துருவம்

இது என்ன மாதிரியான உணர்வு, எனக்குள் இப்போது நிகழ்வது, என்று தனக்கே விளங்காமலாயிற்று. இதில் பெரிதும் குழப்பிக் கொள்ளக் கூட இதுவரை விஷயம் இருப்பதாய் நினைத்தேயிராதது ஆச்சர்யம்தான். கல்யாணம் என்றதும் ஆண்கள் சற்று திடுக்கிடத்தான் செய்கிறார்கள் போலும்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தது. தெரியாத இடம். சுற்றிலும் வேற்றுமொழி பேசும் அந்நியச் சூழல். இந்நிலையில் மனதைத் தளரவிட்டபடியே இருக்கையில் பின் சாய்ந்து கொள்வதே சாத்தியமானது.
அக்கா வீட்டுக்கு வந்து திரும்புவது எப்பவுமே அத்தனை உற்சாகம் தருகிறதாய் அமையாது அவனுக்கு. தம்பியே அவன். அப்பா காலத்துக்குப் பிறகு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவே படிப்புக் கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு வேலையமர்ந்தவன். அம்மாவையும் இதுநாள் வரை, தன்னால் முடிந்த வரை புன்னகை வாடாமல் பார்த்துக்கொண்டு வருகிறான். அவளிடம், அம்மாவிடம் எப்பவுமே முனகல்கள், முறையிடல்கள் இல்லை என்பதைக் கவனித்திருக்கிறான். இதுதான் உலகம். முறையிட்டு ஆவதென்ன? இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைப்பதா, முடியுமா அது, என்பதாய் அவளுள் பிடிமானங்கள், (அல்லது தளர்வுகள்) இருக்கக்கூடும்.
அப்பாவைக் கைப்பிடித்த பின், முறையிட்டு அவள் அலுத்திருக்கவும் கூடும்!

இதற்கு நேர்மாறாக அந்த வீட்டில் கல்பனா. சற்று சிவப்பாய்… அழகாய், அதாவது அப்படியான பிரமைகள் கொண்டவள். அப்பா கொடுத்த செல்லம் அது. கல்பனாவுக்கு ஏனோ எப்பவுமே ஒரு அதிதம் சார்ந்த திருப்தி, அல்லது அதிருப்தி இருந்தது. JUST TOO MUCH IS ENOUGH என்கிற மனப்பான்மை அது. இருப்பதில் எப்பவுமே அவளுக்குப் போதாமைதான் இருந்தது என்பது ஆச்சர்யமே. இதைவிட வசதியான வீட்டில் அவள் பிறந்திருக்கலாம்… தான் இன்னும் கொண்டாடப்படலாம்… இன்னுமாய் இருந்தது அவளது வாழ்க்கை. அவள் உலகத்துக்கு வெளியே இருந்தது அது. அழகான அந்தச் சிவந்த முகம் எப்பவுமே சுளிப்புடனேயே இருந்தது துர்ப்பாக்கியம்தான்.

இல்லாததாய் இருந்தது அவள் வாழ்க்கை. அவளது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது அது அவளுக்கு.

உருவியதில் கிடைத்த உடைகளை அணிந்து ஆண்கள் வெளியே கிளம்பினால், பெண்களிடம் எல்லாவற்றிற்குமே ஒரு தனி கவனம், அக்கறை… தான் கவனிக்கப்படுவோம் என்கிற அக்கறை, இருக்கத்தான் செய்கிறதோ என்னமோ. என்பதாலேயே கவனிக்கப்படாமல் போகிறபோது உள் ஆத்திரம் கிளர்த்தப்படுகிறது. பிறர் ரசனை சார்ந்த சந்தேகங்கள் அவர்களுக்கு எழவும் செய்கின்றன. அதாவது தன் முடிபுகள் சார்ந்து அவர்களுக்கு சந்தேகங்கள் இல்லை!

