கடந்த இரு மாதங்களாக நான் கோயம்புத்தூரில் தங்கியிருந்ததில் முருகனின் அருள் நிறையவே கிடைத்தது. அதாவது, அந்த முருகன் தான் வீற்றிருக்கும் பல இடங்களைத் தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு அருளினான். அதில் ஒன்றுதான் ‘திண்டல் மலை’.
குன்றுதோறும் ஆடும் குமரனுக்குக் கொங்கு நாட்டில் பல ஆலயங்கள் உள்ளன. ஈரோடு – கோவை சாலையில் சென்றால் சுமார் எட்டு கி.மீ தொலைவில் வருகிறது திண்டல் மலை. பல்லாண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாக இருந்த இது, இன்று மிகப்பெரிய கோயிலாக வளர்ந்துள்ளது. இந்த மலையின் உயரம் சுமார் 60 மீட்டர். படிக்கட்டுகள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளதால் ஏறுவதில் அவ்வளவு சிரமம் தெரிவதில்லை. கோயிலில் அருள்பாலிப்பவர் திண்டல் வேலாயுத சாமி. அவருடைய பார்வை ஈரோட்டை நோக்கி அமைந்திருப்பதால்தான் ஈரோடு மிகச்செழிப்பாக இருக்கிறது என்று மக்கள் நடுவே ஒரு நம்பிக்கை.
இந்த இடத்தில் பல சித்தர்கள், துறவிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் தியானத்துக்குப் பயன்படுத்திய ‘தன்னாசி குகை’ இன்றும் இருக்கிறது! இந்தக் குகையினுள் நுழைந்தால் அருள்மிகு வேலாயுத சாமியின் பழைய மூலவரைத் தரிசிக்கலாம். இங்கு அன்றாட வழிபாடு கிடையாது. ஆனால், கார்த்திகை மாதம் தீபத்திருநாளன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கோயிலில் பலர் செவ்வாய், வெள்ளியன்று எலுமிச்சம் பழங்களை முருகனுக்குச் சார்த்தித் தங்கள் கோரிக்கைகளை மிக்க நம்பிக்கையுடன் மனதார வேண்டிக்கொண்டு அந்த எலுமிச்சம்பழங்களை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் எண்ணியது நடந்துவிடுகிறதாம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமாவாசை, திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டும் வழிபாடு நடந்து வந்ததாம். தற்சமயம் நாள்தோறும் மூன்றுவேளை வழிபாடு நடக்கிறது.
மலைப்பக்கமென்றாலே இயற்கை அன்னை அதி மகிழ்ச்சியுடன் வளைய வருவாள். இங்கு மேகங்கள் பல வடிவங்களில் வந்து நம்மைப் பரவசப்படுத்துகின்றன. மலையின் வடகிழக்குப் பகுதியில் இயற்கையாக ஏற்பட்ட ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனை வற்றுவதே கிடையாது! சுனைக்குச் செல்லவும் படிக்கட்டுகள் உள்ளன. தவிர, பறவைகளின் ஒலிகளும், மரங்களின் சிலிர்ப்பும், தென்றல் வந்து நம்மைத் தழுவிச் செல்லும் சுகமும் சொல்லி மாளாது. அத்தனை சுகம்! "இயற்கையென்றுன்னை உரைப்பாள்" என்று மகாகவி பாரதியார் சக்தியைப் பாடும் கவிதை இங்கு நம் நினைவுக்கு வருகிறது. குன்றில் இருக்கும் முருகன் நம் எல்லோரையும் ஆட்கொண்டுவிடுகிறான்.