திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் (29)

பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று!

சிருங்காரமான நடனங்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே சோபித்தவர் இல்லை பானுமதி! சோகம், வெறுப்பு, பயம், கோபம் போன்ற நவரசங்களின் தேக்கம் அவர் என்பதை அவரது நடிப்பு பல படங்களில் காண்பித்தது. இதற்குச் சிகரம் வைத்தாற் போல வெளியான படம் ‘அன்னை’. 1962ம் ஆண்டு இது வெளியானது.

ஏ.வி.எம். புரடக்ஷன் எடுத்து நூறு நாட்கள் ஓடிய படம் இது. அற்புதமான வலுவான கதை அமைப்பானது தத்து எடுத்த ஒரு தாயின் பாசத்தைக் காண்பிக்கும் ஒரு நடிகையை எதிர்பார்த்தது. இதை சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தார் பானுமதி. தேசிய விருதும் பெற்றார்!

அதில் வரும் அருமையான பாடல்களில் ஒன்று பூவாகிக் காயாகி கனிந்த மரம் ஒன்று என்ற பாடல்.

பூவாகிக் காயாகி கனிந்த மரம் ஒன்று
பூக்காமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா
ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை
உறவை எல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை
எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தாள்
இந்த செல்வம் திருப்பித் தரும் செல்வம் இல்லை கண்ணே!
செல்வம் இல்லை கண்ணே!

சாவித்திரியாக நடித்த பானுமதி தன் திறமையை எல்லாம் காட்டி நடித்த படம் மட்டுமல்ல இது; தன் இனிய குரலால் சோகத்தைப் பிழிந்து பாடிய பாடலைக் கொண்ட படமும் கூட இது!

தேசிய விருதை ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் வாங்கிய இவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. விருதை அளித்த ஜனாதிபதி நான் உங்கள் விசிறி என்றார்!

பால்ராஜ் சஹானியோ இந்தப் படத்தைப் பலமுறை பார்த்துவிட்டு இந்தியாவில் மட்டுமல்ல மேலை நாட்டிலும் இப்படி யாரேனும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்று புகழாரம் சூட்டினார்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலில் முதலிரு வரிகளிலேயே கதையின் அஸ்திவாரத்தைத் தன் துல்லியமான வார்த்தைகளில் தந்து விடுகிறார்.

கனிந்த மரமும் காய்க்காமல் கிடந்த மரமும் பற்றிக் கூறிய கவிஞர் கதையின் கருவிற்கேற்ப இந்த செல்வம் திருப்பித் தரும் செல்வம் இல்லை கண்ணே என்று பாடி பிள்ளையைத் தத்து எடுத்து வளர்த்த தாயுள்ளத்தின் வேதனையை சாரமாகப் பிழிந்து தருகிறார். ஆர்.சுதர்ஸனம் இசையை அமைத்தார்.

அம்பிகாபதி படத்திலும் பானுமதி திறம்பட தன் திறமையைக் காண்பித்தார். சிவாஜிக்கு ஈடு கொடுத்து பாத்திரத்திற்கு உயிர் ஊட்டினார். அம்பிகாபதி படத்தை ஏ.எல்.எஸ் புரடக்ஷன்ஸ் தயாரித்தது. கதை வசனம் எழுத ஒப்புக் கொண்ட பாரதிதாசன் சில காட்சிகளுக்கு வசனம் எழுதினார். ஆனால் படத் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் படத்திலிருந்து விலகினார்.

அவர் எழுதிய

“கண்ட கனவும் இன்று பலித்ததே என்
காதல் தெய்வம் கைக்கு வந்ததே”
என்ற பாடலில் சில வார்த்தைகளை இசைக்காக மாற்ற விரும்பினார் இசையமைப்பாளார் ஜி.ராமநாதன்.
இதற்காக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியத்தை அணுகி அவரைக் கேட்ட போது அவர் திடுக்கிட்டு மறுத்து விட்டார். என்ற போதிலும் அவருக்கு அருமையான பாடல் ஒன்றை எழுத வாய்ப்புத் தரப்பட்டது;

மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு
மாநிலம் கொண்டாடுதே!
பேசவும் அரிதான
ப்ரேமையின் திறன் கண்டு
பேதங்கள் பறந்தோடுதே

இந்தப் பாடலுக்காக மூன்று மெட்டுக்களை அமைத்து புதிய சாதனையைப் புரிந்தார் ஜி.ராமநாதன்.பாடலைப் பாடிய பானுமதி குரலிலும் ஜொலித்தார். மதிப்பிலும் ஜொலித்தார். அவருடன் பாடலை இணைந்து பாடிய டி.எம்.எஸ் அம்பிகாபதி பாடல் பதிவின் போது தேனாம்பேட்டை ரேவதி ஸ்டுடியோவில் நடந்த இரு நிகழ்ச்சிகளை நினைவு கூர்கிறார்.

ஒன்று : பெரிய இரும்பிலான ஒலி பெருக்கி மேலே இருந்து அறுந்து விழுந்து அவர் தலையில் விழ இருந்தது. தலையை அசைத்து ரசித்துப் பாடியதால் ஒலிபெருக்கி சற்றுத் தள்ளி விழுந்து அவரைப் பிழைக்க வைத்தது.

இன்னொன்று : பதிமூன்று தடவை தன் பாடல் பதிவின் போது தவறு செய்து விட்டார் பானுமதி.ஜி.ராமநாதனோ விடாமல் மீண்டும் மீண்டும் பாடலைப் பதிவு செய்தவாறு இருந்தார். பதினான்காவது முறை பாடும் போது டி.எம்.எஸ் தவறு செய்து விட்டார். பானுமதி கோபத்துடன் எழுந்து சென்று விட்டார். “இவர் சரியாகப் பாட மாட்டேன் என்கிறார்; பாடல் பதிவை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம்” என்று பானுமதி கூறியது டி.எம்.சௌந்தரராஜனை வெகுவாகப் பாதித்தது. 13 தடவை தவறு செய்தவர் ஒரு முறை தான் தவறு இழைத்ததை பெரிது பண்ணி விட்டாரே என்று வருந்தினார்.

பரணி புரடக்க்ஷன்ஸ் சார்பில் ‘மணமகன் தேவை’ படப்பிடிப்பிற்காக செட்டில் காத்திருக்கிறார் மாபெரும் நடிகர் சிவாஜி. பானுமதி அம்மா இன்னும் வரவில்லை!

ராமகிருஷ்ணாவிடம் சிவாஜி கேலியாகக் கூறினார். “அம்மாவிற்கு பேதமே கிடையாது தன் புரடக்ஷன்; அயலார் புரடக்ஷன் என்று. இரண்டிற்கும் லேட்தான்”. ராமகிருஷ்ணாவும் சிரித்தார்!

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கூட மிகவும் மதிப்பு வைத்திருந்த பானுமதி, அந்த மதிப்பை சாதாரணமாகப் பெறவில்லை. கடுமையான உழைப்பு, அபாரமான திறமை ஆகியவற்றால் மட்டுமே பெற்றார்!

நூற்றுக்கும் மேற்பட்ட அவரது பாடல்களை இன்றும் என்றும் கேட்கலாம்; ரசிக்கலாம்!

(தொடரும்)

About The Author