என்னவோ பெண்களைப் பற்றி ரொம்பத் தெரிந்தாப் போல ஆராய்ச்சி பண்ணியாகிறது, என மனசு கேலியாடியது. பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. தனிமையும், இதமான இரவின் குளுமையும், வெளியேயிருந்து ஜன்னலில் பாயும் காற்றும், அந்தப் பயணமும்… தூங்க முடியாது என்றே பட்டது. பொதுவாக, பஸ் பயணங்களை அவன் விரும்புவது இல்லை. ரயில் பரவாயில்லை. என்றாலும் அதன் குலுக்கலே கூட அவனைத் தூங்கவொண்ணாமல் அடிக்கும்.

ஆந்திராவின் உட்பகுதி அது, அக்காவைக் கொடுத்த இடம். கிருதாவும் மீசையும் சேர்ந்தாற்போல இணைத்த முக எடுப்புகள். அந்த மக்களின் தலைகொள்ளாத முட்டைக்கோஸ் போன்ற முண்டாசுகள் பார்க்க வேடிக்கையாய் இருந்தன. யாருக்கும் தெலுங்கு தவிர வேறு பாஷை தெரியவில்லை. வெற்றிலைக் காவி படிந்த பல்லைக் காட்டி, விரல்களால் தெரியவில்லை என்கிறார்கள்.

ஐந்திலக்க சம்பளத்தில் அரசாங்க வேலை மாப்பிள்ளைக்கு. தவிரவும் அக்காவுக்குப் புதிய ஊர் பார்க்கிற உற்சாகம். பெண்பார்த்த நாளில் இருந்தே அவளுக்கு இடம்பெயர்கிற கனவுகள் வளர ஆரம்பித்திருந்தன. பெண்களே அப்படித்தானே? சட்டு சட்டென்று எழுந்து பறக்கும் பறவைகள். ஒடிசலான உயரமான ஒற்றைநாடி அக்கா. அதன் நிமிர்வே கம்பீரம் தந்தது அவளுக்கு. அழகு சார்ந்த ஒயிலுடனேயே அவள் நின்றாள். நடந்தாள். நடமாடினாள். அந்த ஊரில் அவளது ஸ்தானம், குதியுயர் செருப்பு அணிந்தாப் போலவே அமைந்தது நல்ல விஷயம்தான்.

அந்த ஊர் வந்து ஒரு வருடம் ஆனாலும் அக்காவுக்கு இன்னும் தெலுங்கு வரவில்லை. அவளிடம் யார் பேசினாலும் ஒரே வார்த்தையில் பதில், சற்று கம்பீரத்துடன்.

தெல்லேது!

மாப்பிள்ளைக்கும் பெரியதாய் அலங்கார பாவனைகளில் நம்பிக்கை இல்லை. எங்காவது வெளியே கிளம்பினால் அவர் உடைமாற்றிக்கொண்டு வெளியே மூங்கில் நாற்காலியில் காத்திருந்தார். அக்கா கண்ணாடி முன்னால் பரபரப்பாய் இருந்தாள். முகத்தின் பகுதிகளை அவள் மேசையில் இருந்து எடுத்து ஒட்டவைத்துக் கொள்கிறாப் போல வேடிக்கையாய் இருந்தது.

"அத்தான்! இதை எப்பிடி சகிச்சிக்கறீங்க?"ஹோ ஹோ என்று அடக்கமாட்டாமல் சிரித்தார் பிரபாகர். அவள் வரை கேட்டுவிடாத கவனம் இருந்தது அதில். "உனக்கும் பழகிரும்டா" என்றார் முகத்தைத் துடைத்தபடி.

