தமிழ்த் திரையுலகில் மற்ற மொழியினர் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், தமிழ்நாட்டில் பிறந்து, தன் பாடலால் தமிழின் அழகிற்கு அழகு சேர்த்துச் சிறப்பாகப் பாடும் திறம் படைத்தவர்கள் மிகச் சிலரே! அந்த வரிசையில் தனது பதின்மூன்றாவது வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ‘இந்திரா’ படத்தில், ‘நிலா காய்கிறது’ என்ற பாடலைக் குழந்தைக் குரலில் பாடி, திரைவானில் ஒரு முழு நிலவாகச் சுடர் விட வந்தவர் பின்னணிப் பாடகி ஹரிணி. இதுவரை 3000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவருடன் ஒரு நேர்முகம்!
இனி ஹரிணி அவர்களுடன்...
உங்களுக்கு இசையின் மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? உங்கள் பெற்றோர்கள் இசையில் ஈடுபாடு உள்ளவர்களா?
என் பெற்றோர்களுக்கு இசை மேல் ஆர்வம் உண்டு. ஆனால், இசையை முறையாகக் கற்றவர்கள் அல்ல. அம்மாவின் அப்பா, அப்பாவின் அப்பா இருவருமே கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் அதை ஒரு தொழிலாகக் கொள்ளாவிட்டாலும் நன்கு பாடும் திறமை உள்ளவர்கள். அப்பாவின் அப்பா ஸ்ரீனிவாச கோபாலன் ஒரு நாடக நடிகர். அப்போதெல்லாம் பாடிக் கொண்டே நடிக்க வேண்டும். அவர் நடிப்பிற்காகக் ‘கலைமாமணி’ விருது வாங்கியிருக்கிறார். அம்மாவின் அப்பா ஒரு வக்கீல். சித்தூரில் வசித்தவர். அவரும் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். இங்கு ‘கலைமாமணி’ போல அங்கு ‘’டக ரத்னா’ என்ற விருது கொடுக்கிறார்கள். அதை அவர் பெற்றிருக்கிறார். எனவே எங்கள் பெற்றோர்களுக்கும் என்னை இசையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. என் தாத்தாக்களும் அதில் மிகவும் ஆர்வம் காண்பிக்கவே நான் கர்நாடக இசை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.
எப்போது நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்கள்?
முதலில், நாலு வயசில், கிரிஜா என்பவரிடம் கற்றுக்கொண்டேன். எம்.எஸ் அம்மா அவர்களுடன் எங்கள் குடும்பத்திற்குப் பழக்கம் உண்டு. அவரிடம் சென்று கேட்டோம். அவர், "எனக்கு வயசாகி விட்டது. என்னால் முடியாது. என் பெண் ராதா விஸ்வநாதனிடம் கற்றுக் கொள்! எதாவது சந்தேகம் இருந்தால் நான் சொல்கிறேன்" என்றார். அந்த இசை மேதைக்கு முன்னால் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது பெரும் பாக்கியம்!
பின்னர் ராதா விஸ்வநாதனிடம் பத்து வருஷங்கள் போலக் கற்றுக் கொண்டேன். அவருக்கும் வயசாகி விட்டது. அதற்குப் பிறகு ஒரு வருஷம் சுதா ரகுநாதன், சுகுணா புருஷோத்தமன் ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன். இன்னும் லலிதா சந்தானம் அவர்களிடம் கர்நாடக இசைப் பயிற்சியைத் தொடர்கிறேன்.
இவ்வளவு தூரம் கர்நாடக இசை பயின்ற நீங்கள் திரை இசைக்கு எப்படி வந்தீர்கள்? அதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நடக்கும் இசைப் போட்டிகளில் கலந்து கொள்வேன். அப்போது அகில இந்திய அளவில் ஒரு பாட்டுப் போட்டி நடந்தது. அதில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட பக்திப்பாடல், மற்றும் ஒரு கர்நாடக இசைப் பாடல் பாடினேன். அந்தப் போட்டியில் அகில இந்திய அளவில் வெற்றி அடைந்தவர்களில் நானும் ஒருத்தி. அதற்குப் பரிசு வழங்கும் விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்தார். வெற்றி பெற்றவர்கள் ரஹ்மான் சார் முன்னால் பாடினோம். ‘சன் சிங்கர்’ மாதிரியான நேரடி நிகழ்ச்சி அது. அப்போது என் பாடலைக் கேட்ட அவர், தனது ஸ்டூடியோவிற்கு வந்து ஒரு பாடல் பதிவு செய்யுமாறு சொன்னார். எனது குடும்பத்தில் கட்டுப்பாடு ரொம்ப அதிகம். என் பெற்றோர்களுக்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. என் தாத்தா – பாட்டிகள்தான் என்னை ஊக்கப்படுத்தி, பாடும்படி சொன்னார்கள். அப்போது நான் பாடலைப் பதிவு செய்தாலும் ஒரு வருஷத்திற்கு எனக்கு வாய்ப்பு எதுவும் வரவில்லை. அப்புறம்தான் ‘இந்திரா’ என்ற படத்தை எடுத்து வந்த சுகாசினி மணிரத்னம் அவர்கள் தன் படத்தில் குழந்தைக் குரலில் பாடுவதற்கு வேண்டும் என்று என்னை அழைத்தார். அப்படி ஆரம்பித்ததுதான் என் திரை இசைப் பயணம். நான் பாடிய முதல் பாடல் ‘நிலா காய்கிறது’ மிகவும் ஹிட் ஆகி என்னுடைய பிராண்ட் பாடலாகி விட்டது. அப்புறம் வாய்ப்புக்கள் தொடர்ந்து வர ஆரம்பித்ததால் நான் பின்னணி இசைப் பாடகியானேன்.
