மாஜிஸ்ட்ரேட் வளர்மதியின் தீர்ப்பு சுருக்கெழுத்தாக உருவம் பெற்றுக் கொண்டிருந்தது. கோபாலன் குற்றவாளிதான். வளர்மதியின் கண்கள் சிவந்தன. பத்தாண்டுகளுக்கு முன் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்து கேலியும் குறும்பும் செய்த கோபாலனை வளர்மதியால் மறக்க முடியுமா என்ன?
"அம்மா அப்பா சொல்லைத் தட்ட முடியலே. என்னை மறந்திடு"
இறுதியாக அவன் கூறிய வார்த்தைகள் ஈட்டியாகப் பாய்ந்து ஏற்படுத்திய தழும்பு இதயத்துள் இருக்கத்தான் செய்கிறது.
கல்லூரிப் படிப்பை முடித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி மாஜிஸ்ட்ரேட் பதவி கிடைத்து அந்த நீதி நாற்காலியில் அமர்ந்து எவ்வளவோ வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியாயிற்று. ஒரு வேகம். ஒரு வைராக்கியம். இப்போது அவள் ஓர் இனிய இல்லத்தரசி. ஒரு குழந்தைக்கு அன்னை.
வளர்மதி தன்முன் அப்படியொரு வழக்கு விசாரணைக்கு வரும் என்று கனவு கூடக் கண்டதில்லை. அதே கோபாலன்!
போலீஸ் தரப்புப்படி பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் கோபாலன் கையை ஓங்க, அவரது கன்னம் பழுத்து வாயில் இரத்தம் கசிந்துவிட்டது.
"உன்னை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன்" என்று பக்கத்து வீட்டுக்காரர் சவால் விட்டுவிட்டார். காயம் என்னவோ சொற்பக் காயம்தான். குற்றம் நிரூபணமானால் ஓராண்டு சிறைவாசம்! இ.பி.கோ. 323 அப்படித்தான் சொல்கிறது.
கோபாலனுக்காக ஆஜரான வக்கீலின் வாதத்தின்படி தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கோபாலனின் மனைவியைப் பக்கத்து வீட்டுக்காரர் திட்டிவிட்டாராம். கோபாலன் கோபத்துடன் அடிக்கக் கையை ஓங்கியபோது பக்கத்து வீட்டுக்காரர் ஒதுங்கி ஓட, ஓர் அரசியல் கட்சிக் கொடிக் கம்பத்தில் முகம் உராய்ந்து இரத்தம் வந்துவிட்டதாம். எனவே கோபாலன் அடிக்கவே இல்லை. காயத்துக்கும் கோபாலன் பொறுப்பல்ல. கோபாலனை விடுதலை செய்யவேண்டும்.
வழக்கு முடியும்வரை வளர்மதியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. எப்படியும் ஒரு மாதமாவது உள்ளே தள்ளிவிட வேண்டியதுதான். உறுமியது பழி வாங்கும் பெண் மனது.
"…….எனவே சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிதான் என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது…"
"அம்மா டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் ஐயா திடீர்னு வந்திருக்கார்" டவாலி சேவகன் பதற்றத்துடன் சொன்னதும் வளர்மதி அவசரமாக அவரைக் காணப் புறப்பட்டாள்.
சற்று நேரம் கழித்துத் திரும்பினாள் வளர்மதி. "டிக்டேஷனை எங்கேவிட்டேன்?"
"…..எனவே சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர்தான் என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது…." இது ஸ்டெனோவின் பதில்!
"அப்படியா சொன்னேன்?" வளர்மதி ஆச்சரியமடைந்தாள்.
"அப்படித்தான் என் காதில் விழுந்தது மேடம்" ஸ்டெனோ பயத்துடன் பதில் சொன்னாள்.
ஒருகணம் யோசித்தாள் வளர்மதி. "சரி சரி அப்படியே இருக்கட்டும்". வளர்மதியின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.
ஒரு தீர்ப்பு திருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. நீதியின் செங்கோல் நிமிர்ந்து நின்றது!
good. i like it.
பென்னின் மனதை புரிந்தவர்.ராஜா.வெங்கடெஷ்
proper justification, great moral
புன்னகைக்க வைத்தது – கருன்
A judge is also a human.In this story,human considerations were pushed aside in favour of humanitarian considerations.Caste,creed,faith,money or personal vendetta should never come in the way of pronouncing judgement.Very good.Gopinath.Sheffield.UK
தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட வாணி, கருண், ராஜா.வெங்கடேஷ், முருகேஷ்குமார், கோபி நாத் மற்றும் வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!