அம்மா கசப்புகளுக்கு ஈடுகொடுத்து, குனிந்துகொடுத்துப் பழகிக்கொண்டவள் என்று தோன்றியது. வாழ்க்கை என்பது சோக சமுத்திரமாகவே அவள் வரித்து விட்டாப் போலிருந்தது. உள்ளே பாய்ந்து நீச்சலடிக்க ஏற்றது அல்ல அது. எது பற்றியும் அவள் கேட்டுக்கொள்வாள். அபிப்பிராயம் சொல்ல யோசிப்பதாகவே தெரிந்தது. என் அபிப்பிராயத்தால் யாருக்கு என்ன பிரயோசனம் என அவள் அலுத்தும் இருக்கலாம். ஓர் எதிர்பாராத எந்த விபத்துக்கும் தயாராய் அவள் இப்படி எதிர்பார்த்துக் காத்திருப்பது வேடிக்கைதான். பாவமாகவும் இருக்கிறது. வாழ்க்கையை ஒரு வரமாக நினைக்கிற அக்கா, அப்படி ஆக்கிக்கொள்கிற அதித முனைப்பு காட்டினால், இவள்… அம்மா, அது ஒரு சாபம் என முடிவே செய்துவிட்டாப் போலிருந்தது. பெண்கள் ஏனோ அதிதங்களிலேயே சஞ்சாரம் செய்கிறார்கள்…

இத்தனை கடுமையாய் தான் நினைத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்றிருந்தது. அவை கனவுகள், அல்லது அவற்றின் மறுபக்கம்… எனில் ஆண்கள், அவர்களுக்கு கனவுகள் இல்லையா? அ… என ராமலிங்கம் தானறியாமல் தலையாட்டி விட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அவரவர் அவரவர் தூக்கத்தில். பஸ்சுக்குள் விருந்து, தூக்கப் பந்தி நடந்து கொண்டிருந்தது. கண்கள் மூடி பார்க்கும் திறனை தாமே இழந்திருந்தன.

நாலு வரிசை தள்ளி, அந்தப் பெண்… தான் பார்க்கப்படுகிற குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கும் தூக்கம் வரவில்லையோ என்னவோ… அவளைச் சங்கடப்படுத்தி விட்ட குற்றவுணர்வில் சிறிதாய் ஒரு புன்னகையை வழங்க அவன் ஆலோசித்து, முடிவெடுப்பதற்குள் முகம் திருப்பிக்கொண்டாள். தன்னைப் பற்றி அவள் என்ன அனுமானங்கள் கொண்டிருப்பாள், தெரியவில்லை. மேலும் அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் எனத் திரும்பக் கண்ணை மூடிக்கொண்டான்.

சுற்றிலும், பரிச்சயம் அற்ற தெலுங்கு மனிதர்கள். அவர்களது வித்தியாசமான நடை, உடை, பாவனைகள். யாரோடும் பேச விஷயமும் அவனிடம் இல்லை. பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. இப்படிப் பயணங்கள் பெரும்பாலும் அலுப்பையே தருகின்றன. இல்லாவிட்டாலும் அவன் அதிகம் சகஜமான உரையாடல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனும் அல்ல. தெரியாத, பரிச்சயப்படாத இடங்களில், பயணங்கள் சீக்கிரம் முடிந்தால் நல்லது என்ற உணர்வையே தருகின்றன.

கல்யாணம் ஆனபோது அக்கா ஒரு வருடமாய் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். அப்பா காலமானபோது அவள் வேலையில் இருந்தாள். வேலை பார்க்கையில் அவள்தான் எத்தனை மலர்ச்சியாய் இருந்தாள்! சில வாய்ப்புகள் உன்னை அப்படியே உருட்டி உயர்த்திப் பிடிக்கிற மாதிரியும், சில அனுபவங்கள் தலைகுப்புற அடித்து விடுகிறதாயுமே எதிர்கொள்ள முடிகிறது போலும். நிலையின் திரியாது இருத்தல் பெரும் காரியம்தான்… அப்பாவுக்கு உலகம் சார்ந்த யோசனைகள் அதிகம். வீடு, குடும்பம், தன் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும்… என்றெல்லாம் அவருக்குக் கட்டாயமான தீர்மானங்கள் இருந்தன.

