திருக்குறள் உணர்த்தும் உரிமைகள்!

தன்னுரிமை

எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.

அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.

அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)

ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.

"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)

உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.

"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)

பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.

உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.

பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:

"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)

முடிவுரை

திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!

About The Author

2 Comments

Comments are closed.