கண்களை மூடியபடி தவத்தில் ஆழ்ந்திருந்தார் துளு நாட்டைச் சேர்ந்த திவாகர் என்ற முனிவர். சாதாரணமாக தவம் என்றாலே ஏதாவது வரத்தை எண்ணித்தான் இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த முனிவரோ எம்பெருமான் மஹாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று தவம் இருந்தார். மிகுந்த நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் தவத்தில் ஈடுபட்டார்.
பரந்தாமன் பக்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவனாயிற்றே! ஒரு குழந்தை ரூபத்தில் ஓடி வந்தார். ‘ஜல்ஜல் ‘என்ற சலங்கை ஒலி கேட்டது. திவாகர் கண்களைத் திறக்கவில்லை. தன் தவத்தைக் கலைக்க ஏதாவது ஒரு சூழ்ச்சியோ என்று நினைத்தார். திரும்பவும் ’ஜல் ஜல்’ என சலங்கையின் சத்தம். ஆனால் அந்தச் சத்தம் ஒரு குழந்தை தன் பிஞ்சு பாதங்களை ஊன்றி மெல்ல நடந்து வருவது போல் இருந்தது. பின் அழகான நடனம் ஆடும் சத்தமும் கேட்க, கண்களைத் திறந்தார்.
அழகான பால் வடியும் முகம், கமலக் கண்கள், பிஞ்சுப் பாதங்கள், உதட்டில் புன்னகை, சுருள் முடி என அந்தக் குழந்தை ஜொலிக்க, அப்படியே அக்குழந்தையை தன்னை மறந்து அணைத்துக் கொண்டார். “உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என்னுடனேயே இருந்து விடேன்” என்று ஆசையாய்க் கேட்டார். குழந்தையும், "நான் உன் கூட இருக்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை. நீ என்னை ஒருபோதும் கோபித்துக் கொள்ளக் கூடாது” என்றது. முனிவரும், “நிச்சயம் கோபிக்க மாட்டேன்” என்று உறுதி கூறி குழந்தையை ஆசை தீர அணைத்துக் கொண்டார். வந்தது எம்பெருமானே என்று அவர் உணரவில்லை.
அந்தக் குழந்தையும் ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்தது போல் குறும்பும் சேஷ்டையும் கொண்டு திவாகரிடம் வளர்ந்தான். எதற்கும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஒருநாள் முனிவர் கண்களை மூடியபடி பூஜையில் இருந்தார். அப்போது அந்த பாலகன் பூஜை அறையில் இருந்த சாளகிராமம் கல்லை எடுத்து தன் வாயில் போட்டுக் கடித்தான். அக்காட்சியைக் கண்ணுற்ற முனிவர், கோபமாய் அச்சிறுவனைப் பிடித்திழுத்தார். "என்ன காரியம் செய்தாய் நீ? சாளக்கிராமம் மஹாவிஷ்ணுவாயிற்றே! பூஜைக்கென்று வைத்திருப்பதை வாயில் போட்டுக் கடிக்கிறாயே” என்று கூறியபடி அடிக்க கையை ஓங்கினார். குழந்தைக்குக் கொடுத்த நிபந்தனையை தன் கோபத்தினால் மறந்தார்.
எம்பெருமானான அந்தச் சிறுவன் அவரிடமிருந்து நழுவி ஓடத் தொடங்கினான். அவரும் துரத்தினார். ஆனால் அந்தக் குழந்தையின் ஓட்டத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்தச் சிறுவன் ஓடும்போது வழியில் இருந்த ஒரு இலுப்ப மரத்தின் பொந்தில் நுழைந்தான். நுழைந்த மாத்திரத்தில் அந்த மரம் அப்படியே தடால் என்று சாய்ந்தது.
திவாகர் முனிவர் இதைக் கண்டு பிரமித்து நின்றார். கைகளைக் கூப்பியபடியே “ஓம் நமோ நாராயணாய!" என்று உச்சரிக்க அந்த இடத்தில் சயனக் கோலத்தில் பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து எழுந்தருளினார் மஹாவிஷ்ணு. அவர் அதைப் பார்க்கப் பார்க்க அந்த உருவமும் நீண்டு வளர்ந்தது. சிரம் திருவல்லத்தில், பாதம் திருப்பாப்புரத்தில், நாபி திருவனந்தபுரத்தில் என்று பரவி இருந்தது.
"பரந்தாமனே! இந்தப் பக்தன் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இத்தனை அருமையான காட்சியைப் பார்க்க எனக்கு அருள் செய்து விட்டீர்கள். நான் இதற்கு எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்! நான் கண்டு களிக்கும் இந்தக் காட்சியை எல்லா பக்தர்களும் காண வேண்டாமா? நீங்கள் அவர்களுக்காக உடலைச் சுருக்கி எளிய வடிவமாக காட்சி தர வேண்டும்" என்று கூறித் தன் கண்களை மூடியபடி தியானித்தார்.
அந்த நாராயணனும் இதற்கு இணங்கித் தன் அனந்தபத்மநாபனின் உருவத்தைச் சின்னதாக ஆக்கிக் கொண்டார். ஆனாலும் அந்த உருவம் மூன்று வாயில்களில் பரந்து இருக்கிறது. இவரே திருவனந்தபுரத்தில் அருள் புரியும் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி.
பக்தர்கள் இவரைத் தரிசிக்க மூன்று வாயில்கள் போக வேண்டும். முதல் வாயிலில் திருமுடி, இரண்டாவது வாயிலில் நாபியுடன் கூடிய வயிற்றுப்பக்கம், மூன்றாவது வாயிலில் தொடையிலிருந்து பாதம் என்று தரிசித்தால்தான் முழுமையாக அனந்தசயனத்தைப் பார்த்து அனுபவிக்க முடியும்.
