திருக்குறள் உணர்த்தும் உரிமைகள்!

முன்னுரை

நாளும் பலமுறை, பல ஊடகங்களின் வழி பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நீதி அரசர்களால் விளக்கம் தரப்பட்டு, சமுதாயத்தை நெறிப்படுத்த, முறைப்படுத்த முயன்று வெற்றியும், தோல்வியும் மாறி மாறி காணும் ஒரு சொற்றொடர்: "மனித உரிமைகள்", "மனித உரிமை மீறல்", "மனித உரிமை காக்கும் அமைப்புக்கள்"! இன்றைய மனிதனை, மனிதனாக வாழ உதவும், வாழ விரும்பச் செய்யும், வாழ வழி வகுக்கும் கருத்துக்கள், வழிமுறைகள், சொற்றொடர்கள், சொல், செயல் முறை விளக்கங்கள்.. இப்படி பலப் பல!

‘மனித உரிமை’ என்பது இன்றையச் சூழலில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அந்தந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் – இவற்றைப் பொறுத்து ‘மனித உரிமைச் சட்டமும்’, அதைப் பயன்படுத்தும் முறையும், விளக்கங்களும் மாறுபடுகின்றன என்பது நமது அனுபவம்! நேர் உணர்வு!

‘மனித உரிமை’ என்ற சொல்லுக்கு பாகிஸ்தானில் ஒரு விளக்கம், அமெரிக்காவில் ஒரு விளக்கம், சீனாவில் ஒரு விளக்கம், ஜப்பானில் ஒரு விளக்கம், பாரத நாட்டில் மற்றொரு விளக்கம்!

ஐக்கிய நாட்டு நிறுவனம் (United Nations Organization) உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ‘மனித உரிமை சாஸனத்தை’ உருவாக்கி உள்ளது. ஒரு பிரகடனத்தையும் 1948-ம் ஆண்டே செய்துள்ளது "Declaration of Human Rights" என்ற பெயரில்! இருப்பினும் அவற்றை அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கண்கூடு.

"திருக்குறள்" உலகப் பொதுமறை என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் வாழ்வியல் சட்டப் புத்தகம்! – ஓர் சட்ட இலக்கியம்! மனித வாழ்விற்கு அப்பாற்பட்டதல்ல இலக்கியம். மனிதனின் சிந்தனைகள், செயற்பாடுகள், அவனது உணர்வுகள் ஆகியவற்றை நுணுக்கமாக ஆராய்ந்து எடுத்து உரைப்பதே ஓர் இலக்கியம்.

அவன் செல்ல வேண்டிய தூய வழிதனையும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளையும், முறைகளையும் எடுத்துரைப்பதும் இலக்கியத்தின் நோக்கம். எத்தனையோ அறவழிகாட்டும் இலக்கியங்களும், நூல்களும் இருப்பினும் அவற்றுள் முதலிடம் வகிப்பது "திருக்குறளே" என உறுதியாகக் கூறலாம்.

திருக்குறள் உணர்த்தும் மனித உரிமைகளை உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டு, செயல் வடிவம் கொடுத்து, காத்து வந்தால் இந்த வையகம் வானகமாக மாற உறுதியாக வாய்ப்புண்டு.

இனம், மொழி, மதம், நாடு என்ற எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்வியல் நெறிகளை அளிப்பது அல்லவா புனிதத் திருக்குறள்! முடியாட்சிக்குக் கூறப்பட்ட அறக்கருத்துக்கள் குடியாட்சிக்கும் பொருத்தமாயுள்ளது திருவள்ளுவத்தின் சிறப்பு. அவர் கூறிய அறங்களில் பல மனித உரிமைச் சிந்தனைகளாகப் பரிமளிக்கின்றன!

10-12–1948 அன்று ஐக்கிய நாட்டுச் சபை உலக மனித உரிமைப் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) உருவாக்கி, ஏற்றுக் கொண்டது. இந்த அனைத்து நாட்டு மனித உரிமைப் பிரகடனத்தின்படி மனித உரிமை எனப்படுவது ‘ஒருவன் மனிதனாக இருப்பதனாலேயே அவனுக்குள்ள இயற்கையான உரிமைகள் மனித உரிமைகள்’ ஆகும். (Human rights are the rights one has simply because one is a human being) எல்லா மனிதர்களுக்கும் அவ்வுரிமைகள் பொதுவானவை.

மனித உரிமைகள் என்பதை "Human Rights" என்பர்.

"Human rights are the basic rights and freedom entitled to any person, regardless of economic status, nationality, jurisdiction, age, ability, ethnicity, sex and sexuality. These basic rights are the rights to life, freedom, equality, justice and freedom of thought and expression".

அதாவது மனித உரிமை என்பது அடிப்படை உரிமையும், சுதந்திரமும் ஆகும். பொருளாதார நிலை, நாடு, எல்லைகள், வயது, திறமை, இனம், பால் ஆகியவற்றைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் உரியதே மனித உரிமை. வாழ்வுரிமை(right to life), சுதந்திரம்(freedom), சமத்துவம்(equality), நீதி(justice), சிந்தனைச் சுதந்திரம்(freedom of thought), எழுத்து / பேச்சு சுதந்திரம்(freedom of expression) இவை அடிப்படை உரிமைகளில் அடங்கும்.

மனித உரிமைகள் இரு வகைப்படும்:

1 குடி / அரசியல் உரிமைகள் (civil and political rights).

(அ) வாழ்வுரிமை (Right to life)
(ஆ) நாட்டின் உரிமை (Right to nationality)
(இ) சட்டத்தின் முன் சமமான தன்மை (Equality before law)
(ஈ) சிந்தனை உரிமை (Freedom of thought)
(உ) எழுத்து / பேச்சு உரிமை (Freedom of expression)
(ஊ) பாதுகாப்பு உரிமை

2 சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் (Economic, social, and cultural
rights)

(அ) உணவு உரிமை (Right to food)
(ஆ) உரையுள் உரிமை (Right to shelter)
(இ) வாழ்க்கைத் தகுதி (Standard of living right)
(ஈ) வேலைக்கு உரிமை (Right to work)
(உ) கல்வி உரிமை (Right to education)
(ஊ) கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பு (Right of
participation in cultural activities)
(எ) தனிச் சொத்து உரிமை (Right to personal property) போன்றன.

அரசோ பிறரோ அடுத்தவருடைய மனித உரிமைகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும், உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமையாகும்.

சுருங்கக் கூறின், பால், இன வேறுபாடின்றி உலகின் அனைத்து ஆண், பெண்களுக்குள்ள உரிமைகள் மனித உரிமைகள் ஆகும். ஒருவரது பிறப்பு, நாடு, சாதி, சமயம், சொத்து, நிறம் ஆகிய எதனாலும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை மனித உரிமைகள் ஆகும்.

(தொடரும்)”

About The Author

2 Comments

  1. இரா.சேகர்(ஷக்தி)

    வரவேற்கத்தக்க ஆய்வு !

Comments are closed.