வாழ்க்கை சற்று பரந்துபட்ட அளவில் சுதந்திரமாய் அனுபவிக்கக் கிடைக்கிற ஒன்று. அதை நாம் குடும்பம், சமூகம் என்கிற நிர்ப்பந்தங்களுக்குள் இன்னும் சிக்கலாக ஆக்கிக்கொண்டு கொண்டாடுகிறோம், அல்லது திண்டாடுகிறோம் என்று நினைத்துக்கொண்டான். எப்போதிருந்து இந்த மாதிரியெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருந்தான்?

ம். வீட்டில் அம்மா அவன் கல்யாணப் பேச்சை ஆரம்பித்திருந்தாள். இன்னும் வேலை சார்ந்து அவன் நிலைப்பட்டு விட்டதாக நினைக்கவில்லை. அதற்குள்…

"அலை ஓஞ்சி சமுத்திர ஸ்னானம்னானாம் ஒருத்தன்…" என்று அம்மா அவனைப் புன்னகையுடன் பார்த்தாள். அவளுக்குச் சில பொறுப்புகள் இருப்பதான பாவனை அதில் இருந்தது.

"என்னடா, அம்மாவுக்கு மருமகளைப் பார்க்க ஆசை வந்தாச்சி. நீ எப்பிடி? நீயே எதுவும் பொண்ணு கிண்ணு பார்த்து வெச்சிருக்கியா?" என்று அக்கா இம்முறை பேச்சில் இறங்கினாள்.

கல்யாணம் போன்ற லௌகிக விஷயங்களில் பெண்கள் பெரும் உற்சாகம் காட்டுகிறார்கள் என்றுதான் அப்போது உடனே தோன்றியது. மற்றபடி, தன் கல்யாணம் பற்றி அதுவரை அவனிடம் யோசனை எதுவும் இல்லை.

அல்லாமலும், தன் பிரமைகளே அதிகம் உள்ள ஒரு ஆத்மா, இப்படியாய் உள்பாரமும், எதிர்பார்ப்புகளும் கனவுகளும் சுமந்து திரிகிற இன்னொருவரை இணைத்துக்கொண்டு, நெடிய வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்ன? அதுவே ஒரு பெருங் கனவாகப் பட்டது.

••
டமாலென்று சத்தம் கேட்டது. பஸ் சட்டென சுருதி பிசகினாப்போலத் தள்ளாடி ஓடியது. அவனுக்கு உடனே புரிந்தது. பஸ்சில் எதோ டயர் வெடித்துவிட்டது. டிரைவர் வேகத்தை மட்டுப்படுத்தி அதிர்வாய் ஓரங் கட்டினார் பஸ்சை. சிவந்த கண்களுடன் நிறையப் பேர் விழித்துக்கொண்டார்கள். பாதிப் பந்தியில் எழுப்பிவிடப்பட்டாப் போல.

டிரைவர் கீழே இறங்கினார். அவனும் மெல்ல இறங்கினான். கால்களை ஒரே மாதிரி வைத்திருந்ததில் சற்று அசைத்துக் கொடுக்கலாம் போலிருந்தது.

கூடவே அவளும் இறங்கினாள்.

இப்போது அவளை முழுவதுமாய்ப் பார்க்க வாய்த்தது அவனுக்கு. சற்றுக் குட்டையாய் அவள் தோன்றியது அந்த உடல் பருமனால் இருக்கலாம்.

"என்னாச்சி? பஸ் ஏன் திடீர்னு நின்னுட்டது?" என்று அவள் பேசிய தெலுங்கில் அவனுக்குப் புரிந்தது, அவள் தெலுங்குக்காரி அல்ல.

"தமிழா?" என்று கேட்டான்.

"ஆமாம். மதுரை" என்றாள்.

"டயர் பன்ச்சர் போல இருக்கு. ஸ்டெப்னி வெச்சிருப்பானா தெரியல. இருந்தால் மாத்திக் கிளம்புவாங்க. இல்லாட்டி, மாற்று ஏற்பாடு செய்யறவரை…" என்று புன்னகை செய்தான்.
நீளக்கை ரவிக்கை அணிந்திருந்தாள். முதுகுப்பக்கம் அத்தனை திறந்து கிடந்தது, என நினைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"அக்கா வீடு வரை வந்தேன்…" என்றான். அவள் தலையாட்டினாள். ‘நான் இங்கே ஒரு தமிழ்ப்பள்ளியில் ஆசிரியை" என்றாள் வெகு இயல்பாக.

