மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம். இதற்கு முந்தைய ஸ்பைடர்மேன் வரிசைப் படங்களில் நடித்த யாரும் இதில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முக்கிய விஷயம், முந்தைய பாகங்களைப் போல் அல்லாமல் ஸ்பைடர்மேன் காமிக்கில் (comic) இருக்கும் கதாபாத்திரத்தை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். உதாரணம், அவரது பள்ளிப் பருவ காதலியாக வரும் க்வென் ஸ்டேஸி (Gwen Stacy).
இதில் பீட்டர் பார்க்கர் பாத்திரத்தினை ஏற்றிருப்பவர் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் (Adrew Garfield). முந்தைய பார்க்கரை விட நன்றாக இருக்கிறார். சித்தரிக்கப்பட்ட விதமும் சீரியஸாக கவனிக்க வைக்கிறது. இது பழைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் கதை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது. கதையின் போக்கும் வித்தியாசமாகவே இருக்கிறது. அடித்தளம் என்னவோ அதே பழைய கருதான்.
ஸ்பைடர் மேனின் அம்மாவும், அப்பாவும் ‘ஆஸ்கார்ப்’ எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு விமான விபத்தில் இறக்க நேரிடுகிறது. அதனால் மாமா, அத்தையுடன் வசித்து வரும் அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார். வழக்கம் போல் காமிராவுடன் சுற்றி தனது காதலியை அவருக்குத் தெரியாமலேயே புகைப்படம் எடுக்கிறார். அப்பாவி மாணவனை மற்றொருவனிடம் இருந்து காப்பாற்ற அடி வாங்கும்போது பரிதாபப்படவும், அப்போது க்வென் ஸ்டேஸி தானாக வந்து காப்பாற்றியபின் இருவருக்கும் நடக்கும் உரையாடலின்போது ரசிக்கவும் வைக்கிறார் தன் நடிப்பால்.
வீட்டை ஒரு நாள் சுத்தம் செய்யும்போது தனது தந்தை பயன்படுத்திய பையைப் பார்க்கிறார். அதைப் பார்த்தவுடன் சிறு வயது ஞாபகம் மனதில் மின்னி மறைகிறது. அதை தனது அறைக்கு எடுத்து வந்து ஆராய்கிறார். ஒரு புகைப்படமும், ஆஸ்கார்ப் நிறுவனத்தின் முக்கிய கோப்புகளும் கிடைக்கின்றன. அது அவ்வளவும் தனது தந்தையின் கண்டுபிடிப்பு என தெரிய வருகிறது.
புகைப்படத்தில் உள்ள தனது தந்தையின் நண்பர் டாக்டர் கர்ட் கான்னர்ஸ், தற்போது ஆஸ்கார்ப் நிறுவனத்தில் வேலை செய்வதை இண்டர்நெட் வழியாக அறிகிறார். அங்கு சென்று ரகசிய இடத்தைப் பார்க்கப் போகும்போது ஒரு சிலந்தி கடித்து விடுகிறது. சிலந்தி கடித்ததால் சுவற்றில் ஏறும் சக்தியும், உடல் வலிமையும் கிடைக்கிறது.
டாக்டருடன் மெதுவாக நட்பை ஏற்படுத்தியபின் அவரது ஆரய்ச்சிக்குப் பயன்படும் ஃபார்முலாவை தன் தந்தையின் பையில் இருந்து எடுத்துத் தருகிறார். வெட்டுப்படும் பல்லியின் உடல் உறுப்பு மீண்டும் வளர்வதைப் போல, அந்த நிறுவனம் பிற உயிரினங்களின் உடல் உறுப்பையும் வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக ஹீரோவும், டாக்டரும் எலியின் மீது அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அது வெற்றியும் அடைகிறது.
நிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாக டாக்டர் தனது உடம்பில் செலுத்துகிறார். அவருக்கும் கை வளர்கிறது. ஆனால், அந்த மருந்து இவரை ராட்சஸப் பல்லியாக மாற்றுகிறது. அட்டகாசம் செய்கிறார்.
தன்னால்தான் இந்த பிரச்சினை உருவானது; அதைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பார்க்கர் செயல்படுகிறார். இதற்கு அவரது காதலியும் உதவுகிறாள். முடிவு வழக்கம்போல்தான்! பார்க்கர் வெற்றி அடைகிறார்.
சுவாரஸியம் கருதி மொத்த கதையையும் இங்கே சொல்லவில்லை. வசனம் படத்திற்கு முக்கிய பலம். ஒரு காட்சியில் ஒரு பிரச்சினையின் விளைவாக பள்ளியில் இருந்து பார்க்கரை சஸ்பெண்ட் செய்வார்கள். அப்போது அங்கே வரும் க்வென் ஸ்டேஸியுடன் நடைபெறும் உரையாடல் :
இதைப்போல் படம் முழுவதும் வசனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
படத்தின் க்ராபிக்ஸ் (graphics) காட்சிகளுக்குத்தான் அதிக காலம் ஆனது என்றும், அதனால்தான் வெளிவர தாமதமானதென்றும் அனைவரும் அறிந்ததே. ஏன் தாமதம் என்று படம் பார்க்கும்போது புரிகிறது. ஒரு விபத்துக் காட்சியில், பார்க்கர் ஒரு சிறுவனை காரில் இருந்து காப்பாற்றுவதற்காக ஒரு கையால் வலையையும், மற்றொரு கையால் காரையும் பிடித்துக்கொண்டு இருப்பார். அந்தக் காட்சி அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.
முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயம், இதில் நான்தான் ஸ்பைடர்மேன் என்னும் உண்மையை தன் காதலியிடம் தனது செயல்களால் எந்த தயக்கமும் இன்றி சொல்கிறார் நாயகன். கூடுதல் சுவாரஸ்யமாக.. இதில் ரொமன்ஸ் கூட செய்கிறார்இதில் வலை உமிழும் கருவியை தானே வடிவமைக்கிறார்.
படத்தின் +:
1. முந்தைய படங்களில் காட்டப்படாத கோணத்தில் ஸ்பைடர்மேன் காட்டப்படுகிறார்.
2. கிராபிக்ஸ் காட்சிகள் அருமை.
3. தமிழ் வசனம் கவனத்தினை ஈர்க்கிறது.
4. 3டி தொழில் நுட்பம் வேறு எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தமாகப் பார்த்தால் இது சூப்பர் மேன் (Super Man) கதையாக இல்லாமல் சூப்பர் குட் மேன்(Super Good Man) கதையாக ரசிக்க வைக்கிறது.
‘தி அமேசிங் ஸ்பைடர் மேன்’ முந்தைய பாகங்களை விட நன்றாக இருக்கிறது.
வணக்கம்.. நான் எனது பேத்தியுடன் படத்திர்குப்போனேன்..படம் நன்றாக இருக்கிறது…ஆனால் முத்தக்காட்சிகள் ஒன்றிரண்டு வரும்போது…குழந்தை ஏதாவது கேட்டு விடுமோ என பயமாக இருந்தது.. முத்தக்காட்சிகளை தவிர்த்திருக்கலாம்..