பேட்டி கண்டவர்: சுவாமிநாதன் (கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை)
கேள்வி : சித்தரே! ‘உன்னையே நீ அறிவாய்’ என்று உபநிஷத்துகளும் சாக்ரடீஸ் போன்ற தத்துவ ஞானிகளும் கூறுகின்றனரே?
பதில் : "தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்"
"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்"
கேள்வி : நன்றாகச் சொன்னீர்கள். யார் நமக்குப் பகைவன்?
பதில் : "தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்"
கேள்வி : ஐயா! புரிகிறது, புரிகிறது. நமக்கு நாமே பகைவன். ஆவதும் நம்மாலே, அழிவதும் நம்மாலே. தாங்கள் வணங்கும் தெய்வம்?
பதில் : "சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை"
கேள்வி : அன்பே கடவுள் இல்லையா?
பதில் : "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே"
கேள்வி : கடவுளை எதற்காக வழிபட வேண்டும்?
பதில் : "சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே"
"செம்பு பொன்னாகும் சிவாய நம என்னில்"
கேள்வி : அது சரி. ஒவ்வொருவரும் தங்கள் கடவுள்தான் பெரியவர் என்பர் இல்லையா?
பதில் : "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே"
கேள்வி : கடவுளை வழிபட குரு தேவையா? இடைத்தரகர் எதற்காக?
பதில் : "கருடன் உருவம் கருதும் அளவில்
பரு விடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே"
கேள்வி : அற்புதம், அற்புதம்! கருடனை நினைத்த அளவில் பாம்புவிடம் இறங்குவது போல குருவின் நினைவே அருளைத் தரும். உங்கள் பணி என்னவோ?
பதில் : "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"
கேள்வி : என்ன உயரிய சிந்தனை! இதற்காக 3000 பாடலா?
பதில் : "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே."
கேள்வி : வள்ளுவப் பெருமான் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்று சொல்கிறாரே?
பதில் : "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆகுமே"
கேள்வி : ‘கல்லைக் கண்டால் நாயைக் காணும், நாயைக் கண்டால் கல்லைக் காணும்’ என்னும் பழமொழியில் பெரும் தத்துவம் இருக்கிறதாமே?
பதில் : "மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைத்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைத்தது பார்முதல் பூதம்"
(தேவன்மீர், நன்றி. பெரிய தத்துவத்தை யானை பொம்மைக் கதையிலேயே விளக்கிவிட்டீர்களே! யானையின் அழகைப் பார்க்கையில் மரம் என்ற நினைப்பே இல்லை, மரம் என்று நினைத்தால் யானை தெரிவதில்லை. பஞ்சபூத படைப்புகளைப்
பார்க்கையில் இறைவன் மறைந்து விடுகிறான். இறைவனைப் பார்க்கையில் பஞ்ச பூதங்களும் இச்சைகளும் மறைந்து விடுகின்றன. நன்றி ஐயா, நன்றி.)
கேள்வி : தமிழில் இவ்வளவு இருக்கையில் வடமொழி மந்திரங்கள் அவசியமா?
பதில்: "வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத்தகும் அறம் எலாம் உள"
"தமிழ்ச்சொல் வடசொல் என்னும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"
கேள்வி : கடைசியாக ஒரு கேள்வி. கோவிலுக்குப் போய்தான் சாமி கும்பிட வேண்டுமா?
பதில்: "உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்"
நன்றி! நன்றி! நன்றி!
“
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமதயானை
மரத்தை மறைத்தது மாமதயானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
மறைத்தது- மறைந்தது என்பதுதான் தத்துவார்த்தமான பொருள்தரும் இடம்