திருக்குறள் உலகப் பொதுமறையா? – சில சொல்லாடல்கள் (2)

திருக்குறளும் இன்றைய வாழ்வியலும்

சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல், தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள் திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக, மனித மனத்தில் ‘குற்றம்’ பற்றிய சிந்தனையை உருவாக்கி, ஏற்கெனவே நம்பியது சரியல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்போது, காலந்தோறும் புதிது புதியதான அறக்கருத்துகள் உருவாக்கப்படுவதற்கான அடித்தளம் வடிவமைக்கப்படுகிறது. இந்நிலையில் தனிமனித அறம், சமூக அறம் ஆகியவை புனிதமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனித அறங்களைக் கட்டுடைத்தால், அவற்றினுள் அதிகாரத்தின் குரல் நுட்பமாகப் பொதிந்திருப்பதனை அவதானிக்க முடியும். எனவே எந்தவொரு அறநூலும் புனிதமானது இல்லை; சார்பின்றி எழுதப்படுவதும் இல்லை. இந்நிலையில் திருக்குறள் அறிவுறுத்தும் அறக்கருத்துகள் இன்றைய தமிழர் வாழ்க்கையுடன் எங்ஙனம் ஒத்துப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி.

திருக்குறள் குறிப்பிடும் பல அறக்கருத்துகள் இன்றைய மனிதனைச் செம்மைப்படுத்த உதவுகின்றன; அதேவேளையில் சில அறக் கருத்துகள் பொருத்தமற்று உள்ளன. திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்தமானவையாக இல்லை என்பது அந்நூலுக்கு இழுக்கு அன்று; அதுதான் யதார்த்தம்! கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களே தங்களுடைய நிலைப்பாட்டினைக் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும்போது, அறநூல்களின் கருத்துகளில் முரண்பாடுகளும் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. எடுத்துக்காட்டாக, ‘உலகம் தட்டையானது; கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன’ என்ற விவிலியக் கருத்து இன்று கிறிஸ்துவர்களால் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் சிலர், ‘திருக்குறளின் அறக் கருத்துகள் மாற்றப்பட முடியாதவை; தேவ வாக்கியம்’ என்று கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இப்போக்கு ஏற்புடையதல்ல.

ஜைன சமயச் சார்புடைய திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள் பின்பற்றவேண்டிய ஒழுங்குகளை அறங்களாக 1330 குறள்களில் பதிவாக்கியுள்ளார். அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவிவழிக் கதைகள், அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன. ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப் புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும் வணங்குதலும் நடந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத் திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒரு வகையில் திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை ‘வேத நூல்’ என்று வழிபாட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத் தடுத்துவிடும். ‘நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்’ என்ற நோக்கில் அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி மனிதரால் பின்பற்ற முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

திருக்குறள் வாழ்வில் விழுமியங்களையும் மேன்மைகளை முன்னிறுத்தி முக்கியமான அறக்கருத்துக்களைக் கடந்த 1700 ஆண்டுகளாகத் தமிழர்களுக்குப் போதித்து வருகிறது; ஓரளவு படித்த தமிழரின் கருத்தியல் போக்கிலும் ஊடுருவியுள்ளது. ஆனால் இன்று பெரும்பான்மைத் தமிழர்கள் பண்பாட்டு ரீதியில் மோசமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். மேனாமினுக்கி திரைப்பட நடிகர்களையும், போலியான அரசியல்வாதிகளையும், ஊழல் பேர்வழிகளையும் தொடர்ந்து தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரின் வன்முறை காரணமாகத் தீண்டாமை நிலவுகிறது. பால் சமத்துவமற்ற நிலை காரணமாகப் பெண்ணைப் போகப் பொருளாகப் பாவித்தலும், வன்முறை செலுத்துதலும் தொடர்கின்றன. இத்தகு சூழலில் திருக்குறள் போதிக்கும் அறக்கருத்துகள் தமிழர்களின் மனத்தையும் வாழ்க்கையையும் ஏன் நெறிப்படுத்தவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

நடைமுறைக்கு ஒவ்வாத ‘புலால் மறுத்தல்’

திருவள்ளுவர் ‘புலால் மறுத்தல்’ அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன் படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது. இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக் கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

சங்க காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத் தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத் தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது. நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் ‘புலையர்’ என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் ‘புண்’ என்றும் இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத் தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் ‘புலையர்’ என்று திட்டுவது பொருத்தமன்று.

‘புலால் மறுத்தல்’ அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப் பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத் தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக் கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே ‘இறைச்சி உண்ணக்கூடாது’ என்று அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும் விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள் பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை நாடுகளில் ’மது கூடாது’ என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக் குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன் முரண்படுகிறது.

புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும் திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா என்பது முக்கியமான கேள்வி. இந்நிலையில், நவீன வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற குறள்களை நீக்கிவிட்டு உலகத்து மக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு திருக்குறளின் சில குறள்களை நீக்குதல் என்பது திருவள்ளுவருக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.

(தொடரும்)

About The Author

5 Comments

  1. meenal devaraajan

    திருவள்ளுவர் தமிழ் நாட்டில் பிறந்தவர், அவர் தம்மிழில் தான் திருக்குறள் எழுதினார். உணவு வானிலைக்கூ ஏற்றாற்போல் உண்ண வேண்டும். கடுங்குளிர் உள்ள இடத்தில் கொழுப்பு வேண்டும். திமிங்கிலங்களில் உடலில் கொழுப்புப் அப்படிந்திருப்பதால் தன் அது நீரில் வாழ முடிகிறது. புலால உண்பது அவர் காலத்தில் இருந்திருப்பதால் அவர் அது தீயது பயக்கும் என்று கூறியுள்ளார்.அன்பு உள்ளம் தேவை என்பதால் கூறியிருக்கலாம். முதலில் மிருகத்தை வெட்டுபவன் மனிதனை வெட்டுவதற்கு அதிக நாளாகது. இப்போஒது உலகில் பயங்கர வாதம் தலை விரித்தாடக் காரணம் மனிதர் மனதி ஈரமில்ல நெஞ்சமே எதற்கெடுத்தாலும் குத்து வெட்டு என்ற நில ஏன் வந்தது? உயிரை அழிப்பது பாவமில்ல்லை என்ற எண்ணத்தில்த்தான் எனவே புல்லன் என்று கூறுவதில் தவறு இல்லை

  2. GP alagan

    இன்றைய ஐரோப்பிய, அமெரிக்க மருதுவர்கள் கூட புலால் தவிர்க்கும்படி அறிவுருத்துகின்றனர். மது எப்போதும் எந்த நாட்டவர்க்கும் கேடுதான்

  3. loganathan

    பொதுவானக்கருத்துக்கள் வாழ்க்கையினை நெறிப்படுத்துவ்தற்க்குதான் அனைத்து நெறிகளும் கடைபிடிக்கப்ப்டுவ்தில்லை அதனால் அது பொட்துமறை அல்ல என்பது ஏற்க இயல வாதம்.

  4. Dr.M.Valliammai

    உடம்பைத் தின்று உடம்பை வளர்த்தல் அறமன்று என்பது வள்ளுவம். உலக நாடுகள் அனைத்திலும் வாழும் எல்லா மனிதர் களுக்கும் இது ஏற்புடையதே.இவை மனிதன் நல்லவனாக வாழ வழி காட்டுவன. அதற்காக அது பொது மறை இல்லை என்று ஆகாது. வள்ளுவம் எக்காலத்திற்கும் பொதுமறைதான்

  5. சுரேஷ்

    கடவுள் வாழ்த்தையும் சேர்க்க வேண்டும்.

Comments are closed.