திரை விமரிசனம் – பிரிவோம் சந்திப்போம்

திருமணமான பிறகு ஒரு பெண் தனது கணவனின் விருப்பத்தையே தன் விருப்பமாகக் கொள்கிறாள். கணவன், மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்தாலும் அவளுக்கென்று ஒரு தனி மனம், தனி ஆசைகள் இருப்பதைப் புரிந்து கொள்வதில்லை என்பதுதான் கரு. உபரியாக கூட்டுக்குடும்பத்தில் உள்ள சந்தோஷங்களையும் சொல்கிறது.

உண்மையிலேயே இது போன்றதொரு கதையை வழக்கமாக வரும் ‘மசாலா’ படங்களுக்கு நடுவே படமாக்கத் துணிந்த இயக்குநரைப் பாராட்டியே தீரவேண்டும். ரொம்ப நாளைக்கு (வருஷங்களுக்கு)ப் பிறகு ஒரு ‘நீட்’டான குடும்ப சென்டிமென்ட் உள்ள, ‘இரண்டு குத்துப்பாட்டுகள் நாலு சண்டைக்காட்சிகள்’ என்று எதுவுமே இல்லாத படம். அதனால்தானோ என்னவோ கதை மெதுவாக நகர்வது போலத் தோன்றுகிறது- ஆனாலும் மனதை வருடிச் செல்கிறது.

செட்டிநாட்டுக் குடும்பப் பழக்கவழக்கங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது காட்சியமைப்பு. செட்டிநாட்டு வீடுகள், கல்யாணம் ஆகியவை கச்சிதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குடும்பத்தின் வாழ்க்கைக்குள் சென்றுவந்தாற்போல் தோன்றுகிறது. ஆனால் முதல் முப்பது நிமிடங்களுக்குப் பின் களம் மொத்தமாக மாறிப்போவதில் சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

கதை என்னவோ ஒரு சிறிய காகிதத்துக்குள் அடங்குவதுதான். ஒரு சிறிய குடும்பத்தைச் சேர்ந்த சினேகா மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார், அவர்களது வாரிசுகள் என்ற ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறார். கூட்டுக் குடும்பத்தின் சுவையைஅனுபவித்த அவருக்கு ஓர் அதிர்ச்சி – கணவனுக்கு அட்டக்கட்டு எனும் இடத்திற்கு மாறுதல். கணவனின் விருப்பமே தனது விருப்பமாக அங்கு செல்கிறார். வெளிப்பார்வைக்கு அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் கூட்டுக் குடும்பத்தையும் சொந்தங்களையும் பிரிந்த வேதனையால் மன அழுத்தம் ஏற்படுகிறது. கடைசியில் மறுபடியும் கூட்டுக் குடும்பத்திலேயே இணைகிறார். இதுதான் கதை.

முதலில் ஒரு மோதல், பின்னர் கனவுப்பாட்டு, அதன் பின்னர் காதல் – இதுதான் பார்முலா என்றிருக்கும் தமிழ் சினிமாவில், நாயகி பெற்றோர்கள் சொல்வதை உடனே ஏற்றுக் கொள்வது, மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வது போன்றவை யதார்த்தங்கள். ரெஸ்டாரன்டில் தனிமையில் சினேகாவை சந்திக்கும் கனவுகளோடு சேரன் காத்திருக்க சினேகா தன் நண்பிகளோடு சென்று சந்திப்பதும், கோவிலில் சேரனைப் பார்த்து பேசிய பிறகு அவரது உறவினர்கள் அங்கிருப்பதைப் பார்த்து அவர்களை விசாரித்துவிட்டு சேரனை ‘அம்போ’ என்று விட்டுவிட்டு அவர்களுடன் காரில் செல்வதும் கலகலப்பு.

தனிமையில் ‘மிக்சி’ சப்தம், பறவைகளின் ஒலி இவைகளைப் பதிவு செய்து கொண்டு அவற்றைக் கேட்டு பொழுதைப் போக்கும் இடங்களில் தனது மன அழுத்தத்தைச் சிறப்பாகவே வெளியிட்டிருக்கிறார் சினேகா. சோப்பு போட்டு அலம்பியது போன்ற அவரது பளிச் முகம், புன் சிரிப்பு, மன அழுத்தத்தைக் காட்டும் இடங்களில் ஒரு சோகம் என மொத்தத்தில் இந்தப் படம் சினேகாவிற்கு ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும். இவரைத் தவிர வேறு எவரும் இந்தப் பாத்திரத்திர்கு இவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்தியிருப்பார்களாவென்பது சந்தேகமே. சேரனுக்கு அதிகமாய் வேலையில்லை. அத்தனை கூட்டத்திலும் சேரன் ஒருவர்தான் சற்று செயற்கையாய்த் தெரிகிறார். படம் இயக்குவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

ஜெயராம் டாக்டராக வந்து கலகலப்பூட்டுவதுடன், சுபமான முடிவிற்கும் காரணமாக இருக்கிறார். வசனங்கள் சில இடங்களில் ‘பளிச்’. உதாரணத்திற்கு, உலக அழகியும் உலக அழகனும் கல்யாணம் பண்ணிக்கொண்டால்கூட ஒருவரை ஒருவர் ஒரு வருஷத்துக்குமேல் பார்த்துக்கொண்டேயிருக்க முடியாது. ‘மதுவிலக்கு குஜராத்ல மட்டும் இருக்குன்னா காந்தியை ஏன் இந்தியப்பிதா அப்படிங்கிறீங்க, குஜராத் பிதான்னு சொல்லுங்க’ போன்ற இடங்கள் ஜொலிக்கின்றன.

வித்யா சாகரின் இசை படத்திற்கேற்றார்போல் இதம். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான சம்பவங்களைச் சேர்த்திருந்தால் சுவைகூடியிருக்கும். படம் ஆமைவேகத்தில் நகருவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் துணிச்சலான மெசேஜுடன் கூடிய குடும்பக்கதையைத் தந்ததற்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஒரு ‘ஓ’ போடலாம்.

About The Author

3 Comments

  1. Rajkumar

    அன்புள்ள நண்பருக்கு வணக்கம்,விமரிசனம் அருமை. பாராட்டுக்கள்!! ராஜ்குமார்.

  2. Rajeshwari

    விமர்சனம் சிறப்பாக உள்ளது. சினேகாவுக்கு இத்தனை ஜொள்ளு அவசியமா? டனுஷ் படத்தில் அவர் (விபச்சாரியாக) நடித்தது… Please do not forget before you start writing anything as such! Useless Review!

Comments are closed.