டிரைவரும் கண்டக்டரும் என்னவோ தெலுங்கில் பேசிக்கொண்டார்கள். மாற்று டயர் இல்லை போல.

"உங்களுக்குத் தெலுங்கு புரியும் இல்லியா?" என்று கேட்டான்.

"இவர்கள் இந்தப் பக்கம் பேசும் தெலுங்கு ரொம்ப வேகம். கொஞ்சம் புரியும்" எனப் புன்னகைத்தாள்.
அக்காவாக இருந்தால் இப்படி பஸ் பாதி வழியில் நின்றதற்கே பதட்டப்பட்டிருப்பாள். எல்லாம் சரியாக நடந்தாக வேண்டும் அவளுக்கு. "கிளம்பும்போதே பல்லி…" என்று எதாவது சொல்வாள். எல்லாரும் அவள் பேச்சுக்குப் பின்பேச்சுப் பேசுகிற பாவனை அது. அந்நிய ஆடவனுடன் பேசுகையில் கூட அவள் காட்டும் அந்த கூச்சப் பதுங்கல், உள்ளோட்டம் வேடிக்கையானது.

இப்படி பாவனை காட்டுகிற பெண்கள் கோபம் வருகையில் எல்லாவற்றையும் எப்படியோ பறக்க விட்டு விடுகிறார்கள்! தாவணிப் பிறவிகள்.

அவன் கையில் தண்ணீர் பாட்டில் வைத்திருந்தான். அவன் நீட்டியபோது விகல்பமில்லாமல் வாங்கிக்கொண்டாள். தலையை வானத்துக்கு உயர்த்தி அவள் குடித்தபோது தொண்டைக்குள் தண்ணீர் இறங்குவதைப் பார்த்தான். வாயைத் துடைத்தபடியே "நன்றி" என்று சொல்லித் திரும்பக் கொடுத்தாள். அப்படியே தலையை உயர்த்தினாள். "நான்காம் பிறையாக இருக்கலாம்."
அவனும் தன்னைப்போல வானத்தைப் பார்த்தான்.

"குளிரான அமைதியான அழகான ராத்திரி. இதுவும் வாய்த்த நல்லனுபவம்தான். இல்லையா?" அவனைப் புன்னகையுடன் பார்த்தாள்.

"உங்களைச் சந்தித்தது. அதையும் சேர்த்துக் கொள்ளலாம்."

"ஓ…" என்றாள். "ஒருமுறை குற்றாலம் போயிருந்தேன். பௌர்ணமி ராத்திரி. பொங்கும் நிலவொளி. அருவியா அது! நிலவொளியேதான் அப்படிப் பொங்கிப் பெருகிச் சிரிக்கிறதோ என்று திகைப்பாகி விட்டது. உங்களை போரடிக்கிறேனா?" என்றாள். "ஏனெனில்…"

"சொல்லுங்கள்."

"என் அனுபவம். தவறாகவும் இருக்கலாம்" என்றாள். "அறிவாளியான பெண்ணைப் பார்த்து, ஆண்கள்…" புன்னகைத்தாள். "பயப்படுகிறார்கள்!"

"நான் பயப்படத் தேவையில்லை என நினைக்கிறேன்."

"அதாவது, நான் அறிவாளி இல்லை என்பதாக… இதைத்தான் ஆண் திமிர் என்கிறோம் நாங்கள். ஒரு பிரபல மேற்கோள் நான் சொல்லட்டுமா?"

"ம்" எனத் தலையாட்டினான்.

"கடவுள் முதலில் ஆணைப் படைத்தார். பிறகு தன் தவறைச் சரி செய்தார்."

