தீக்குள் மனம்

காய்கறிக் கூடையைக் கீழே வைத்தான். பால் பாக்கெட் மேலாக இருந்தது. மூன்று மாடிகள் படியேறியதில் மூச்சு வாங்கியது.

"ஸ்ஸ்… ஹப்பாடா… சாந்தி… எனக்கு அரை வாய் காப்பி வேணும்…" கிச்சனைப் பார்த்துக் கூவினான்.

வைதேகி பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டாள்.

ரோஸ் நிற டவல். முகம் இளமையாய். சாந்தியை விட நான்கு வயது சின்னவள். சகலத்திலும் புலப்படுகிற இளமை.

"என்ன… அதுக்குள்ளே குளியல்…?"

"சமயபுரம் போகணும்னு சொன்னேனே…"என்றபடி துண்டை உதறினாள். மேலே ஒரு துளி பட்டுத் தெறித்தது.

"பவுடர் இங்கே இருக்கு."

நைஸில் டப்பாவை நீட்டினான். சாந்தி அதே நேரம் காப்பி தம்ளருடன் வந்து நின்றாள்.

"உன் லிஸ்ட்படி எல்லாம் வாங்கியாச்சு."

"இலை வாங்கினீங்களா…"

"ப்ச்… மறந்துட்டேன்."

அவ தட்டுல சாப்பிட மாட்டா. ரொம்ப சுத்தம் பார்க்கிறவ."

வைதேகி குறுக்கிட்டாள். "அதெல்லாம் ஒண்ணுமில்லே. இங்கேதான் இலை கிடைக்கிறது. இலைல சாப்பிட்டா அது ஒரு டேஸ்ட்"

"நான் போறேன், மறுபடி…"

"வேணாம் விடுங்க, மனோகர்."

மறுபடி படியிறங்கி அரை கி.மீ. தூரம் போக வேண்டும், வைதேகியே வேண்டாம் என்கிறாள். விட்டு விடலாமா… அல்லது… அவளே ஆசைப்பட்டு…

தீர்மானித்தான். "நோ பிராப்ளம். போயிட்டு வரேன்."

சாந்தி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டுப் போன மாதிரி தோன்றியது.

"உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கே. இங்கே பாரு… இங்கே குடிவரும் போதே சொல்லி இருக்கேன். பழைய எடம் மாதிரி நெனச்சா கடைக்கு ஓட முடியாது. யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்… என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே."

முன்பு வள்ளென்று விழுந்ததின் ‘ரீப்ளே’.

******

இன்று துளிக்கூட சிணுங்கல் இன்றி மீண்டும் படியிறங்குகிற புத்தி. காரணம் வைதேகி. சாந்தி என் உள்மனதைப் படித்துவிட்டாளா?

சைக்கிள் மிதிக்கையில் மனக் குதிரை ஓடியது. ஒரு பக்கம் சாந்தி. மகன் அர்விந்த். இன்னொருபுறம் வைதேகி.

இலைக்கட்டுடன் திரும்பிவரும் போது ‘வைதேகிக்காக…’ என்ற நினைப்பில் அலுப்பு பின்தங்கிக் கொண்டது.

"டாடா சுமோ வருது. நானூத்தம்பது ரூபா.. சமயபுரம் போயிட்டு வந்துரலாம். ரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருக்கேன்…" என்றான்.

"என்னால சிரமம்… உங்களுக்கு…" என்றாள் வைதேகி.

"நத்திங் இவ கூட, போகணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கா. பஸ் ஏறி போயிட்டு வரதுக்குள்ளே… தாவு தீர்ந்துரும். உன்னோட புண்ணியத்துல கார் சவாரி…"

சாந்தியைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

இன்னும் எத்தனை தடவை இது மாதிரி சங்கடங்கள் நேருமோ?

"ஹை… கார்ல போறோமா…" என்றான் அர்விந்த்.

"ஆமா… போய் ஹோம்வொர்க் எழுதிரு. இவங்க வந்தாங்கன்னு லீவு வேற போட்டாச்சு."

"வினு… வா… கீழே போகலாம்.."

அர்விந்த், வைதேகியின் மகளுடன் வெளியே ஓடினான்.

"டேய்… நில்லுடா. சொல்லிக்கிட்டே இருக்கேன்."

சாந்தி மூடிய கிண்ணத்துடன் வந்தாள்.

"பின் வீட்டு மாமாக்கு பால் பாயசம்னா ரொம்பப் பிடிக்கும். கொடுத்துட்டு வரீங்களா…?"

"என்னை வுட்டுரு."

“நானே போயிட்டு வரேன்.."

சாந்தி வெளியே போனாள். திரும்ப அரை மணி நேரமாகும். அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். ‘யார் விருந்தாளி வந்திருப்பது…’ என்று ஆரம்பித்து பேச்சு ஓடும்.

*****

சட்டென்று வாய்த்த தனிமை. அதுவும் வைதேகியுடன். இதயம் ஏனோ கூடுதலாய் துடிக்கிற பிரமை.

"நீ ஃபோன் பண்ணப்ப, நிச்சயமா வருவேன்னு எனக்குத் தோணல. விஸ்வம் உன்னை அனுப்பவே மாட்டானே" என்றான்.