இந்தக் கோயிலில் அரசரும் ஒன்றுதான், ஆண்டியும் ஒன்றுதான். உள்ளே செல்ல ஆண்கள் வெறும் முண்டு உடுத்தியபடிதான் செல்ல வேண்டும். மேலே துணி அணியக்கூடாது. திவாகர் முனி ஒரு துளுவ பிராமணர் என்பதால் அவரது வம்சத்தினரே பூஜையும் செய்கின்றனர். பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும், அத்தனை அழகு!
இந்தக் கோயிலில் நைவேத்தியம் ஒரு தங்கச் சிரட்டையில் மாங்காய் வைத்து செய்யப்படுகிறது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முதன்முதலில் இவரைக் கண்ட பிலவ மங்கள ஸ்வாமிகள் அவரைப் பூஜை செய்து பிரசாதம் என்ன வைக்கலாம் என்று யோசித்து, பின் தேங்காய் சிரட்டையில் ஒரு மாங்காய் பறித்து வைத்தாராம். அதிலிருந்து நைவேத்தியம் அப்படியே கடைப்பிடிக்கப் படுகிறது.
கேரள மன்னர்கள் யாவருக்கும் இந்தப் பத்மநாப ஸ்வாமிதான் குலதெய்வம் போல இருந்தார். கேரள மன்னர் ராஜமார்த்தாண்ட வர்மா இந்தக் கோயிலைப் புதுப்பித்தார். ஸ்ரீபத்மநாப ஸ்வாமியின் திருவுருவத்தை 12000 சாளகிராமக் கற்களால் உருவாக்கி, அத்தனை கற்களையும் தங்கத்தினால் இழைத்தார். நடுவில் அன்னியர்களின் தாக்குதல் நடந்து இந்தச் சிலைக்கு ஏதாவது பங்கம் நிகழுமோ என நினைத்து அதைக் கருப்பு மண்ணால் மெழுகி மறைத்து விட்டார்களாம்.
பின் பல வருடங்களுக்குப் பிறகுதான் அது தங்கத்தில் இழைக்கப்பெற்றது என்று தெரிய வந்தது. சிலையின் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த மண் உடைந்து கீழே விழ, அந்தப் பாகம் தங்கம் போல் பளபளவென்று பிரகாசிக்க, பின்தான் இதைப் பற்றி தெரிய வந்தது.
இங்கிருந்த அரசர்கள் தங்களைப் பத்மநாபதாசனாகவே கருதினார்கள். துலாஸ்னான திருவிழாவின் போது இங்கு மன்னர் வாளேந்தி காவலன் போல் கடற்கரை வரை பெருமாளுடன் ஊர்வலமாக செல்வார். இதை "ஆராட்டு விழா" என்கின்றனர். (இதை நினைக்கும்போது ஒரிஸ்ஸாவின் ஞாபகமும் வருகிறது. அங்கும் பூரி ஜகன்னாதரின் தேர்த் திருவிழாவின் போது அரச வம்சத்தைச் சேர்ந்த மூத்தவர் துடைப்பம் பிடித்து தேரைச் சுற்றிலும் கூட்டி சுத்தம் செய்வார்.)
ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு பெரிய திருவிழா வருகிறது. இந்த விழா 56 நாட்கள் நீடிக்கிறது. கார்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் சங்கராந்திக்கு முடிவு பெறும். அன்று லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன. கோயிலே ஜெகஜோதியாகப் பிரகாசிக்கும். அகல் விளக்குகள் கோயில் உச்சியிலிருந்து கீழ்த்தளம் வரை சுடர் விட்டு எரியும் அழகை விளக்க வார்த்தையில்லை. கோயிலின் பெருமான் ஸ்ரீஅனந்த பத்மநாபன், தாயார் பெயர் ஸ்ரீஹரிலட்சுமி. கோயிலின் புண்ய தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம். இங்கு நம்மாழ்வார் வந்து மங்களாசாசனம் செய்வித்திருக்கிறார். ஐப்பசியிலும் பங்குனியிலும் திருவிழாக்கள் நடக்கின்றன. ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. ஆலயத்தில் கிருஷ்ணர் சன்னதி, ராமர் சன்னதி, ஸ்ரீசாஸ்தா, கணேசர், சிவன், நரசிம்மர் போன்ற கடவுள்களின் சன்னதிகளும் உண்டு. கோயில் முன் சில படிகள் ஏறவேண்டும்.
திருவனந்தபுரத்தில் மிகவும் எளிதாக இந்தக் கோயிலுக்கு செல்ல முடிகிறது. சங்கீதக் கலைஞர் மகராஜா ஸ்ரீஸ்வாதித் திருநாள் அவர்களின் பாடல்களில் “பதுமநாப, பங்கஜ நாப" என்று ஏதாவது ஒரு இடத்திலாவது அமைந்திருக்கும். உதாரணமாக, வசந்தா ராகத்தில் அமைந்த “பரமபுருஷ ஜகதீஸ்வர ஜயஜய, பங்கஜ நாப முராரே” மற்றும்“பாஹிஜகஜ்ஜனனி பாஹிமாம்” என்ற ஹம்சானந்தி பாடல்.
அனந்த சயனப் பெருமாளைத் தரிசித்து அருள் பெறுவோம்.
சிறு வயதில் பல முறை இக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் இவ்விவரங்கள் அறிந்ததில்லை. நன்றி