துப்பாக்கி – இசை விமர்சனம்

துப்பாக்கி! தலைப்பிற்கே ஏகக் களேபரம். ஒரு வழியாக தலைப்பு கிடைத்து, படத்தையும் தீபாவளி அன்று வெளியிட இருக்கிறார்கள். ஆல்பத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்! ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்பது கூடுதல் எதிர்பார்ப்பு கிளப்பியிருந்தது! அந்த எதிர்பார்ப்பை நிறைவுபடுத்தியிருக்கிறதா ஆல்பம்! வாருங்கள் பார்க்கலாம்!

கூகுள் கூகுள்

சமூக வலைத்தளங்களின் பெயர்களை ஒரு வரிசையில் எழுதி, அதற்கு இடையில் தமிழ் வார்த்தைகளைச் சரியாக பொருத்தினால் கிடைக்கும் சில வரிகள்தான் பாடல்! மதன் கார்க்கியின் புது முயற்சியும் ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலும் சேர்ந்து தொடக்கத்தில் சுண்டி இழுத்தாலும் போகப் போகப் பாடல் எப்போது முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது! அந்நிய வலைத்தளங்களுக்கு இலவச விளம்பரம்!

அண்டார்டிகா

கிடாரின் ஆரம்ப அதிர்வுகள் ஈர்க்கின்றன. விஜய் பிரகாஷின் வசீகரக் குரல் கேட்க வைக்கிறது. இதில் காதலியை வர்ணிக்க விஞ்ஞானத்தைத் துணைக்கு அழைத்திருக்கிறார் மதன் கார்க்கி.

"அடி பெண்ணே! என் மனதை எங்கே? ரேடார் தேடுமா?" போன்ற வரிகள் ‘அட!’ போட வைக்கின்றன.

போய் வரவா?

இந்த மென்சோகப் பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய். கார்த்திக் பாடியுள்ளார், சின்மயி ஹம்மிங் மட்டும் கொடுத்துள்ளார். பாடலை இந்திய இராணுவத்திற்கு அர்ப்பணிக்கலாம். முதல் முறையே மனதில் பதிகிறது! விஜய் படத்தில் இப்படி ஒரு பாடலா என்று எண்ணவும் தோன்றுகிறது. அவ்வளவு மென்மையான வரிகள். உடனடி வெற்றியை இந்தப் பாடலுக்கு எதிர்பார்க்கலாம்.

"நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்,
காதல் தென்றல், கூடக் கடந்து போகும்…" வருடும் வரிகள்!

வெண்ணிலவே

ஹரிஹரன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ள டூயட். நா.முத்துகுமாரின் வரிகளில், மெட்டு பழைய பாடல்களை நினைவுபடுத்தினாலும் இசைக்கோர்ப்பு வித்யாசப்படுத்திக் காட்டுகிறது. அதிராமல் மென்மையாக ஒலிக்கும் இசை. ஹாரிஸுக்காகக் கேட்கலாம்.

குட்டிப் புலிக்கூட்டம்

விஜயின் வழக்கமான அறிமுகப் பாடல்களின் சாயல் தொனிக்கும் பாடல். ‘வெடி’ படத்தின் ‘பாம்பே பொண்ணு’ பாடலையும் நினைவுபடுத்துகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.

ஜெகதீஷ் ஆன் மிஷன் (தீம்)

படத்தின் தீம் இசை. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை. ஹாரிஸின் பழைய படைப்பான ‘தொட்டி ஜெயா’ படத்தின் தீமோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை. எங்கோ கேட்ட மாதிரியும் தோன்றுகிறது!

விஜய்க்கு இது வித்தியாசமான ஆல்பம்தான். ஆனால் ஹாரிஸ் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது! சுதாரித்துக் கொள்வாரா எனப் பொறுத்திருந்து கேட்போம்!

துப்பாக்கி, மென் ஒலியுடன் வெடிக்கும்!

About The Author