அதெல்லாம் வேஷம். எப்ப நான் வெளியே போவேன்னு இருப்பாரு…"

“ஏய்… சும்மா சொல்லாதே… நியூ இயர்க்கே உனக்கு பிரேஸ்லெட் ரெண்டு பவுன்ல செஞ்சு கொடுத்தவனாச்சே…"

"இல்லே மனோகர். நீங்க நெனைக்கிற மாதிரி இல்லே. ஹி இஸ் வெரி ஸெல்ஃபிஷ்."

மனோகர் அவளை உற்றுக் கவனித்தான்.

"என்ன நீ… அன்னைக்கு ஃபோன்லயும் ஒரு மாதிரி விரக்தியாப் பேசினே. இப்பவும் என்னவோ போலப் பேசறே. ஜ ஃபீல் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. நிச்சயம் உங்களுக்குள்ளே தகராறே வராதுன்னு."

வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்மறையாய் பிரயோகிக்கப்பட்டதில் வைதேகி சீண்டி விடப்பட்டாள்.

மனோகர் மேலும் சீண்டினான்.

"இதுவே… இப்ப என் கேஸை எடுத்துக்க. நான் என்னதான் வெளிப்படையா இருந்தாலும், உட்கார்ந்து பேசினாக் கூட சாந்தி கமுக்கமாத்தான் இருப்பா. மனசுல இருக்கறது வெளியே வரவே வராது. மிஞ்சிப்போனா ஒண்ணு அழுவா. எங்களுக்குள்ளே நானே அனுசரிச்சுப் போய்டலாம்னு விட்டுக் கொடுத்துடுவேன்."

"உங்களை மாதிரி கிடையாது விஸ்வம்… அவ்வளவும் விஷமம்… திருட்டுத்தனம்… நானா அவரை இழுத்து வச்சு பேசினாக் கூட வார்த்தையே வராது. பணம்.. நகை மட்டும் லைஃப் இல்லே மனோகர்."

வைதேகியின் குரல் லேசாய் கிரீச்ச்சிட்டது.

"வைதேகி… நீ சாந்தியோட டிஸ்டண்ட் ரிலேஷன்னு உங்க கல்யாணத்தும் போதுதான் தெரிஞ்சுது. யூ வோண்ட் பிலீவ். என்னால உங்க மேரேஜ் அட்டெண்ட் பண்ண வர முடியும்னே தோணலே. இவ ரொம்ப கம்பெல் பண்ணதாலே வந்தேன். ஆனா… உன்னைப் பார்த்ததும்… ஸாரி. தப்பா நெனச்சுக்காதே. யூ ஆர் ஸம்திங் டிஃபரண்ட்னு தோணிச்சு. விஸ்வம் அவ்வளவு லக்கின்னு.."

மிகச் சரியான அளவிலும், தொனியிலும் வார்த்தைகள் வெளிப்பட்டன. காற்றில் கரையாமல் அப்படியே மறுபடி படிக்க வசதியாய் நின்றது போல பிரமை தட்டியது.

வைதேகி அவனைப் பார்க்கவில்லை. சுய சோகப் பாதிப்பில் இன்னமும் ஆழ்ந்திருப்பது போலவே தோன்றியது. தான் சொன்னதைக் கேட்டாளா?

"மறுபடியும் தப்பா நெனைச்சுக்காதெ . எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா, உன்னை அப்ப பார்த்திருந்தா நிச்சியமா ப்ரபோஸ் பண்ணியிருப்பேன். எதுக்குச் சொல்றேன்னா… டோண்ட் ஃபீல் இன்ஃபீரியர்… விஸ்வம் உன்னை நிச்சயம் புரிஞ்சுப்பான்."

வைதேகி தலையசைத்தாள் மறுப்பாய். "இல்லே மனோகர்… அவர் நிச்சயம் மாறவே மாட்டார்.. ப்ச்…"

அந்த நிமிடம் சாந்தி உள்ளே வந்தாள்.

சட்டென்று பேச்சு அறுந்துவிட்டது. அதுவரை பேசாமலே இருந்த மாதிரி திடீர் அமைதி.

"என்ன… சாப்பிட்டுரலாமா…"

*****

இலை போடப்பட்டது.

"நீயும் உட்காரேன் சாந்தி…"

"வேணாம். பரிமாறிட்டு அப்புறம் சாப்பிடறேன்."

"நீயும் உட்காரேன். அப்புறம் லேட்டா சாப்பிட்டு… அசிடிடி வந்ததுன்னு புலம்புவே…"
என்றான் பாதி எரிச்சலாய்.

"இப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிருந்தா என்னைக் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டீங்கதானே…" என்றாள் சாந்தி யதார்த்தமான குரலில்.

விசுக்கென்று மனோகர் திரும்பிப் பார்த்தான்.

"என்ன மனோகர்… சொல்லுங்களேன்…" என்றாள் வைதேகி.

சாந்தி அவனையே பார்த்தாள். ஆறு வருஷ தாம்பத்யம் கண்களில் மின்னிக் கொண்டிருந்தது.

"சொல்லுங்க…" என்றாள் பாதி விளையாட்டாய், பாதி தீவிரமாய்.

அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ சுட்டெரித்தது.

About The Author

2 Comments

Comments are closed.