இப்புவியில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முறைகளிலேயே, மனிதனின் வாழ்க்கை முறைதான் சிறந்ததாகவும், கண்ணியம் மிக்கதாகவும் விளங்குகிறது. உன்னதமான, நிம்மதியான வாழ்க்கை வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இவ்வழிகாட்டி மனிதனாக இருக்கலாம், நூலாக இருக்கலாம். சிறந்த வழிகாட்டியைப் பெற்ற மனிதன் மற்ற மனிதர்களின் வாழ்வைக் காட்டிலும் சிறந்த ஒப்பற்ற வாழ்க்கை வாழ்வதையும், கண்கூடாகக் காணலாம்.
நலமாக வாழ வழிகாட்டும் உலக மக்கள் அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட, அனைத்து மக்களும் பின்பற்றத்தக்கதாய் அமைந்துள்ள ‘பொதுநூல்’, ‘பொதுமறை நூல்’, ‘நீதிநூல்’, ‘பண்பாட்டு நூல்’, ‘பொருளியல் நூல்’ எனப் பலவாறாக புகழப்படும் திருக்குறள், 3 பால்கள், 9 இயல்கள், 133 அதிகாரங்கள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலா பத்து குறட்பாக்களையும் கொண்டு அமைந்துள்ளது.
திருக்குறளில் கூறப்படும் பல வாழ்வியல் கருத்துகளில் சிலவற்றின் தொகுப்பை நாம் இங்கே காணலாம் :
மனித குலத்தின் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நட்பைப் பற்றி கூறும்போது,
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையர் நட்பு
அறிவுடையோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறைமதி வளருவதைப் போல அன்றாடம் வளரும். ஆனால் அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்பு முழுமதி குறைவதைப்போல அன்றாடம் குறையும் தன்மை உடையது என கூறுகிறார்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
என்ற குறளில் ஒருரோடு ஒருவர் நட்பு கொள்ளுதல் என்பது, சிரித்துப் பேசி மகிழ்வது மட்டும் அல்ல; நண்பர் தகாத செயலை செய்யத் தொடங்கும்போது, முன் சென்று கண்டித்து அறிவுரை கூறுவதுதான் உண்மையான நட்பு என்கிறார்.
ஆழிவி னவைநீக்கி ஆறுஉயத்து அழிவின்கண்
அல்லல் உழைப்பதாம் நட்பு.
என்ற குறளில் நட்புக்குரிய தன்மை என்பது அழிவைத் தரக்கூடிய தீய வழிகளிலிருந்து தன் நண்பனை நீக்கி, அவனை நல்ல வழியில் நடக்கச் செய்து, துன்பம் வரும் காலத்தில் நண்பனுடன் இருந்து அத்துன்பத்தில் பங்கு கொள்வதே உண்மையான நட்பாகும்.
இவ்வாறாக, ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கும் நட்பின் பெருமையையும், உண்மையான நட்பைப் பற்றி அறிந்து கொள்ளவும். திருக்குறள் வழிகாட்டுகிறது.
ஒவ்வொருவரது குடும்பம், நட்பு மற்றும் சமூக வாழ்வில் சினம் ஏற்படுவது இயற்கைதான். இதைப் பற்றி வள்ளுவர் சொல்லும்போது,
கதம்காத்துக் கற்றடங்கள் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கோபமாகிய சினம் வராமல் நம்மை காத்துக் கொண்டு, கற்க வேண்டிய எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு, அடக்கத்தை மேற்கொள்ளும் வலிமை உடையவனை அறமானது அவனைச் சென்றடையும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்று கூறுகிறார்.
மக்களுடைய மனதில் ஆட்சி புரியவும், அரசாட்சியை நிலை நிறுத்தவும், சரித்திரத்தில் நிலையாக இடம் பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் ஒழுக்கம் அடிப்படையாக அமைந்திருந்ததை அறியலாம்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
நல்ல ஒழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது நல்ல சிறப்பான குடும்பத் தன்மையை உணர்த்துகிறது. ஒழுக்கமின்மை தாழ்ந்த குடி தன்மையை உணர்த்துவதாகும் என்கிறார் வள்ளுவர்.
ஒழுக்கம் மிகுந்தவர்களுக்கு அவர்களுடைய நல்லொழுக்கம் தவறும் சூழ்நிலை எப்போது வந்தாலும், எத்துணை இடர்கள் வந்தாலும், அவர்கள் தங்களுடைய நல்-ஒழுக்கத்திலிருந்து தளர்ந்து போக மாட்டார்கள் என்பதை
ஒழுக்கத்தின் ஓழ்கார் உரவேர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
ஒழுக்கம் தவறுவதால் தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும் குற்றம் உண்டாவதை அறிந்து மனவலிமை உடைய சான்றோர் தம் ஒழுக்கத்திலிருந்து ஒருநாளும் தளர்ந்து போகமாட்டார்கள் என்கிறார்.
ஒருவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் பிறருக்கு நன்மை அளிக்க வேண்டும் என்பதை,
நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல
பாரித்து உரைக்கும் உரை.
ஒருவன் சொல்லும் சொற்கள் தனக்கும் மற்றவர்க்கும் பயனில்லாதவை பற்றிய பேச்சாக இருந்தால், அவன் எந்த வகையிலும் பயனற்றவன் என்பதை இவ்வுலகிற்கு அவனது சொற்கள் தெரிவித்துவிடும்.
(இதன் தொடர்ச்சி அடுத்த வாரம்)