"சொல் அலங்காரங்களை நாம் வீசி விளையாடுவதை விட்டு விடலாம். இயல்பாய் என்ன உணர்கிறீர்களோ, அதைப் பேசலாம் நீங்கள். இந்த அமைதியான குளிரான ராத்திரி உங்களை நெகிழ வைத்ததை உணர்கிறேன். நாம் சிறிது இப்படி உலாவிவிட்டு வரலாமா? வண்டி கிளம்ப இன்னும் தாமதமாகும்" என்றான் ராமலிங்கம்.

"நாம் இன்னும் சாதாரணமாய் உரையாடிக் கொள்ளலாம்… ஆனால் இந்த முகூர்த்த வேளை. அதன் பவித்ரம். அதன் கனவுச்சாயல், அழகுகளை நாம் இழக்க வேண்டுமா?" என்று கேட்டாள் அவள்.
கையை மடித்துக் கட்டிக்கொண்டு அவனுடன் கால்போன போக்கில் நடந்தாள். அகலமான சாலை. சந்தடியற்றுக் கிடந்தது. ஓரத்தில் சற்றுச் சரிவாய் இறங்கியது. அங்கே நின்றிருந்த ஆலமரத்தின் இலையசைப்பில் சலசலவென்று ஒரு நீரோட்ட சப்தம். இனிமை.

பிறைநிலவை மறைத்தும் விலகியும் விளையாட்டுக் காட்டும் ஆல இலைகள்.

"நீங்கள் இல்லாவிட்டால் இந்த இரவை இப்படி நான் அனுபவித்தேயிருக்க முடியாது மிஸ்…"

"தேவிகா."

"நான் ராமலிங்கம். ஒரு மருந்து விற்பனையாளன். ஜனங்கள் வியாதிவசப்பட்டால் நாங்கள் மகிழ்வோம்."

"ஆனால்… நமக்குள் அடையாள பேதங்கள் இல்லாமலேயே நாம் கலந்துரையாடலாம் என்று ஆர்வப்படுகிறேன்" என்றாள் அவள்.

"ஆகா, இந்தப் பயணம் வீணானது என்கிற அலுப்புடன் இருந்தேன்."

அதை உள்வாங்கிக் கொள்ளாமல் அவள் தன் கவனத்தில் தொடர்ந்து பேசினாள்.

"குழந்தை போல எளிய அளவில் பரிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டிய உலகை நாம் சிக்கலாக்கிக் கொள்கிறோமோ" என்று அவள் திரும்பிப் பார்த்தாள்.

"ஏன்?"

"நமது சூழலைத் தாண்டி உலகைத் துதிக்கைபோல நீட்டி எட்டித் தொடலாம் நாம். பெரும்பாலானோர் அப்படி உணர்வதேயில்லை."

"அப்படி உணர்கிற சிலரும், சுயநல அடிப்படையில் கிடைக்காத ஒன்றுக்குத் துழாவியே துக்கம் சுமக்கிறார்கள் என நினைக்கிறேன்" என்றான் அவன்.

"வாழ்க்கை, அனுபவிக்கக் கிடைக்கிற ஒரு பேரனுபவம். சூழலை வைத்து அதை அளவிடுவது, கொச்சைப்படுத்துவது நல்லது அல்ல. சரிதான். எனக்கும் அப்படி ஓர் அபிப்ராயம் உண்டு." அவளைப் பார்க்கத் திரும்பினான் ராமலிங்கம். "மதுரையை விட்டு எப்படி இப்படியொரு எளிய கிராமத்தில் தமிழ் வகுப்பு போதிக்க என வந்தீர்கள் தேவகி?"

"தேவிகா. இந்த ஊர், அதன் எளிமை, அழகு. மனிதன் பெருக்கிய வசதிகள் அல்ல, இயற்கையின் கொடையான வசதிகள் இங்கே… நான் நிறைய என் கருத்துகளை உங்களோடு ஆவேசமாய்ப் பகிர்ந்து கொள்கிறேனா ராமலிங்கம்?"

