தவர்களிடம் தானே வருவதாக யமுனாச்சார்யர் சொல்லி பல்லக்கில் ஏறிக்கொள்கிறார்.

வரும் சிறுவனைப் பார்த்து சோழ ராஜா கேலியாகச் சிரிக்க, ராணிக்கோ ஆக்கியாழ்வானின் கர்வத்தின் மேல் கோபம்.

"நிச்சயம் இந்தச் சிறுவன்தான் ஜெயிப்பான்" என்றாள் ராணி.

"அப்படி அவன் ஜெயித்து ஆக்கியாழ்வான் தோற்றால் பகுதி ராஜ்யம் தருகிறேன்" என்றார் ராஜா சவாலை ஏற்று.

***

அன்று சபையில் பெருங்கூட்டம். நம் யமுனாச்சார்யன் ஆக்கியாழ்வனுடன் போட்டியாமே.

ஆக்கியாழ்வான் முகத்தில் ஏளனம். ‘அடே.. பொடியா’

"அரசே.. வாதத்தைத் துவங்கலாமா?" என்றான் யமுனாச்சார்யன்.

"உன் குரு வரவில்லையா?" இது ஆக்கியாழ்வானின் கர்ஜனைக் குரல்.

"உம்மோடு போட்டி போட அடியேனே போதும்."

"ஹா.. ஹா.. உன் பெயர் என்ன?"

"அடியேன் யமுனைத் துறைவன்"

"பாவம் நீ, உனக்கு சிரமம் தர விரும்பவில்லை.. வாதத்தை சீக்கிரமாய் முடித்துக் கொள்ளலாம். நீ ‘உண்டு’ என்று சொல்வதை நான் ‘இல்லை’யென்று சொல்கிறேன். அதேபோல நான் ‘உண்டு’ என்று சொல்வதை நீ ‘இல்லை’யென்று நிரூபி.. "

"அப்படியே ஆகட்டும்.. இதோ எனது வாதம்.. உம் தாயார் மலடி இல்லை.. அரசர் சார்வபௌமன் புண்ணியம் செய்தவர்.. ராணி பத்தினி.. எங்கே இல்லையென்று நிரூபியும்"

ஆக்கியாழ்வான் ஆடிப் போனார். சிறுவன் என்று நினைத்தது தவறாகிப் போய்விட்டது. எப்படிச் சொல்லி இல்லையென்று நிரூபிப்பது..!!

"உன்னால் முடியுமா"

"நீர் தோல்வியை ஒப்புக் கொள்கிறீரா"

"ம்.. எங்கே நீ சொல்.."

"தர்ம சாத்திரங்களின்படி ஒரு பிள்ளை பெற்றவள் மலடிக்கே சமம். அரசரோ தனிப்பட்டு புண்ணியவானாய் இருந்தாலும் குடிமக்களின் பாவம் அவரையே சேர்வதால் புண்ணியவான் இல்லை. ராணி கன்னிகாதானத்தின்போது இந்திரன் முதலான தேவர்களுக்கு அளிக்கப்பட்டு பிறகே ராஜாவின் மனைவி ஆகிறாள். மேலும், அரசனே இந்திரன், அக்னி முதலான தேவர்களின் அம்சம். ஆக, அவளும் பத்தினி என்று கொள்ள முடியாது. இது தர்க்க ரீதியான வாதத்திற்காக அடியேன் சொல்வது"

"ஆஹா.. ஆஹா"

சபையில் அனைவரும் சிறுவனின் வாதத் திறமையை மெச்சினார்கள்.

ராணி எழுந்து வந்து சிறுவனைக் கட்டிக் கொண்டாள்.

"எம்மை ஆளவந்தீரோ!"

அன்று முதல் யமுனாச்சார்யன் ‘ஆளவந்தாராகவும்’ ஆனார். சோழ ராஜா தம் வாக்கின்படியே ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்து அரசராக்கி விட்டார்.

இவ்வளவும் மனதில் ஓடிக் கொண்டிருக்க, பரிச்சாரக ஸ்வாமி வீதிகளில் கீரை கொண்டு வந்த பெரியவரைத் தேடி அலைந்தார்.

"அதோ.. அதோ..”

வஸ்திரம் கீழே விழுந்ததைக் கூட கவனிக்காமல் ஓடினார்.

(தொடரும்)

About The Author