நீங்கள் பல இசை அமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதற்கும் இளையராஜாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
ஏ.ஆர்.ரஹ்மானிடம் வேலை பார்க்கும்போது ஒரு விதமான சுதந்திரம் இருக்கும். பாடுவதே சுகமானதாக இருக்கும். என்ன சொல்வாரோ என்று கவலைப்பட வேண்டாம். அதுவும் பழகிக் கொள்வதற்கு எத்தனை நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பாட்டின் மெட்டை அவர் இரண்டு நாளுக்கு முன்னாலேயே பாடிக் கொடுத்தோ அல்லது வாத்திய இசையாகவோ அனுப்பி விடுவார். நாம் நன்கு பாடிப் பழகிக் கொள்ள நேரம் கிடைக்கும். பாட்டை ஆலாபனை செய்வதற்கு (மெட்டு மட்டும் மாறாமல்) சுதந்திரம் கொடுப்பார். நம்மால் அந்த மெட்டுக்குள் ஏதாவது புதிதாக அலங்காரம் செய்ய முடிந்தால் செய்யலாம்; நன்றாக இருந்தால் அவர் எடுத்துக் கொள்வார். எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை; ஆனால், அவரிடம் பாடச் செல்லும் அனைவரும் “மன அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக, ரிலாக்ஸ்டாகப் பாட முடிகிறது” என்று சொல்வார்கள். பழைய குரல்களிலேயே தொடராமல் புதிதாகப் பாட வருபவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பார். ‘நிலா காய்கிறது’ பாடலை இரண்டு நாட்களுக்கு முன்பே நான் பழகிக் கொள்வதற்காக அனுப்பி விட்டார். ஒவ்வொரு பாடகரிடமும் அவரது முழுத்திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைப்பார். ஆனால், மேற்கத்திய இசைப் பாடல்களுக்கோ குத்துப் பாடல்களுக்கோ அவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை – ஒரு மணி நேரத்திற்குள் பாடிவிடலாம்.
இளையராஜாவைப் பொறுத்த வரை, அவர் ஒரு இசை மேதை. அவரிடம் பாடும்போது ஒரு கட்டுப்பாடு இருக்கும். ரிகார்டிங்போது அவரும் கூடவே இருப்பார். இந்தக் காலத்தில் யார் அப்படி இருக்கிறார்கள்? பாட்டு மெட்டுக்கள் இன்டர்நெட் மூலம் வருகின்றன; அதிலேயே பாடி அனுப்பினால் கரெக்ஷன் சொல்வார்கள். நேருக்கு நேர் சந்தித்துப் பாடுவதே அபூர்வம் ஆகி விட்டது. ஆனால், இளையராஜா தான் ஒரு மாஸ்டர் – தான் சொல்வதைப் பாடுபவர்கள் அப்படியே பாடவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர். ஸ்வர்ணலதா அவர்கள் மிகவும் நன்றாகப் பாடக் கூடியவர். அவரது குரலுக்கு மெருகேற்றியவர் ஏ.ஆர்.ரஹ்மான்தான்.
யுவன் ஷங்கர் ராஜா, இமான், ஜி.வி.பிரகாஷ் என்று இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் அனைவருமே பாடகர்களின் கற்பனைக்கு நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு பாடல் வெற்றி அடைவது என்பது அத்தனை பணம் செலவழித்துப் படம் எடுப்பவர்களுக்கு மிகவும் முக்கியமாக இருக்கும். இப்போது குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிகிறது. நிறையப் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் புதிது புதிதாக வருகிறார்கள்.