"சுய அடையாளங்களை மறந்து நாம் இப்படி உரையாடலாம் என நீங்கள் சொன்ன பின் இந்தக் கேள்வி தேவையற்றது தேவிகா."

அவன் மேலும் தொடர்ந்தான். "எனக்குச் சொல்லத் தெரியவில்லை. குறிப்பாக, இப்படியான தனிமை. உங்களுடன் பயணம். இந்த இரவு… இவை நான் எதிர்பார்த்தேயிராதவை."

"யாரோடும் பேசாமல் இப்படி பஸ்சில் இணக்கமற்ற ஒதுக்கமான பயணம். அதுவே அலுப்பாய் இருந்தது. வெளியே புதிய காற்றே அத்தனை உற்சாகமாய் இருக்கிறது எனக்கு" என்றாள் தேவிகா.
பகலில் பரபரத்துக் கிடக்கிற நெடுஞ்சாலை. எப்படி ஒலிகளை இழந்து பல்லுப் போன கிழவனாட்டம் ஒடுங்கி விட்டது!

எத்தனை ஆச்சர்யமான பெண் இவள்! சுயத்தை அழித்துக்கொள்ள சம்மதித்தவள். அதனாலேயே பெண்களில் இவள் சுயமாய் அடையாளப்படுகிறாள். சமூகம் அளித்த முகங்களைக் கழற்றியெறிய ஆவேசங் கொண்டவள் போலும் உரையாடுகிறாள் இவள். யார் இவள்? என்ன ஆச்சர்யமான இரவு இது… மீண்டும் அடையாளம் என்று நாம் சிலந்தி வலை பின்னிக் கொண்டிருக்க வேண்டாம்… எனத் தன் லகானை இழுத்துக்கொண்டான்.

இவளோடு இந்த நிமிடம் நான் என்ன வேணாலும், எதை வேணாலும் பேசலாம், என்றிருந்தது.
இந்த இணக்கம் ஒருவேளை இன்னொரு ஆணிடம் சாத்தியப்பட்டிருக்குமா என திடுதிப்பென்று நினைத்துக் கொண்டான்.

"என் யூகம் சரியானால், உங்களுக்குள் எதோ பதில் கிடைத்தாப்போல நீங்கள் உற்சாகமாய் இருப்பதாக நினைக்கிறேன்" என்றான் ராமலிங்கம்.

"ஓரளவு உண்மைதான்…" என்றாள்.

"என் தந்தை…" என நிறுத்தினாள். "குடிகாரர். தினசரி அம்மா அவரிடம் அடிவாங்குவதைப் பார்த்திருக்கிறேன் நான். அவரது பொறுப்பற்ற நிலையில் எனக்கு வளர்ந்த பெண்ணாக எத்தனையோ சங்கடங்கள்…"

"புரிகிறது" என்றான். அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

"ஆண்கள் அயோக்கியர்கள் என்கிற கடுமையான விமரிசனங்கள் வைத்திருந்தேன்" என்றாள்.

"அது ஓரளவு உண்மையாயும் இருக்கலாம்" என்றான் ஆறுதல் போல.

"அம்மா கடிதம் போட்டிருக்கிறாள். அதுதான் புறப்பட்டுப் போகிறேன்…" என்றாள்.

"என்னைப் பெண்பார்க்க வருகிறார்கள்."

அவன் தலையாட்டினான்.

"கல்யாணம் பற்றி எனக்கு நல் அபிப்பிராயங்கள் இல்லை" என்றாள். "இதுவரை" என சேர்த்துக்கொண்டாள்.

"அப்படி ஒட்டுமொத்த சமூகத்தை, ஆண்களைப் பழி சுமத்த வேண்டாமோ என்று படுகிறது இப்போது" என்றாள்.

"நல்லது" என்றான்.

"அந்தந்த அனுபவங்களை முன் அனுமானம் இன்றி ஏற்றுக் கொள்வதே நல்லது என்றுதான் எனக்கும் படுகிறது…" என்றவன், "இப்போது" என்று சேர்த்துக் கொண்டான்.

அவர்கள் திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.

About The Author