தீபாவளி திரைப்படங்கள் – ஒரு முன்னோட்டம்

புத்தாடை, பட்டாசு, இனிப்புகளோடு தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களும் இப்போதெல்லாம் கொண்டாட்டத்தில் இடம் பெற்றுவிட்டன. 2007 தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் 7 திரைப்படங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இங்கு காண்போம்.

1. அழகிய தமிழ் மகன் :

போக்கிரியின் மெகா வெற்றிக்கடுத்து விஜயின் அழகிய தமிழ் மகன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிறது. இதில் விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமீதா. பரதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். சொர்க்கம் திரைப்படத்தில் வரும் ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நடக்கக் கூடியவற்றை முன்கூட்டியே அறியும் ஆற்றல் பெற்றவர் விஜய். இந்த அரிய ஆற்றலால் அவர் சந்திக்கும் விளைவுகள் மற்றும் திருப்பங்கள்தான் கதை. இப்படத்தின் ப்ரிவ்யூ பார்த்த விஜய் தனது திருப்தியை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.

2. வேல் :

அடுத்து நாம் பார்க்கவிருப்பது சூர்யாவின் வேல். திருமணம் மற்றும் ‘அப்பா’ ப்ரமோஷனுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் திரைப்படம் வேல். இதன் இயக்குனர் ‘சாமி’ புகழ் ஹரி. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இதில் சூர்யா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆயுதங்களினால் சாதிக்க முடியாததை ஆறறிவால் சாதிக்க முடியும் என்பதுதான் வேல் திரைப்படத்தின் கதை. கஜினி திரைப்படத்திற்கு பிறகு சூர்யா-அசின் மீண்டும் இதில் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையுமென்று எதிர்பார்ப்போமாக.

3. பொல்லாதவன் :

பரட்டை என்கிற அழகு சுந்தரத்திற்க்குப் பிறகு தனுஷ் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் பொல்லாதவன். மாமனார் ரஜினிகாந்த் முன்பே நடித்த திரைப்படத்தின் பெயர்வைத்திருக்கிறார்கள். வெற்றிவீரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். (‘குத்து’ ரம்யாதான் பெயர் மாற்றிக் கொண்டு வந்துள்ளார்). ஜி.வி. பிரகாஷ் குமார் இசை. ஒரு இளைஞன் தன்னுடைய கனவுகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேற பொல்லாதவனாகிறான் என்பதே இப்படத்தின் கதை. (அட போங்கப்பா!). இதில் நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

4. கண்ணாமூச்சி ஏனடா :

வெற்றிப் படமான ‘கண்ட நாள் முதல்’ இயக்குனர் ப்ரியாவின் இரண்டாவது படம் கண்ணாமூச்சி ஏனடா. இவர் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இதில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், ப்ரித்விராஜ் மற்றும் சந்தியா நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீப்ரியா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடுத்தர வயதுள்ள ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் காதல் மற்றும் அதன் விளைவுகளை கலகலப்பாக சொல்லப்பட்டிருப்பதாகப் பேச்சு. இது தன்னுடைய முந்தைய படத்திலிருந்து வேறுபட்டது என இயக்குனர் ப்ரியா தெரிவித்துள்ளார்.

5. மச்சக்காரன் :

தன்னுடைய ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு ஜீவனின் நான்காவது திரைப்படம் மச்சக்காரன். இவருக்கு ஜோடியாக காம்னா ஜெத்மலானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இயக்குனர் தமிழ்வாணன். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. எதுவும் கிடைக்காத கதாநாயகனும் எல்லாம் கிடைத்த கதாநாயகியும் சந்திப்பதால் ஏற்படும் விவுகள்தான் கதையாம். இப்படத்திற்காக அல்லிநகரில் 3 லட்சம் செலவில் அய்யனார் சிலை எழுப்பியுள்ளனர். மொத்தம் 11 நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனது தனிச்சிறப்பு. ஜீவனும் முதன்முறையாக நகைச்சுவையில் முயன்றிருக்கிறாராம்! (ரசிகர்களை இறைவன் காப்பாற்றட்டும்!)

6. எவனோ ஒருவன் :

மாதவன் நடிப்பில் எவனோ ஒருவன். ஒரு நடுத்தர வயது குடும்பத் தலைவர் நாள்தோறும் இந்த சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியது இத்திரைப்படம். இதில் ஸ்ரீதர் வாசுதேவன் எனும் நடுத்தர குடும்பத் தலைவராக மாதவனும் அவருடைய மனைவி வத்சலா வாசுதேவனாக சங்கீதாவும் நடித்துள்ளார். இரு பிள்ளைகளுக்கு தந்தையாக நடித்துள்ளார் மாதவன். நிஷாந்த் காமத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஒரு மராட்டிய இயக்குனர் என்பது குறிப்படத் தக்கது. இதுவே இவர் இயக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். ஜி.வி. ப்ரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் "டொம்பிவ்ளி பாஸ்ட்" எனும் மராத்திய திரைப்படத்தின் தமிழாக்கம்.

7. பழனியப்பா கல்லூரி :

ப்ரதீப், மது சாலினி, அர்ஜுன் மோகல் மற்றும் அட்சயா போன்ற பல புதுமுகங்களின் நடிப்பில் பழனியப்பா கல்லூரி. ஆர்.பவன் எனும் புதுமுக இயக்குனர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கல்லூரி வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது "பழனியப்பா கல்லூரி".

***

About The Author

1 Comment

Comments are closed.