தீவிரவாதிகளைப் புத்திசாலித்தனமாக வேட்டையாடும் இராணுவத் ‘துப்பாக்கி’.
பெரிய எதிர்பார்ப்பிற்குப் பிறகு மட்டுமில்லாமல் சர்ச்சைக்குப் பிறகும் வெளிவந்திருக்கும் படம். இராணுவ வீரனாகவும் ரகசிய ஏஜெண்டாகவும் பணிபுரியும் விஜய், விடுமுறையில் வீடு திரும்புகையில் எதேச்சையாகத் தீவிரவாதி ஒருவனைப் பிடிக்க நேர்கிறது. அவன் மூலம், தொடர் குண்டி வெடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்து அதை முறியடிக்கிறார். இதனை அறியும் வில்லன் விஜயைத் தேட, விஜய் வில்லனைத் தேட, இறுதியில் யார் யாரைக் கண்டுபிடித்தார்கள் என விறுவிறுப்பாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.
தீவிரவாதிகளை வேட்டையாடும் அதே பழங்கதை எனத் தோன்றிவிடக்கூடாது என்பதற்காக, அடையாளமில்லாமல், காத்திருந்து தாக்கும் ‘ஸ்லீப்பர் செல்’ என்ற பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு கதையை அமைத்திருக்கிறார். வில்லனும் ஹீரோவும் நரம்பு புடைக்கக் கத்திப் பேசுவது, குத்துப் பாட்டு, குத்து வசனம், மிகை உணர்ச்சி வசனம் இப்படி எதுவுமே இல்லாமல் படமாக்கியதற்காக இயக்குநருக்கு ஒரு சிறப்புப் பாராட்டு! தீவிரவாதிகளைக் கொல்லும்பொழுது, அங்கே இருக்கும் இளம்பெண்களை அதைப் பார்க்காமல் திரும்பி நிற்குமாறு விஜய் சொல்லும்படிக் காட்சி அமைத்திருப்பது, இயக்குநருடைய சமூக அக்கறைக்குப் பளிச் எடுத்துக்காட்டு!
தீவிரவாதிகளை ஸ்டைலாகத் தீர்த்துக் கட்டும் விஜய், எந்த ஒரு இக்கட்டான நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான, விறைப்பும் முறைப்பும் மிக்க ராணுவ வீரனாக நடித்துக் கதாப்பாத்திரத்துக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். வித்தியாசமான மேனரிசங்கள், ஸ்டைல் வசனங்கள் மூலம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கிறார். தீவிரவாதிகளால் மட்டுமில்லை நம்மாலும் அவர்களைப் போல் யோசிக்க முடியும் என்று செய்துகாட்டும் 12 மென் ஆப்பரேஷன், தெரிந்தே தீவிரவாதியிடம் தன் தங்கையைச் சிக்க வைப்பது, இது போன்ற பல இடங்களில் அருமையாக நடித்துக் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.
விஜய்க்குச் சவால்விடும் மிகப் புத்திசாலியான வில்லன் வித்யுத் ஜம்வால்! அமைதியான வில்லனாக வலம் வந்து பார்வையிலேயே நம்மை மிரட்டுகிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
அழகுப் பதுமையாக வலம் வரும் காஜல் அகர்வால், படம் முழுவதும் காமெடி பீஸாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனாலும், அப்பாவையே அறைவது கொஞ்சம் டூமச்! நாயகிக்குக் கொஞ்சம் கதையிலும் முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.
விஜயின் மேலதிகாரியாக வரும் ஜெயராம் நம்மைச் சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால், "உன்னுடைய கப்போர்டுல துணிகள், புத்தகங்கள் இப்படியெல்லாம் வைக்குற பழக்கமே இல்லையா?", "பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?" போன்ற சின்னச் சின்ன கிச்சுக்கிச்சுக்களால் நம்மைச் சிரிக்க வைக்கிறார், விஜயின் நண்பனாக வரும் சத்யன் .
‘அண்டார்டிகா’, ‘கூகுள் கூகுள்’ பாடல்களின் மூலம் ஈர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். மதன் கார்க்கியின் வரிகள், புருவம் தூக்க வைக்கும் புதுமை! பாடல் காட்சிகள் மட்டுமில்லாமல் குட்டிக் குட்டி வீதிகளையும், சந்துகளையும் கூட மிகவும் அழகாகவும் இயல்பாகவும் படம் பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.
"ஒரு நாள் லேட்டாகப் போனால் ரொம்பல்லாம் வயசாகிடாது", "ஐயம் வெயிட்டிங்", "ஒரு மேட்டருக்கே உன்னைப் பிடிக்கலை", "ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாதா?", "சஸ்பென்ஸோட செத்துப் போ" போன்ற சின்னச் சின்ன வசனங்கள் அதிகம் கவர்கின்றன. குடும்பத்தோடு தான் இருக்கும் கட்டடத்தில், வெடிகுண்டு இருப்பதை அறிந்த பிறகும் உடனே அங்கிருந்து வெளியேற நினைக்காமல், அங்கே இருக்கும் மற்றவர்களைப் பற்றி நினைத்துத் தானும் குடும்பத்தோடு இறந்துபோகும் காட்சி, ‘மெள்ள விடை கொடு கொடு மனமே’ பாடல் காட்சி ஆகியவற்றைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் இராணுவ வீரர்கள் மேல் ஒரு தனி மரியாதையும், பரிவும் ஏற்படுகிறது.
படம் முடித்து வெளியே வரும்போது, இவையெல்லாம் சாத்தியமா? இவ்வளவு கொலைகள் நடக்கும்போது காவல்துறையினர் சும்மாவே இருப்பார்களா எனப் பல சந்தேகங்கள் தோன்றினாலும், உள்ளே இருக்கும் வரையில் அவை தோன்றாத வகையில் திரைக்கதை அமைத்திருப்பது இயக்குநரின் திறமை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!