உங்கள் பாடல்கள் பெரும்பாலும் மெலடியாகவோ கர்நாடக இசையைச் சார்ந்ததாகவோ மட்டுமே இருக்கின்றனவே? ஏன் நீங்கள் குத்துப் பாடல்கள் போன்றவற்றைப் பாடுவதில்லை?
நான் பாடல்களைத் தேர்ந்தெடுத்துத்தான் பாடுகிறேன். என் பாட்டுக்கள் வெற்றி பெறுவதற்குப் பாட்டின் வரிகளும் அதன் மெட்டும் நன்றாக அமைவதுதான் காரணம். பாட்டின் வரிகள் எனக்குப் பிடிக்காததாகவோ இரட்டை அர்த்த அல்லது ஆபாச வார்த்தைகள் என்று என் மனதுக்குத் தோன்றினாலோ அந்தப் பாடல் வாய்ப்புக்களை மறுத்துவிடுவேன். அதற்காக, மற்றவர்கள் பாடுவது தவறு என்று நான் சொல்லவில்லை; எனக்கு மனதுக்குப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறீர்கள்? மற்ற மொழிப் பாடல்கள் பாடியிருக்கிறீர்களா?
இதுவரை 3000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். தெலுங்கில் நிறையப் பாடியிருக்கிறேன். கன்னட, மலையாள மொழிகளிலும் பாடியிருக்கிறேன். விருதுகளும் வாங்கியிருக்கிறேன்.
உங்களுக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம் என்றும் நீங்கள் பாடிய அத்தனை பாடல்களையும் இன்றும் பார்க்காமலே பாடுவீர்கள் என்றும் சொல்கிறார்களே?
ஆமாம் – எனக்கு நினைவாற்றல் கொஞ்சம் அதிகம் உண்டு. நான் பாட்டு வகுப்புகள் போகும்போது கூட நோட்ஸ் எடுத்துக் கொள்ளாமல் போவேன். பாட்டு ஆசிரியர் கூட, "நினைவாற்றல் நல்லதுதான்; ஆனால், நோட்ஸ் எடுக்காமல் போகாதே" என்று அறிவுரை சொல்லுவார். என் பையனுக்குக் கூட நினைவாற்றல் அதிகம் இருக்கிறது. எதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்றால், அதைச் சுற்றி வளைத்து, "அன்னிக்குக் கூட நீ ஆரஞ்சு கலர் புடவை கட்டிண்டு இருந்தியே? அப்போது டி.வி-யில் கூட இந்த நிகழ்ச்சி நடந்துதே? அப்பா கூட அப்போ வந்தாரே" என்று எல்லா விஷயத்தையும் நினைவில் வைத்துச் சொல்வான்.
பள்ளியில் படிப்பதற்கு நினைவாற்றல் மிகவும் வேண்டும். அதனால் உங்களுக்கு அது மிகவும் உதவியாக இருந்திருக்குமே?
நான் படிக்கும் காலத்தில் அடிக்காத கூத்து இல்லை. சி.ஏ-க்கான முதல்படி தேர்வில் இரண்டு மதிப்பெண்ணில் தவற விட்டேன்; டாக்டருக்குப் படிக்கணும் என்று +2வில் பயாலஜி எடுத்தேன்; எத்திராஜில் டிகிரி முடித்தேன்; எம்.சி.ஏ படிக்க முயற்சி செய்தேன்; ஆனால், எதையும் முழுசாக முடிக்கவில்லை. நாம் எல்லாமே கிடைக்கணும்னு ஆசைப்படலாம். ஆனால், அத்தனையும் நடப்பது என்பது நிச்சயம் இல்லை; அப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை.
ஏன் நீங்கள் கர்நாடக இசையில் தொடர்ந்து கச்சேரிகள் செய்வதில்லை?
எல்லாவற்றிற்கும், நேரம் இல்லாததுதான் காரணம். குழந்தைகள் இரண்டும் இரண்டுங்கெட்டான் வயது. எங்களது கூட்டுக் குடும்பம். நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கச்சேரி செய்வதற்கு முன்னால் என்னை நான் முழுதாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். சிறந்த பாடகி என்ற பெயரெடுக்க வேண்டும். இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருஷங்களில் நான் பாட ஆரம்பிப்பேன். இப்போதே சபாக்களில் கேட்கிறார்கள். நான்தான் ஒத்துக் கொள்ளவில்லை.
திரை இசை பாடுவதற்குக் கர்நாடக இசை அடிப்படைத் தேவையா?
(பலர் மனதிலும் இருக்கும் இந்தக் கேள்விக்குக் கர்நாடக இசையுலகிலிருந்து திரையிசைக்குச் சென்று வெற்றி பெற்றவரின் பதில் என்ன? தெரிந்து கொள்ள வாருங்கள், அடுத்த வாரம்!)